இடம் பெயர்ந்தோரின் குழந்தைகள் கல்வி கற்பதற்கு, அந்தந்த பகுதிகளில் பகுதி நேர பள்ளிகள் அமைக்க வேண்டும் என, வெளி மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு இடம்பெயர்ந்து வாழ்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆந்திரா, பீகார், கர்நாடகா, உத்திரபிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, இடம் பெயர்ந்து, 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில், பாதிக்கு மேற்பட்டோர், சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இடம்பெயர்ந்து வாழ்வோருக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் எந்த பாதுகாப்பு வசதியும் இங்கு இல்லை. இதுகுறித்த, கருத்தரங்கு, சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், சென்னையில் வசிக்கும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர்.
அவர்கள் கூறியதாவது: சொந்த மாநிலத்தில் வாழ முடியாமல், வேலைக்காக சென்னை வந்துள்ளோம். நாங்கள் வேலை பார்த்தாலும், எங்கள் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என, எண்ணுகிறோம். ஆனால், மொழிப் பிரச்னை பெரும் சிக்கலாக உள்ளது. அதனால், படிக்க வைக்கும் எண்ணம் இருந்தும், படிக்க வைக்க முடியவில்லை.
பெரிய கட்டடங்கள் அமைக்கும் இடங்களில், தொடர்ச்சியாக வேலை செய்வோம். ஒரு இடத்தில், கட்டுமானப் பணிகள் முடிவதற்கு ஒரு ஆண்டாகும். கிழக்கு கடற்கரை சாலையில், பல ஆயிரக்கணக்கான வெளி மாநிலத்தோர், பல்வேறு கட்டடங்களில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
எனவே, அதிக அளவில் வெளிமாநிலத்தவர் பணிபுரியும் இடங்களில், அந்தந்த மொழியில் பாடம் நடத்தும் பள்ளிகளை ஆரம்பிக்க வேண்டும். குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு, இலவச அரிசி வழங்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட அளவிலாவது விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தற்போது, இலவச அரிசியை, ஒரு கிலோ, 10 ரூபாய்க்கு வாங்கி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக