Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 5 நவம்பர், 2012

ஜீன் ஆண்டியின் கருணை இல்லம் ....!

ஊர் சுற்றிப் பார்க்க வந்த வெளிநாட்டுப் பெண்மணி, இன்று எண்ணற்ற ஏழைக் குழந்தைகளுக்கு உதவும் கரமாகத் திகழ்கிறார்

ஜீன் வாட்சன் (79)நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதி ஏழைக் குழந்தைகளுக்காக ‘கருணை இல்லம்’ என்ற பெயரில் ஆதரவற்றோர் இல்லம் ஒன்றை ஆரம்பித்து பல வருடங்களாக சேவை செய்து வருகிறார்.

சமீபத்தில் வெள்ளி விழா கண்டுள்ளது இந்தக் கருணை இல்லம். தாய்,தந்தையற்ற மற்றும் ஏழைக் குழந்தைகள் 598 பேர் இந்தக் கருணை இல்லத்தினால் பயனடைந்துள்ளனர். கல்வி கற்க வசதியில்லாத ஏழை மாணவர்கள் கருணை இல்லத்தின் உதவியால் பட்டதாரிகளாகி வருகின்றனர்.

அண்மையில் நிலக்கோட்டை வந்திருந்தார் ஜீன் வாட்சன். அவரைச் சந்திக்க கருணை இல்லத்துக்குச் சென்றோம். ‘ஜீன் ஆன்ட்டி... ஜீன் ஆன்ட்டி’ என குழந்தைகள் பாசத்தோடு அவரைக் கொஞ்சிக்கொண்டிருந்தனர். அந்த மலர்ச்சியோடு நம்மிடமும் பேசினார்...

நான் முதன்முதலில் 1984ம் ஆண்டு இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தேன். கன்னியாகுமரி பகுதி எனக்கு மிகவும் பிடித்துப்போனதால், மீண்டும் 1986ம் ஆண்டு கன்னியாகுமரிக்கு வந்து அப்பகுதி மக்களிடம் பழக ஆரம்பித்தேன். அங்குள்ள குழந்தைகள் இல்ல நிர்வாகி ஒருவர் மூலமாக நிலக்கோட்டை பகுதிக்கு வந்தேன். முதன்முதலாக என்னைப் பார்த்த நிலக்கோட்டை மக்கள், நான் ஒரு மருத்துவர் என நினைத்துக்கொண்டனர். தங்களுடைய குழந்தைகள் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், வைத்தியம் பார்க்கச் சொல்லியும் என்னிடம் வேண்டுகோள் வைத்தனர்.

அவர்களுக்கு என்னால் உதவ முடியவில்லை. அதற்காக ரொம்பவே வருந்தினேன். அந்த எண்ணம்தான் இதோ இந்த கருணை இல்லமாக உருமாறியிருக்கிறது. போதிய மருத்துவ வசதிகளின்றி தவிக்கிற இவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என முடிவு செய்தேன்."

மீண்டும் நியூசிலாந்து சென்றார் ஜீன். கருணை இல்லம் தொடங்க எங்கெங்கோ நிதிதிரட்ட முயற்சி செய்தும் அந்த சமயத்தில் போதிய நிதி கிடைக்கவில்லை. நியூசிலாந்தில் உள்ள தன்னுடைய பூர்வீக வீட்டை விற்று கொஞ்சம் பணத்தை ஏற்பாடு செய்தார். கையிலிருந்த சொற்பத் தொகையோடு இந்தியா வந்து, 1987ம் ஆண்டு ஏழு ஏழைக் குழந்தைகளுடன் கருணை இல்லத்தை தொடங்கியிருக்கிறார்.

ஆரம்பத்தில் எவ்வித அடிப்படை வசதியும் கருணை இல்லத்தில் கிடையாது. கையிலும் போதிய நிதியில்லை. செய்வதறியாது திகைத்து நின்றவருக்கு நியூசிலாந்திலிருந்த சில நண்பர்கள் உதவ முன்வந்தனர். பலரிடமிருந்து சிறிய நன்கொடைகளும் கிடைத்தன.

‘’1991ம் ஆண்டு. கருணை இல்லம் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான நிலம் விற்கப்பட்ட போது அதிர்ச்சியடைந்தோம். நமக்கென்று சொந்தமாக இடம்வேண்டும் என முடிவெடுத்து, கருணை இல்லம் டிரஸ்ட் ஒன்றை ஆரம்பித்து நிதி திரட்டினோம். பல்வேறு இடையூறுகள், சிக்கல்கள் அனைத்தையும் சமாளித்தோம்" என்று நினைவு கூர்கிறார் ஜீன்.

குழந்தைகளின் ஏழ்மை நிலை நன்கு ஆராயப்பட்ட பின்பே அவர்களுக்கு கருணை இல்லத்தில் இடமளிக்கப்படுகிறது. கருணை இல்லத்தை சேராத மாணவர்களுக்கும் உதவி செய்கின்றனர். வேறு பள்ளிகளில் நல்ல மதிப்பெண்களுடன் படித்து முடித்து,மேற்கொண்டு படிக்க முடியாத ஏழை மாணவர்கள் அணுகும் பொழுது முடிந்த நிதியுதவியை செய்துகொடுக்கிறார்கள்.

வாய்ப்புகள்,வசதிகள் இல்லாதவர்களுக்கே கருணை இல்லத்தில் இடம் கிடைக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக செயல்படுகிறோம்" என்கிறார் தானம் அறக்கட்டளையைச் சேர்ந்தவரும் கருணை இல்ல பொறுப்பாளர்களில் ஒருவருமான காதர்.

என்னோட அம்மா நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது ரத்தப் புற்றுநோயால் இறந்துட்டாங்க. அப்பா விவசாயக் கூலியா வேலை பார்த்தார். 2 அக்கா, 3 அண்ணன்னு எனக்கு பெரிய குடும்பம். படிக்க பணவசதி இல்லாததால அண்ணன்கள் எல்லாரும் படிப்பை நிறுத்திட்டு வேலைக்கு போயிட்டாங்க.

ஆனா என் அப்பா ‘குடும்பத்துல ஒரு பெண் குழந்தையாவது படிக்கணும்’னு ஆசைப் பட்டு என்னையும், என் அக்காவையும் கருணை இல்லத்துல சேர்த்து விட்டாங்க. இப்போ நானும் அக்காவும் B.E. படிச்சுட்டு இருக்கோம். படிச்சு முடிச்சதும் ஜீன் ஆண்ட்டி என்ன சொல்றாங்களோ, அதைச் செய்வேன்" என பெருமிதத்தோடு பேசுகிறார் கருணை இல்லத்தில் 6ம் வகுப்பில் இருந்து, தங்கிப் படித்த தனலட்சுமி.

இவரைப்போலவே எண்ணற்ற குழந்தைகள் இங்கே படித்து சமூகத்தின் உயர் பொறுப்புகளில் பணியாற்றுகின்றனர். என் கனவு, அக்கறை, சகலமும் இந்தப் பிள்ளைகளின் நல்வாழ்வுதான். அது நான் எதிர்பார்த்தமாதிரியே நிறைவேறி வருவதில் எனக்கு கிடைக்கும் ஆத்மதிருப்தியை சொல்ல வார்த்தையே இல்லை" என்கிறார் ஜீன் ஆன்ட்டி.

தேசங்களைக் கடந்த அன்பின் சின்னம் இந்த ஜீன் ஆன்ட்டி!



---எம். செந்தில்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக