மாநிலம் முழுவதும் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத, 7,000 பணியிடங்கள், காலியாக உள்ளன. இந்த விவகாரத்தில், முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு, காலி பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப, உத்தரவிட வேண்டும் என, பள்ளி நிர்வாகங்கள் எதிர்பார்க்கின்றன.
அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும், 14 வகையான இலவச திட்டங்கள், உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கும் வழங்கப்படும் நிலையில், போதிய பணியாளர்கள் இல்லாததால், நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில், சிக்கலான நிலை நீடித்து வருகிறது.
தமிழகத்தில், 55 ஆயிரத்து, 667 பள்ளிகள் உள்ளன. இதில், ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை ஆகிய பிரிவுகளில், 8,266 பள்ளிகள், அரசு நிதியுதவியுடன் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில், 33 லட்சம் மாணவ, மாணவியர், படிக்கின்றனர்; 95 ஆயிரம் ஆசிரியர், பணிபுரிந்து வருகின்றனர்.
அரசுப் பள்ளிகளில், ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத தட்டச்சர், இளநிலை உதவியாளர், உதவியாளர் என, பல வகையான பணியிடங்கள், உடனுக்குடன் நிரப்பப்படுகின்றன. ஆனால், உதவிபெறும் பள்ளிகளில், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு, தமிழக அரசு ஓரளவு அக்கறை செலுத்துகிறது. ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதில், சுத்தமாக கவனம் செலுத்துவதில்லை என, குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
ஒரு பள்ளியில், நான்கு, ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் இருந்தால், இரு பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. புதிய பணியிடங்களை அனுமதிக்காவிட்டாலும், ஏற்கனவே ஒதுக்கப்பட்டு, தற்போது, காலியாக உள்ள பணியிடங்களை மட்டுமாவது நிரப்ப, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கல்வித்துறை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, முதன்மைக் கல்வி அலுவலர் ஒருவர் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் அமல்படுத்தப்படும், அத்தனை திட்டங்களையும், உதவிபெறும் பள்ளிகளில் செயல்படுத்த வேண்டும். ஆனால், நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள், அதிகளவில், காலியாக உள்ளன.
இலவச பொருட்கள் குறித்த கணக்கு விவரங்களை பராமரித்தல், எத்தனை மாணவர்களுக்கு, பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன, இன்னும் எத்தனை பேருக்கு வழங்க வேண்டும், பொருட்களின் இருப்பு உள்ளிட்ட பல்வேறு கணக்கு பராமரிப்புகளை, ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தான் கவனிப்பர். இந்த பணியாளர்கள் இல்லாததால், அந்தப் பணிகளில், ஆசிரியர்களை ஈடுபடுத்துகிறோம்.
இதனால், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் வருகின்றன. மேலும், ஆசிரியர்கள், கற்பித்தல் பணிகளில் ஈடுபடுவதும், பாதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, ஒவ்வொரு பள்ளியிலும், காலியாக இருந்த இடங்கள், முழுமையான அளவில் நிரப்பப்படவில்லை.
அதனால், ஏற்கனவே உள்ள காலி பணியிடங்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களால் ஏற்பட்ட காலி பணியிடங்கள் என, 5,000 முதல், 7,000 பணியிடங்கள் வரை, காலியாக இருக்கின்றன. இந்த பணியிடங்களை நிரப்பாவிட்டால், நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில், வரும் கல்வியாண்டில் பெரும் சிக்கல் ஏற்படும்.
புதிய பணியிடங்களுக்கு அனுமதி வழங்காவிட்டாலும், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பணியிடங்களை மட்டும் நிரப்ப, அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.
இந்த விவகாரத்தில், முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு, காலி பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப, உத்தரவிட வேண்டும் என, பள்ளி நிர்வாகங்கள் எதிர்பார்க்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக