மேற்கு வங்க மாநிலம் ஜபல்பூரி மாவட்டம் காமக்யாகுரி பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார். இவரது மனைவி ஸ்வப்னா(வயது 39). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால் ஆண் குழந்தை இல்லாததை ஒரு குறையாகக் கருதி ஸ்வப்னாவை அவரது கணவன் மற்றும் அவரது உறவினர்கள் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
இந்த கொடுமையின் உச்சகட்டமாக, கடந்த டிசம்பர் மாதம் ஒரு சாமியாரை சுகுமார் அழைத்து வந்துள்ளார். பின்னர் அந்த சாமியாருடன், தன் மனைவியை கட்டாயப்படுத்தி உறவு வைக்கச் செய்துள்ளார். இவ்வாறு 3 நாட்கள் சாமியாரின் பிடியில் சிக்கிச் சீரழிந்த ஸ்வப்னா, கடந்த 17-ம் தேதி தீக்குளித்தார்.
பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரிடம் வாக்குமூலம் வாங்கக்கூட முடியவில்லை. அந்த அளவுக்கு உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில் அவர் 28-ம் தேதி இறந்தார். இறப்பதற்கு முன் அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை தன் தாயாரிடம் கூறி அழுதிருக்கிறார்.
இதுபற்றி ஸ்வப்னாவின் தாயார் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஸ்வப்னாவின் கணவர் சுகுமார், மாமனார் சுரேன், மாமியார் ஷோபா ராணி, மைத்துனி திரவுபதி ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஸ்வப்னாவின் சாவுக்கு மூல காரணமாக இருந்த சாமியார், அசாமில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக