"இந்தியா முழுவதும், 15 இடங்களில் பசுமை விமான நிலையம் கொண்டு வரப்பட உள்ளது' என, மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர், அஜித்சிங் கூறினார். புதுச்சேரி விமான நிலையத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள, பயணிகள் முனையக் கட்டடத் திறப்பு விழா, நேற்று நடந்தது. புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங் தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி, முன்னிலை வகித்தார்.
மத்திய அமைச்சர் நாராயணசாமி, மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வேணுகோபால், வாழ்த்திப் பேசினர். பயணிகள் முனையக் கட்டடத்தை திறந்து வைத்து, சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜித்சிங் பேசியதாவது: இந்தியாவில், கடந்த பத்தாண்டுகளில், விமான சேவை வேகமான வளர்ச்சி கண்டுள்ளது.
உள்நாட்டு விமான சேவையில், சிறிய விமானங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்தியாவில், 2003-04ம் ஆண்டில், சிறிய ரக விமான சேவையின் பயன்பாடு, 1 சதவீதமே இருந்தது. தற்போது, சிறிய விமான சேவைகளின் பயன்பாடு, 70 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால், பெரிய விமான நிறுவனங்கள் கூட, உள்ளூரில் சிறியரக விமான சேவை துவங்குவதில், ஆர்வம் காட்டுகின்றன.
வெகு தொலைவில் இருக்கும் உள்ளூர் நகரங்களுக்கு, போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுப்பதில் சிக்கல் உள்ளது. இந்த இடங்களுக்கு, விமான சேவை பொருத்தமானதாக இருக்கும். இதனால், இந்தியா முழுவதும், 15 இடங்களில் பசுமை விமான நிலையம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பசுமை விமான நிலையங்களில், எந்த வகை சிறிய ரக விமான இயக்குவது என பரிசீலிக்கப்படுகிறது. இதன் மூலம், உள்ளூர் நகரங்கள் ஒன்றொடு ஒன்று இணைக்கப்பட்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். இவ்வாறு அமைச்சர் அஜித்சிங் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக