திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி அடுத்த டி.என்.புதுக்குடியில் மனோ கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியில் சுமார் 850க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர்.
கல்லூரியில் பற்றாக்குறையாக உள்ள ஆங்கிலத்துறை மற்றும் கம்ப்யூட்டர் துறை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். கம்ப்யூட்டர் வழங்கவும், அலுவலக பணிக்கு போதிய அலுவலர்களை நியமிக்கவும், கல்லூரிக்கு நூலகம் அமைக்கவும், கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை நிறைவேற்றிதரக்கோரி பல்கலை.,க்கு புகார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பல்கலை., மவுனம் சாதிக்கிறது.
இதனையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன் மாணவ,மாணவிகள் கல்லூரி யில் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பல்கலை., எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று காலை கல்லூரியில் வகுப்புகள் துவங்கியது.
மாணவ, மாணவிகள் மீண்டும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்ஏ., துரையப்பாவை சந்தித்து முறையிட முடிவு செய்தனர். இதனால் அவரை சந்திக்க கல்லூரியில் இருந்து புறப்பட்டனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அவர் மாணவர்கள் கோரிக்கைகள் குறித்து பல்கலை., அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது.விரைவில் ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என பல்கலை தரப்பிலிருந்து எம்.எல்.ஏ.விடம் உறுதியளிக்கப்பட்டதாக தெரிகிறது.
பின்னர் அவர் மாணவர்களிடம் பல்கலைக்கழகம் கூறிய தகவலை தெரிவித்தார்.நகராட்சி தலைவர் சங்கரபாண்டியனும் மாணவர்களை நேரில் சந்தித்து பல்கலை., பதிலை தெரிவித்தார்.
பல்கலை.,யின் பதிலால் சமாதானம் அடைந்த மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் காலையில் கல்லூரி பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்தில் இன்ஸ்பெக்டர்கள் கடையநல்லூர் சபாபதி, வாசுதேவநல்லூர் சண்முகவேல் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக