Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 5 ஜனவரி, 2013

மனநல மருத்துவப் பணிக்கு ஏராளமான வாய்ப்பு!


இந்தியாவில் லட்சம் பேருக்கு, ஒரு மனநல டாக்டர் என்ற நிலையே தற்போதுள்ளது. தமிழகத்தில் முதுநிலை படிப்பிற்கான டாக்டர்கள் சேர்க்கையும் மிகக்குறைவு தான்.

உலக சுகாதார ஆய்வின் படி, வரும் 2020 ம் ஆண்டில், ஆண்களின் எண்ணிக்கையில், மனநலம் சார்ந்த நோய்க்கு 2ம் இடம் கிடைக்கும். அதுவே பெண்களின் எண்ணிக்கையில், முதலிடம் பெற்றுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், மனநல சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் அதிகமாக இல்லை. இந்தியாவில் மொத்தமே 6000 மன நல டாக்டர்கள் தான் உள்ளனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி, லட்சம் பேருக்கு ஒரு டாக்டர் என்ற நிலையே உள்ளது. மேலை நாடுகளில் 5000 பேருக்கு ஒரு மனநல டாக்டர் இருக்கிறார். மனநலம் என்பது சமூகத்தில் அந்தஸ்து குறைவான விஷயமாக பார்க்கப்படுவதால், சிகிச்சை பெறுவோரும் தயங்குகின்றனர். டாக்டர்களும் இப்படிப்பிற்கு ஆர்வம் காட்டுவதில்லை.

இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை மனநல டாக்டர் வெ.ராமானுஜம் கூறியதாவது: மனநல டாக்டர்களை அணுகுவதில், இன்னமும் மக்களிடையே தயக்கம் இருப்பது உண்மை தான். ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, டாக்டர்கள் இல்லாதது தான், குறையாக இருக்கிறது. மேற்கத்திய கலாச்சாரத்தைப் போல, நமது வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்வதால் இருதய நோய், ரத்தஅழுத்தம், நீரிழிவு வருகிறது. இவற்றுக்கு அடிப்படைக் காரணம் மனச்சோர்வு தான், என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சிறப்பு நிபுணர்கள் அந்தந்த நோய்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். அடிப்படை விஷயமான மனச்சோர்வுக்கு மருந்தளிக்க முடியாது. எத்தனை நாட்களுக்கு மருந்து கொடுக்க வேண்டும், என்பதையும் நோயாளிக்கேற்ப தீர்மானிக்க வேண்டும். சிலவகை மனநோய்கள் நூறு சதவீதம் குணமடைய வாய்ப்புள்ளது. இதை கவனிக்காமல் விடும் பட்சத்தில், தற்கொலைகள் அதிகரிக்கின்றன.

தமிழகத்தில் தற்போது முதுநிலை மனநலப் படிப்பிற்கு அரசு, தனியார் கல்லூரிகளில் 30 இடங்கள் தான் உள்ளன. அரசு மருத்துவமனைகளில் மனநலத்திற்கு சிகிச்சை பெறுவோர், அதிகரித்து வருகின்றனர். அதற்கேற்ப டாக்டர்கள் இல்லை. எனவே, மனநல முதுநிலைப் படிப்பில் கூடுதலாக சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக