கனடா நாட்டில் வழங்கப்படும் 2012–ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கனடா நாட்டில் உள்ள கனடா தமிழ் கலை இலக்கிய தோட்டம் சார்பில், ஆண்டு தோறும் தமிழ் எழுத்து துறையில் சாதனை படைத்து வருபவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது, கேடயம் மற்றும் 2,500 கனடியன் டாலர்’ ஆகியவை வழங்கி கவுரவித்து வருகிறது.
அந்த வகையில், கடந்த ஆண்டுகளில் முக்கிய எழுத்தாளர்களான சுந்தரராமசாமி, வெங்கடசாமிநாதன், ஜார்ஜ் எல்.ஹார்ட், லட்சுமி ஹோம் ஸ்ரோம், அம்பை, ஐயிராவதம் மகாதேவன், கோவை ஞானி, எஸ்.பொன்னுதுரை, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரும், கன்னியாகுமரி மாவட்டம், தாழக்குடியை அடுத்த வீரநாராயணமங்கலத்தை சேர்ந்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 6 நாவல்கள், 9 சிறுகதை தொகுப்புகள், 6 கட்டுரை தொகுப்புகள், 2 கவிதை தொகுப்புகளை எழுதி உள்ளார். இவற்றின் மூலம் நாஞ்சில் நாட்டு வட்டார மொழியை தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பிரபலப்படுத்தி வருகிறார்.
நாஞ்சில் நாடன் எழுதிய ‘‘சதுரங்க குதிரை’’ என்ற நாவல் 1993–ம் ஆண்டு தமிழகத்தில் சிறந்த நாவலாக தேர்வு செய்யப்பட்டது. 2008–ம் ஆண்டு கோவையில் ‘‘கண்ணதாசன் விருதும்’’, 2009–ம் ஆண்டு தமிழக அரசு ‘‘கலைமாமணி விருதும்’’ வழங்கியது. இதனை தொடர்ந்து ‘‘சூடிய பூ சூடற்க’’ என்ற சிறுகதை தொகுப்பிற்காக, மத்திய அரசு கடந்த 2010–ம் ஆண்டு ‘‘சாகித்திய அகடாமி விருது’’ வழங்கியது.
இவர் எழுதிய ‘‘தலைகீழ் விகிதங்கள்’’ என்ற நாவலை தழுவி, சினிமா டைரக்டர் தங்கர்பச்சான் ‘‘சொல்ல மறந்த கதை’’ என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். இது தவிர, தற்போது ஓடிக்கொண்டிருக்கும், டைரக்டர் பாலா இயக்கிய ‘‘பரதேசி’’ திரைப்படத்திற்கும் வசனமும் எழுதி உள்ளார்.
வாழ்நாள் சாதனையாளர் விருது:
இது குறித்து நாஞ்சில் நாடன் கூறியதாவது:–
என்னுடைய எழுத்துப்பணியை கவுரவிக்கும் வகையில், கனடா தமிழ் கலை இலக்கிய தோட்டம் சார்பில், இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு என்னை தேர்வு செய்துள்ளது. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. விருது, கேடயம் மற்றும் 2,500 கனடியன் டாலர் வழங்கும் விழா 2013–ம் ஆண்டு ஜூன் 13–ந் தேதி கனடா நாட்டில் உள்ள டேரோண்டோ நகரில் நடக்கிறது. இந்த விழாவில் இதனை வழங்குகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக