Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 6 மே, 2013

கூடங்குளம் அணுமின் நிலையம் தடையின்றி செயல்பட உச்ச நீதிமன்றம் அனுமதி


பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் தொடர்ந்த இந்த வழக்கில், இன்று காலை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், தீபக் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

கூடங்குளம் அணுவுலை செயல்பட அனுமதி அளித்துத் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், இந்தியாவின் அணுசக்திக் கொள்கையை மதிப்பதாகத் தெரிவித்தது. மேலும், எரிசக்தித் தேவைக்காக அணுவுலையில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை பாதுகாப்பாக சேமிக்கும் முறையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியது.

கூடங்குளம் பாதுகாப்பாக உள்ளது. நாட்டின் மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்பவும், பொது நலன் கருதியும், நாட்டின் வளர்ச்சி கருதியும் கூடங்குளம் திட்டம் அவசியத் தேவை. அணுவுலைகள் நம் நாட்டின் மின்சாரத் தேவைக்கு அவசியம் தேவை. இன்றைய சந்ததிக்கும் எதிர்கால சந்ததிக்கும் அணு மின்சாரம் தேவை என்று கூறியது உச்ச நீதிமன்றம்.

அணுவுலை தொடர்பான பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட அனைத்துக் குழுக்களும் ஒரே மாதிரியான கருத்தையே தெரிவித்துள்ளதாகத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், அணுவுலை பாதுகாப்பாக இருப்பதாகவும், பாதுகாப்பாக செயல்படத் தேவையான அனைத்து அம்சங்களும் பின்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருப்பதை கவனத்தில் கொள்வதாகவும் கூறியது.

முன்னதாக, 'பூவுலகின் நண்பர்கள்' என்ற அமைப்பு தொடர்ந்த இந்த வழக்கில், கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

கூடங்குளத்தில் ரஷிய நாட்டு உதவியுடன் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்த முதலாவது அணு உலையை இந்திய-ரஷிய நாடுகளின் அணு சக்தி அமைப்புகள் கூட்டாகச் செயல்படுத்தி வருகின்றன.

முதலாவது அணு உலை செயல்படத் தொடங்கிய ஆறாவது மாதத்தில் இரண்டாவது அணு உலை செயல்படும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், "கூடங்குளத்தில் அணு மின் நிலையம் செயல்பட்டால் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படும்; பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் இருக்காது. அதனால், அணுமின் நிலையம் செயல்பட அனுமதிக்கக்கூடாது' என்று உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் "பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு கேட்டுக் கொண்டிருந்தது. அதையடுத்து, மத்திய அரசு தனது தரப்பு வாதத்தில், "கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பாதுகாப்பு அம்சங்களை அமல்படுத்த 17 அம்ச பரிந்துரைகளை இந்திய அணு சக்தி ஒழுங்குமுறை வாரிய நிபுணர்கள் குழு வழங்கியுள்ளது. அவற்றை நிறைவேற்ற ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகும். இயற்கைச் சீற்றம், பயங்கரவாத தாக்குதல் ஆகியவற்றைச் சமாளிக்கும் வகையில், கூடங்குளத்தில் பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன' என்று கூறியது.

அதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்குவதற்குத் தேவையான யுரேனியத்தை நிரப்பத் தடையில்லை என்று உத்தரவிட்டது. அதன் பிறகு மூன்று மாதங்களாக விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை கடந்த டிசம்பர் மாதம் முன்னதாக நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக