நடப்பு 2012ம் ஆண்டில், சர்வதேச அரிசி ஏற்றுமதியில், இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.நடப்பாண்டில், இதுவரையிலுமாக, இந்தியா, 90 லட்சம் டன்னுக்கும் அதிகமாக அரிசி ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மூலம், இதுவரை அரிசி ஏற்றுமதியில் முதலிடத்தில் இருந்த தாய்லாந்தை, பின்னுக்கு தள்ளி விட்டு முன்னேறியுள்ளது.
எனினும், நடப்பு வேளாண் பருவத்தில், போதிய பருவமழை இல்லாததால், நாட்டின் நெல் உற்பத்தி குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், வரும் 2013ம் ஆண்டு, தாய்லாந்து மீண்டும் அரிசி ஏற்றுமதியில் முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது என, சர்வதேச உணவு மற்றும் வேளாண் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.தடை நீக்கம்:கடந்த 2011ல், தனியார் அரிசி ஏற்றுமதி மீதான தடையை மத்திய அரசு நீக்கியது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனியார் நிறுவனங்களும் அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டதால், பாரம்பரிய நாடுகளுக்கு அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது. இத்துடன், அரிசி ஏற்றுமதியாளர்கள், புதிய சந்தைகளுக்கும் வர்த்தகத்தை விரிவுபடுத்தினர்.
அதேசமயம், இந்திய ஏற்றுமதியாளர்கள், சர்வதேச சந்தை விலையை விட, குறைந்த விலைக்கு அரிசியை ஏற்றுமதி செய்தனர். இதனால், இந்தியாவின் அரிசி ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது.இந்நிலையில், தாய்லாந்து அரிசி விலை அதிகம் என்பதால், அந்நாட்டின் அரிசி ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. இந்த நிலை, வரும் ஆண்டு மாறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தேவை:தாய்லாந்து, சர்வதேச சந்தையில் அதன் அரிசி விலையை குறைத்துள்ளது. இதனால், வரும் ஆண்டில், உலக நாடுகளிடையே, தாய்லாந்து அரிசிக்கான தேவை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதன் விளைவாக, தாய்லாந்து, வரும் 2013ம் ஆண்டில், அரிசி ஏற்றுமதியில் மீண்டும் முதல்இடத்தை பிடிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில், பருவமழை பொழிவில் ஏற்பட்ட தாமதம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளால், இந்தியாவின் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் ஆண்டில், அரிசி ஏற்றுமதியில், இந்தியாவின் பங்களிப்பு குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
உணவு தானியங்கள்:எனினும், நடப்பு 2012-13ம் வேளாண் பருவத்தில் (ஜூன்-ஜூலை), இந்தியாவின் உணவு தானியங்கள் ஏற்றுமதி,1.57 கோடி டன்னாக இருக்கும். இதில், 77 லட்சம் டன் அரிசியும், 50 லட்சம் டன் கோதுமையும், 30 லட்சம் டன் மக்காச்சோளமும் அடங்கும்.கடந்த வேளாண் பருவத்தில், இந்தியாவின் கோதுமை உற்பத்தி, 9.40 கோடி டன் என்ற சாதனை அளவை எட்டியது. அதேபோன்று, நெல் விளைச்சலும், 10.04 கோடி டன்னாக உயர்ந்தது. மக்காச்சோள உற்பத்தி, 1.62 கோடி டன்னாக இருந்தது.
உணவு தானிய உற்பத்தி :உச்சத்தை எட்டிய நிலையில், மத்திய அரசு, அதிக அளவில் நெல் மற்றும் கோதுமையை கொள்முதல் செய்தது. இதனால், தனியார் ஏற்றுமதியாளர்களுக்கு, குறைந்த அளவிற்கே உணவு தானியங்கள் கிடைத்தன.இந்நிலையில், நடப்பாண்டில், மத்திய அரசு, அதன் கையிருப்பில் உள்ள உபரி உணவு தானியங்களை அதிக அளவில் விற்பனை செய்து, அறுவடையாகி வரும் புதிய உணவு தானியங்களுக்கு, கிடங்குகளில் கூடுதலாக இட வசதி அளிக்க திட்டமிட்டுள்ளது.
கோதுமை:இதன் விளைவாக, முதலில், 20 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, மேலும், 25 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட உள்ளது.ரபி பருவத்தில், நெல் மற்றும் கோதுமை விதைப்புக்கான பணிகள் பெரும்பாலும் முடிவடைந்து விட்டன. கோதுமை அதிகம் விளையும் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பருவமழை குறைவாக பொழிந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக