பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு!
எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!
உணர்வலைகள் உந்தப்படுகிறபோது உண்மைகளும், யதார்த்தங்களும் பல சமயங்களில் திசை மாறிவிடுகின்றன. ஆயுள் சிறைவாசிகளாக அடைக்கப்பட்டுக் கிடக்கிற தேகங்கள் கதிரவனின் கடும் வெப்பத்தை மறைத்து நிற்கிற மேகங்களைப் போன்றவவைகள். தோற்றத்தில் மேகங்கள் கருமையைப் பூசிக் கொண்டதைப்போலத்தான் தெரியும்; அவைகளுக்குள் அடங்கிக் கிடப்பது அனைத்து ஜீவன்களுக்கும் அவசியமான தண்ணீர் அல்லவா? அதைப் போலத்தான் இவர்களைப் பார்க்கிறபோது தவறு செய்தவர்களாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பார்கள். சரியா, தவறா என்பதற்குள் நாம் நுழைய விரும்பவில்லை. ஆனாலும் தவறான வழிகாட்டுதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று மட்டும் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. காரணம் சிறைக் கொட்டடிகளிலிருந்து மீண்டு வந்தவர்களும், இன்னும் சிறைகளிலேயே தொடர்கிறவர்களும் ஒப்புக் கொள்ளுகிற உண்மை இது. இருந்தபோதிலும் இவர்களின் இதயங்கள் தங்களின் சுயலாபங்களை எண்ணியதே இல்லை; தங்களின் சொந்தபந்தங்களைக்கூடப் பெரிதாக ஏற்கவில்லை; மனைவி மக்களையும் மனதில் கொள்ளவில்லை; முழுக்க முழுக்க உள்ளார்ந்த உணர்வுகளுக்கு மட்டுமே உருகி நின்றார்கள்; "இளங்கன்று பயமறியாது என்பார்களே; இந்த இளங்குருத்துக்களை இஷ்டத்திற்கு வழிகாட்டியவர்கள் இன்பமாக உலா வருகிறார்களே; தவறாக வழிகாட்டப்பட்ட இளைஞர்கள் மாட்டிக் கொண்டார்களே" என்று வேதனைக் கண்ணீர்விட்ட நம் தலைவர் மர்ஹும் சிராஜுல் மில்லத் அவர்களை எண்ணிப் பார்க்கிறேன். அப்படி மாட்டிக் கொண்டவர்களில் ஒருவன்தான் தம்பி கோவை அபுதாஹிர்.
அபுதாஹிரோ மற்ற எவருமோ சிறை செல்வதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு துளியளவும் காரணம் இல்லை; என்றாலும் அவனது உடல்நிலை எஸ்.எல்.இ. என்று சொல்லப்படும் ஓர் அபூர்வ கொடிய நோயால் பாதிக்கப்பட்டு கல்லீரல், மண்ணீரல், இதயம் மற்றும் அவனுடைய இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் ‘‘என்னை வழிகெடுத்தவர்களும் கைவிட்டுவிட, பரிதவித்து நிற்கிற எனக்கு ஆதரவு கரம் நீட்டமாட்டீர்களா?’’ எனத் தகவல் அனுப்பிக் கேட்டான் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் அவர்களிடத்தில். ஏறத்தாழ ஐந்து வருடங்களாகின்றன. இதுவரையிலும் 11 தடவை பரோலில் வெளியே வந்து தனது சுற்றத்தார் ஆதரவோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாலேதான் இந்த அளவுக்காவது இறைவனின் பேரருளால் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று சொல்ல வேண்டும். இந்த 11 தடவைகளில் நீதிமன்ற உத்தரவைப் பெற்று பரோலில் வெளிவந்த 2 தடவை நீங்கலாக மற்ற 9 தடவைகளும் முஸ்லிம் லீக் தலைமை மேற்கொண்ட முயற்சியால் மாத்திரமே சாத்தியமானது என்பதை எவரும் மறுக்க முடியாது.
துரதிஷ்ட நிலை; ஜெயலலிதா அரசு பொறுப்பேற்ற பிறகு பலமுறை நாம் விண்ணப்பங்கள் கொடுத்தும், அபுதாஹிரின் சுற்றத்தார் வேண்டுகோள் விடுத்தும் பலனில்லாமல் போகவே அவரின் சகோதரர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். உயர்நீதிமன்றமும் சென்ற 24.08.2012 அன்று அளித்த தீர்ப்பில் ‘அபுதாஹிரின் மருத்துவ சிகிச்சையை முக்கிய அம்சமாகக் கொண்டு 90 நாட்களுக்கு பரோலில் வெளியே சென்று வரலாம்’ என ஆணை பிறப்பித்தது. ‘அபுதாஹிரை வெளியேவிட முடியாது’ என்று அடம்பிடித்துக் கொண்டு அரசு தரப்பில் மறுபரிசீலனை மனுதாக்கல் செளிணியப்பட்டது. உயர்நீதிமன்றம் அதையும் டிஸ்மிஸ் செய்து ‘உடனே பரோலில் விடவேண்டும்’ என்று மறுதீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு வந்து இப்போது இரண்டு மாதங்கள் ஆகியும் பரோலில் விடுவதற்குப் பதிலாக மொட்டைப் பிடிவாதம் கொண்டு தமிழக அரசு முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத அரசாக தமிழக அரசு இருப்பதை நீதிமன்றத்தின் கவனத்திற்கு அபுதாஹிரின் குடும்பத்தார் கொண்டு சென்றால் என்னவாகும்? என்று சற்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இதற்கிடையில் சென்ற சில தினங்களுக்கு முன்பாக சிறைச்சாலையிலேயே கிடந்த அவனது உடல் நிலை மிகவும் மோசமாகி கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறான். அங்கேயும் சிகிச்சையளிக்க முடியாத நிலையில் கோவை குப்புசாமி நாயுடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுத் தீவிர சிகிச்சையில் இருப்பதாக நமக்குத் தகவல் கிடைத்தது. இதற்கு முன் பலமுறை தமிழக அரசின் உள்மீதுறைச் செயலாளரையும், சிறைத் துறை மேலதிகாரியையும் சந்தித்து பரோலில் விடுமாறு வேண்டுகோள் வைத்திருந்தபோதிலும் சென்ற 27.11.2012 அன்று டில்லியிலிருந்தே தமிழக உள்துறைச் செயலாளர் திரு.ராஜகோபால் அவர்களுக்கு பேக்ஸ் மூலம் வேண்டுகோள் கடிதம் அனுப்பி பரோலில் விடுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன்.
தமிழக அரசின் நிலைபாட்டில் எந்த மாற்றமும் தென்படாமல் இருந்ததால் சென்ற 8.12.2012 சனிக்கிழமையன்று சென்னை அரசு தலைமைச் செயலகத்திற்கே சென்று உள்துறைச் செயலாளரை நேரில் சந்தித்து சற்று கடுமையாகவே அழுத்தம் கொடுத்து நிலைமையை விளக்கினேன். வழக்கம்போல ஆவண செளிணிவதாகச் சொன்னாலும் ஏதோ கொஞ்சம் வெளிச்சம் தெரிகிற வகையில் பதில் இருந்ததாகச் சொல்லலாம். நல்லது இனிமேலாவது நடக்கட்டும்.
தீவிர சிகிச்சையில் இருக்கும் அபுதாஹிரைச் சந்தித்து நிலைமையை அறிய விருப்பம் கொண்ட தாளிணிச்சபை முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் அவர்கள் மறுநாளே என்னை கோவை புறப்பட்டுச் செல்லப் பணித்தார்கள். அன்றிரவே பயணித்து மறுநாள் ஞாயிறு காலை கோவை சென்றடைந்து கோவை மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள் உடன்வர நேராக மருத்துவமனைக்குச் சென்றேன்.
ஒடுங்கிப்போன தேகம்; நடுங்கிப்போன இதயம்; வீங்கிப்போன முகம்; கழுத்திலும் கைகளிலும் செருகப்பட்ட நிலையில் மருந்துக் குழாய்கள்; தலைவிரி கோலமாகவும் கண்கள் இரண்டையும் ஒப்புக்காக மூடித் திறக்கும் இறுகிய இமைகள்; நெஞ்சு புடைத்து மீண்டும் உள்வாங்கும் மூச்சுத் திணறல்; உடுத்திய கைலியைக்கூடப் பிடித்துக் கொள்ளாத முடியாத குழியாக ஆகிவிட்ட வயிறும் இடுப்பும்; பார்த்த மாத்திரத்தில் ‘வாங்க’ என்றுகூடத் தெளிவாகச் சொல்ல முடியாமல் ஒட்டிக் கொண்ட உதடுகள்; படுத்த நிலையில் இருந்த தேகம் மெதுவாக எழுந்து உட்கார முயற்சிக்கிறது; முடியவில்லை. இந்த தேகத்தைச் சுற்றி ஏ.கே.47 துப்பாக்கியுடனும், காக்கி உடையுடனும் எட்டு காவல் துறை அதிகாரிகள்; இரண்டு உளவுத்துறை அதிகாரிகள். இவர்களெல்லாம் பாதுகாப்புக்காக நிற்கிறார்களாம் மருத்துவமனையில். கைதி தப்பிவிடாமல் இருப்பதற்காம். என்னே உஷார்! ‘‘இந்த துப்பாக்கியே நோயைப் பன்மடங்காக்கிவிடும்போல் இருக்கிறது சற்று தள்ளி நில்லுங்கள்’’ என்று துப்பாக்கியுடன் அருகில் நின்று கொண்டிருந்த காவலாளியிடம் சொன்னேன்.
அபுதாஹிருக்கு ஆறுதலும் தேறுதலும் சொல்லிவிட்டு புறப்பட்டேன். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருப்பதால் மறுநாளே டில்லி செல்ல வேண்டும். கோவைக்குச் சென்றபோது சிறைவாசிக் குடும்பங்களுக்காக உதவிடும் கிச்சான் புகாரி, சம்சுதீன், கோவை தங்கப்பா, ரஹ்மத்துல்லாஹ், அப்துல் பாசித், குட்டியப்பா என்று பலரும் சந்தித்து பல்வேறு தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர்.
பிறைநெஞ்சே! கடந்த ஐந்து ஆண்டு காலமாக இந்த அபுதாஹிரைக் கண்டு கொள்ள எந்த கழகம் முன்வந்தது? எந்த அமைப்பு அருகே வந்தது? இப்போது சில நாட்களாக அபுதாஹிரின் உடல்நிலையைக் கையில் எடுத்துக் கொண்டு விளம்பரமே விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. போராட்டம் என்றும், முற்றுகை என்றும், அத்துமீறல் என்றும் திடீரென கரிசனம் வந்து அபுதாஹிருக்காகச் செளிணிகிறோம் என்கிறார்களே! உள்ளபடியே அபுதாஹிருக்கு பரோல் விடுதலை கிடைக்க வேண்டும் என்றுதான் செய் கிறார்களா? அல்லது இப்படிச் செய்வதால் அதிகாரிகளுக்கு எரிச்சல் உண்டாகி பரோல் கிடைக்கப் பெறாமல் போய்விடட்டும் என்று நினைக்கிறார்களா? அல்லது இத்தனை நாட்கள் முஸ்லிம் லீகைத் தவிர வேறு யாருமே அண்டவில்லையே! எங்கே போனார்கள் இவ்வளவு நாட்களாக? நாம் கேட்கவில்லை. அபுதாஹிரின் சுற்றமே கேட்கிறது.
யாராவது பதில் சொல்வார்களா? உளப்பூர்வமாக ஈடுபட்டால் வரவேற்க வேண்டியதுதான்.
உருகிக் கொண்டிருக்கும் அருமைத் தம்பி அபுதாஹிர் உடல் நலம் பெற துஆ செய்வோம்; துணை நிற்போம்!
தயவு செய்து அவனை விளம்பரப் பொருளாக மட்டும் ஆக்கிவிடாதீர்கள் !என்று பிறைநெஞ்சே! நீயும் கேள்; நானும் கேட்கிறேன்.
இன்ஷா அல்லாஹ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக