Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 3 ஜனவரி, 2013

தேவையான ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்க முடியவில்லை: சென்னை ஐஐடி இயக்குநர்


மாணவர்களின் தொழில்நுட்ப திறனை வெளிக் கொண்டு வரும் வகையில், சென்னை, ஐ.ஐ.டி., ஆண்டுதோறும், "சாஸ்த்ரா" என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு, வரும் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை, இந்நிகழ்ச்சி நடக்கிறது. இதில், ஒன்பது மாநிலங்களின், 250 கல்லூரிகளைச் சேர்ந்த, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து, ஐ.ஐ.டி., இயக்குனர் பாஸ்கர ராமமூர்த்தி கூறியதாவது: மாணவர்களின் தொழிற்நுட்பதிறனை வெளிக் கொண்டு வர நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, பார்வையாளர்களாக பங்கேற்கும் மாணவர்களுக்கும் உத்வேகத்தை அளித்து, அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்கும். சென்னை ஐ.ஐ.டி., - பி.எச்டி.,க்கு, மிகுந்த முக்கியத்துவம் தருகிறது. இங்கு, பல்வேறு துறைச் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அனைத்து வசதிகளும் உள்ளன. நான்கு மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் வீதம், 1,800 மாணவர்கள், இங்கு, பி.எச்டி., படிக்கின்றனர்.

தேசிய அளவில் ஆண்டிற்கு, 10 ஆயிரம் பி.எச்டி., மாணவர்களை உருவாக்குவது இலக்காக உள்ளது. ஆனால் தற்போது, ஆண்டிற்கு, 2,000க்கும் குறைவானவர்களையே உருவாக்க முடிகிறது. 2020ம் ஆண்டிற்குள் எங்கள் இலக்கை அடைய முயல்வோம். முதல்முறையாக, இந்த ஆண்டு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான, "ஜூனியர் சாஸ்த்ரா" நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சிகளையொட்டி, மயிலாப்பூர், ஆர்.கே. சாலையில் உள்ள, சிட்டி சென்டரில், இன்று மாலை, 5:00 மணிக்கு, சென்னை ஐ.ஐ.டி., மாணவர்கள் உருவாக்கிய, "மின்னணு விமானம்" பறக்கவிடப்படுகிறது. இவ்வாறு பாஸ்கர ராமமூர்த்தி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக