தமிழக அரசின் அனைத்து அலுவலகங்கள், அரசு நிறுவன அலுவலகங்கள், பள்ளிகளில் இணையதள வசதி செய்ய, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, ஒப்பந்த அடிப்படையில், தொலைத் தொடர்பு, பிராட்பேண்ட் இணைப்பை பெற, எல்காட் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.
50 கோடி ரூபாய் மதிப்பிலான இப்பணிகள், மூன்று மாதங்களில் முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் நிர்வாகப் பணிகள் அனைத்தும், மின்னணு முறையில் மாற்றப்பட்டு வருகிறது. இதனால், அரசின் தகவல் பரிமாற்றங்களைக் கூட, மின்னணு முறையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக, தமிழக ஏரியா நெட்வொர்க், தமிழக டேட்டா மையம், மின்னணு மாவட்டத் திட்டம், மாநில சேவைகளை வழங்கும் வழித் தடம் ஆகிய திட்டங்களை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டங்களை, மாநில அரசு அலுவலர்கள் பயன்படுத்த வேண்டும் என்றால், அலுவலகங்களை இணையதளத்தில் இணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அலுவலகத்தின் அன்றாடப் பணிகளை, மின்னணு முறைக்கு மாற்ற வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.
பல சேவைகளை, ஆன்-லைனில் செய்ய வேண்டி இருப்பதால், இணையதள இணைப்புகள் அவசியமாகின்றன. எனவே, தமிழக அரசின் அனைத்து அலுவலகங்களிலும், இணையதள வசதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவற்றோடு, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், இணையதள வசதி ஏற்படுத்தப்படுகிறது. இணையதள வசதியோடு, ஒவ்வொரு துறை அலுவலகங்களும், வங்கிகளைப் போல, கணினி நெட்வொர்க்கில் இணைக்கப்படுகின்றன.
இதற்காக, அரசு மற்றும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்கும், ஒப்பந்தப் புள்ளியை, எல்காட் நிறுவனம் கோரியுள்ளது.ஒவ்வொரு அலுவலகத்துக்கும், தரை வழி தொலைபேசி இணைப்புடன், பிராட்பேண்ட் இணைப்புகள் வழங்குதல், தரை வழி தொலைபேசிக்கு, இலவச உள் அழைப்பு வசதி மட்டும் இருக்கும் வகையில், இணைப்புகள் அளிக்கப்படுகின்றன.
இதுகுறித்து, தமிழக அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனைத்து அலுவலகங்களும், இணையதள வசதி பெறும் போது, தகவல் பரிமாற்றம் எளிதாவதோடு, அரசின் அனைத்து செயல் மற்றும் தகவல்களை, இணைய தளம் மூலம், உடனுக்குடன் அறிய முடியும்.
நாட்டின் கடை கோடியில் இருக்கும் அலுவலகங்கள் கூட, மக்களுக்கு உடனுக்குடன் சேவையை அளிக்க முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஒப்பந்தப் புள்ளிகள் முடிவு செய்யப்பட்டு, மூன்று மாதங்களில், அனைத்து அலுவலகங்களிலும், இணையதள வசதி அளிக்கப்படும் என, எல்காட் வட்டாரங்கள் கூறுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக