Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 4 பிப்ரவரி, 2013

தமிழகத்தில் 50,000 "போலி' டாக்டர்கள்: IMA தேசிய தலைவர் அதிர்ச்சி தகவல்


"தமிழகத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள், மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதால், உயிரிழப்புகள், நோய் தாக்கம் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது,'' என, அகில இந்திய மருத்துவ சங்க, தேசிய தலைவர் டாக்டர் விஜயகுமார் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர், இந்திய மருத்துவ சங்க கிளை சார்பில், புதிய நிர்வாகிகள் தேர்வு, பெண் மருத்துவர்கள் சங்க செயல்விளக்க கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு முன், அகில இந்திய மருத்துவ சங்க, தேசிய தலைவர் டாக்டர் விஜயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, மூன்றரை ஆண்டுக்கு முன், இந்திய மருத்துவ கழகத்தை, மத்திய அரசு கலைத்து விட்டு, ஏழு பேர் கொண்ட, தற்காலிக குழு அமைத்தது. இக்குழு, மத்திய அரசின் கைப்பாவையாக இருப்பதால், இந்திய மருத்துவ கழகத்தை, மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி, பொதுநல வழக்கு தொடர உள்ளோம்.

மக்கள் நல விரோத கொள்கைகளை செயல்படுத்தி வரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத், ராஜினாமா செய்ய செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை காரணமாக, இறப்பு மற்றும் பிறப்பு சதவீதம் குறைந்து வருகிறது. டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களால், டில்லி, சென்னை மற்றும் தென் தமிழக பகுதிகளில், அதிகளவில் பாதிப்பும், உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 50 ஆயிரம், "போலி' டாக்டர்கள் உள்ளனர், இவர்கள், மருத்துவ சிகிச்சை அளிப்பதால், உயிர் பலி, நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, தமிழகத்தில் மட்டும், 2,000 போலி டாக்டர்களை, போலீஸார் கைது செய்தனர். இவர்கள், நீதிமன்றத்தில், 500, 1,000 ரூபாய், அபராதம் கட்டி விட்டு, மீண்டும், மருத்துவ சிகிச்சை அளிக்கின்றனர்.

போலி டாக்டர்களை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள், "போலி மருத்துவர்கள் ஒழிப்பு சட்டம்' கொண்டுவர வேண்டும். கிராமப்புறங்களில், டாக்டர்கள் பணி நியமனம் திட்டத்தை வரவேற்கிறோம். உலக சுகாதார நிறுவனத்துடன், அகில இந்திய மருத்துவ சங்கம் இணைந்து, காசநோய் ஒழிப்பு, குழந்தைகள் மற்றும் தாய் நலம், வயிற்றுப்போக்கு, புற்று நோய் தடுப்பு என, பல்வேறு மருத்துவ பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவ சுகாதார பணிகளில், தமிழகம் முதலிடமும், கேரளா இரண்டாம் இடத்திலும் உள்ளது. கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு, தனியார் மருத்துவமனைக்கு நிகராக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக