தமிழகத்தில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி ஏற்பட்டு வருகிறது. டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி பெரும்பாலான மாவட்டங்களில் பிசான சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டு விட்ட நிலையில் நடப்பாண்டு நெல் போதுமான விளைச்சல் ஏற்படாத சூழ்நிலை நிலவிவருகிறது. நட்ட பயிரை கூட காப்பாற்ற முடியாமல் தற்போது விவசாயிகள் பெரும் அவதிப்பட்டு வரும் நிலையில் தொடரும் வறட்சியால் சுற்றுலா ஸ்தலத்திற்கு பிரசித்திபெற்ற குற்றாலமும் பெரும் பாதிப்பை சந்திக்க கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக குற்றாலத்தில் போதுமான அளவில் மழையும், சாரலும் இல்லாததால் சீசன் கால தாமதமாக துவங்கி, முன் கூட்டியே முடிந்து விடுகிறது. குற்றால அருவிகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக சிற்றாற்றில் வரக்கூடிய தண்ணீர் வரத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குளங்களுக்கு கால்வாய்கள் மூலம் தண்ணீர் சென்று வரக்கூடிய நிலையும் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக குற்றாலத்தில் போதுமான மழையில்லாத காரணத்தினால் சிற்றாற்று கால்வாய்களுக்கு கூட தண்ணீர் போதுமான அளவில் வருவதில்லை.
இதனால் கடந்த சில வருடங்களாக சிற்றாற்று பாசன விவசாயிகளுக்கு சாகுபடியை முறையாக மேற்கொள்ள முடியாத நிலை தான் இருந்து வருகிறது.இந்நிலையில் தொடர்ந்து ஏற்பட்டு வந்த வறட்சியின் காரணமாக குற்றாலத்தில் அங்குமிங்கும் துள்ளிக் குதித்து நடமாடும் குரங்குகளுக்கும் தற்போது பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.காட்டுப் பகுதிகளிலும் தண்ணீர் இல்லாத நிலையில், குற்றாலத்தில் திரியும் குரங்குகளின் நிலை பரிதாபமாக காணப்படுகிறது.
பாறையையொட்டி கசிந்து விழும் அளவிற்கு மெயினருவியில் தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியிலோ பரவலாக தண்ணீர் விழும் நிலை கூட காணப்படவில்லை.இதன் காரணமாக காட்டுப் பகுதிகளில் உள்ள வன விலங்குகளின் நிலை பரிதாபமாக உள்ளது. குற்றாலத்தில் உள்ள குரங்குகள் தற்போது சுற்று வட்டாரத்தை சேர்ந்த பகுதிகளுக்கு சென்று வருவதுடன் அப்பகுதிகளில் விவசாய தோட்டங்களில் புகுந்து சேதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.தொடரும் வறட்சி காரணமாக குற்றாலத்தில் இருந்து குரங்குகள் வெளியிடங்களுக்கு சென்று வரும் நிலையில் அதற்கு தேவையான குடிநீர் மற்றும் உணவுகளை வழங்கிட தமிழக அரசு தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் வன ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பாக அமைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக