Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை

அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளதால், பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் சரியும் அபாயம் உள்ளது. வரும் கல்வியாண்டிலாவது இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத் தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள் என மொத்தம் 52 உள்ளன. இப்பள்ளிகளில், முக்கிய பாடங் களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், அந்தந்த பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர்கள் சங்கம் உதவியுடன் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இதுபோன்று நியமிக்கப்படும் ஆசிரியர்கள் பெரும்பாலும், இளங்கலை பட்ட படிப்பு முடித்து, முன் அனுபவம் இல்லாத ஆசிரியர்களாக உள்ளனர். இதனால், மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை. அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, கல்வித்துறை அதிகாரிகளும் முயற்சி எடுத்து வருகின்றனர். ஆனாலும், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்காத நிலை உள்ளது.

அரசு பள்ளிகளில், மேல்நிலை பிரிவுக்கு கணிதம், இயற்பியல், வணிக கணிதம், வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லை. பொதுத்தேர்வின் போது, தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது.

கடந்தாண்டில், ஆசிரியர்கள் பற்றாக்குறையால் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் சரிந்தது. நடப்பாண்டிலும், இதே நிலை நீடிக்கும் அபாயம் உள்ளது. வரும் கல்வியாண்டு துவங்குவதற்கு முன், முக்கிய பாடங்களுக்கு அனுபவம் மிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் கூறுகையில், "ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்று சென்றதாலும், பணி ஓய்வு பெற்றதாலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்புக்கு முன் புதிய ஆசிரியர்கள் நியமிக்கும் வாய்ப்புள்ளது.

பொதுத்தேர்வின் போது, பள்ளிகளில் தற்போது இருக்கும் அனுபவம் மிக்க ஆசிரியர்களை கொண்டும் பாடம் நடத்தப்பட்டுள்ளதால், தேர்ச்சி விகிதம் பாதிக்கும் அபாயம் இருக்காது" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக