மதுரை அருகே, அரசு பள்ளியில் 6 மாதங்களாக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. இதனால், வட்டிக்கு கடன் வாங்கி, குடும்பம் நடத்தி வருகின்றனர்.
வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரத்தில் சர்க்கரை ஆலையில் பணியாற்றிய ஊழியர்களின் குழந்தைகள் நலன் கருதி 1964ல் மதுரை சர்க்கரை ஆலை உயர் நிலைப்பள்ளி துவக்கப்பட்டது. 1980ல் இது, மேல்நிலைபள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
மாணவர்கள் நலன் கருதி 26.6.2012ல் ஆலை நிர்வாகத்திற்கு உட்பட்ட இப்பள்ளியை, அரசு ஏற்றுக் கொண்டு, "அரசு மதுரை சர்க்கரை ஆலை மேல்நிலை பள்ளி&' என பெயர் மாற்றப்பட்டது. பல ஆண்டுகளாக ஆசிரியர் பற்றாக்குறையால் செயல்பட்ட இப்பள்ளிக்கு, சமீபத்தில் டி.ஆர்.பி., மூலம் தேர்வான 10 ஆசிரியர்கள் மற்றும் ஒரு கிளார்க் பணியிடம் நிரப்பப்பட்டன. இவர்களை சேர்ந்து 24 ஆசிரியர்கள், 5 அலுவலர்கள் தற்போது பணியில் உள்ளனர்.
அனைவருக்கும் 2012, அக்., மாதம் முதல்சம்பளம் வழங்கப்படவில்லை. "அரசு பள்ளி தானே எப்படியும் சம்பளம் வந்துவிடும்&' என்ற நம்பிக்கையில், வட்டிக்கு கடன் வாங்கி, குடும்பம் நடத்தும் அவலத்திற்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: அரசு பள்ளியாக மாற்றப்பட்ட பின், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி மூலம் கருவூல அலுவலருக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அந்த பரிந்துரையை கருவூல அலுவலர் ஏற்காமல், ஆசிரியர்களுக்கான "நிரந்தர விரைவு சம்பள கொடுப்பாணை" கோரப்பட்டது.
இதுதொடர்பாக கல்வித்துறைசெயலர் மூலம் சம்பந்தப்பட்ட நிதிப்பிரிவு ஒப்புதலுக்கு "பைல்" அனுப்பப்பட்டது. ஆனால் அது கிடப்பில்உள்ளதால் ஆசிரியர்கள், அலுவலர்களால் சம்பளம் பெற முடியவில்லை. இதனால், வட்டிக்கு கடன் வாங்கி குடும்பத்தை நடத்துகிறோம்.
முதன்மை கல்வி அலுவலர், கலெக்டர் என பல அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை, என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக