கோபி சுற்று வட்டாரத்தில் உள்ள வனப்பகுதியில் கடுமையான வறட்சியால் தண்ணீர் மற்றும் உணவு தட்டுபாட்டால், குண்டேரிப்பள்ளம் அணையை நோக்கி யானைகள் வரத்து அதிகரித்துள்ளது. யானையை பார்க்க மாலை நேரத்தில் சுற்றுலா பயணிகள் அணையில் குவிய துவங்கி உள்ளனர்.
தமிழகத்தில் மிகப்பெரிய வனப்பகுதியாகவும், யானைகள் அதிகம் காணப்படும் வனப்பகுதியாகவும் சத்தி வனக்கோட்டம் உள்ளது.சத்தி வனக்கோட்டத்தில் சத்தியமங்கலம், கடம்பூர், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், பங்களாபுதூர் ஆகிய வனப்பகுதிகள் உள்ளன. வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, செந்நாய், கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் இருக்கிறது.சென்ற ஆண்டில் இருந்து சுற்று வட்டாரத்தில் அக்னி வெயில் வாட்டுவது போல் வெயிலில் தாக்கம் உள்ளது.
வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து கிடக்கிறது. மரம், செடி, கொடியில் உள்ள இலைகள் அனைத்தும் காய்ந்து, கீழே உதிர்ந்த நிலையில் உள்ளன.
பனியால், ஒரு சில செடிகளில் இலைகள் தென்படுகின்றன. வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் தண்ணீர் வற்றியுள்ளது. தண்ணீர் ஓடும் ஓடைகளில் தண்ணீர் இல்லை. வன விலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. உணவு தட்டுபாடு காரணமாக வன விலங்குகள், வனத்தையொட்டி விளை நிலங்களுக்கு வர துவங்கி உள்ளன.
கோபி சுற்று வட்டாரத்தில் உணவு தேடி வந்த நான்கு வயது மான், முள்வேலியில் சிக்கி இறந்தது. தொட்டிக்குள் தவறி விழுந்த மான் ஒன்று மீட்கப்பட்டது. தண்ணீர் இல்லாமல் வன விலங்குகள் குளம், குட்டையை நோக்கி வர துவங்கி உள்ளன. கோபி கொங்கர்பாளையம் பஞ்சாயத்து குன்றி மலை அடிவாரத்தில் குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. குன்றி, விலாங்கோம்பை, மாவநத்தம் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பெய்யும் மழை நீர் குண்டேரிப்பள்ளம் அணையில் தேக்கி வைக்கப்படுகிறது.
குண்டேரிபள்ளம் அணையின் மொத்த கொள்ளளவு, 42 அடி. மழை நீரை மட்டுமே நம்பி இவ்வணை உள்ளது.மழைக்காலங்களில் மட்டுமே அணை நிரம்பி வழியும். மழை இல்லாத காலங்களில் மட்டுமே அணை வறண்டு விடும்.குண்டேரிபள்ளம் அணையின் மூலம், 2,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெருகின்றன. பெரும்பாலும் கடலை, எள் போன்றவை அதிகளவில் பயிரிடப்படுகிறது.அணையில் இருந்து ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், 10 நாட்களுக்கு ஒரு என்ற வீதம், 50 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. சென்ற ஆண்டில் நீலம் புயலால், ஓரளவுக்கு மழை பெய்ததால், 27 அடி தண்ணீர் வசதி உள்ளது.குண்டேரிபள்ளம் அணையின் மேற்பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான யானைகள், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் உள்ளன. அணையில் உள்ள தண்ணீரை நம்பியே உள்ளன. மாலை நேரத்தில் யானை கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து செல்கின்றன. பல்வேறு பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கூட்டமாக சென்று பார்வையிட்டு செல்கின்றனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக