மண வாழ்க்கையில் இணைந்த கணவன் மனைவியை சட்டப்படி பிரிப்பதும், மீண்டும் சேர்த்து வைப்பதும் குடும்ப கோர்ட்களில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளாக உள்ளன. ஆயிரக்காலத்து பயிர்களை, ஆர்வக் கோளாறு காரணமாக ஆறு மாதத்தில் அறுத்து எரியத் தயாராகி விட்டனர் இளம் வயது ஜோடிகள்.
தாலியுடன் இளம் பெண்களும், ஏக்கப் பார்வையில் ஆண்களும் அதிகமாக காத்துக்கிடக்கும் இடமாக குடும்ப கோர்ட் வளாகம் மாறி விட்டது. காலை முதல் மாலை வரை தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடிகளை இங்கு பார்க்கலாம். தொடர்ந்து "வாய்தா'வில் ஓடும் வழக்குகளின் விசாரணை எப்போது முடியும், விவாகரத்து எப்போது கிடைக்கும், புது வாழ்க்கையை எப்போது துவக்கலாம் என திக்குத் தெரியாமல் ஆண்டுக்கணக்கில் இவர்கள் காத்திருக்கின்றனர்.விவாகரத்து வழக்குகள் நிலுவையில் இருக்கும் போதே, ஊராருக்கும், கோர்ட்டுக்கும் தெரியாமல், தாலி கட்டி சிலர் குடித்தனம் துவங்கி விட்டனர். இன்னும் சிலர், தாலி கட்டாமல் தனியாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு சிலர் முடிவு தெரியாமல் 10 ஆண்டுகளாகக் கூட கோர்ட்டுக்கு நடையாய் நடக்கின்றனர்.கோர்ட்களில் வழக்குகள் தேங்குவதற்கு, ஒரே ஆண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகளும், ஜீனாம்சம் கேட்பு வழக்குகளும் பதிவு செய்வதே இதற்கு காரணமாக உள்ளன.
வழக்குகள் அதிகமாவதால், வாய்தாவுக்கே கோர்ட்டில் நேரம் சரியாக உள்ளது. இதனால் வழக்குகளின் விசாரணை தேதிகள், ஆண்டுக்கு ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தளவுக்கு வழக்குகள் வரிசையாக வந்து கொண்டே இருக்கின்றன. கோவை குடும்ப நீதிமன்றத்தைப் பொறுத்த அளவில், ஒவ்வொரு ஆண்டும் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி விட்டன.கடந்த நான்கு ஆண்டுகளாக இது தொடர்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 1300க்கும் அதிகமான விவாகரத்து வழக்குகளும், 200க்கும் மேற்பட்ட ஜீவனாம்சம் கேட்பு வழக்குகளும் பதிவாகின.நடப்பு ஆண்டில், கடந்த 10 மாதங்களில் 1,225க்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகளும், 200க்கும் மேற்பட்ட ஜீவனாம்சம் கேட்பு வழக்குகளும் பதிவாகியுள்ளன.இப்படி ஒவ்வொரு ஆண்டும் விவாகரத்து வழக்குகள் அதிகரித்திருப்பது சமூகத்தில் ஒரு இக்கட்டான சூழலை உருவாக்கி உள்ளது.குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற மன உளைச்சலில்,குடும்ப பெரியவர்கள் சங்கடத்தில் ஆழ்ந்துள்ளனர்.விவாகரத்து மற்றும் சேர்ந்து வாழக் கோரும் வழக்குகள் குடும்ப கோர்ட் மட்டுமல்லாது, கோவை சட்ட மையத்திலும் நடக்கிறது. இங்கு ஒரு நாளைக்கு 5 முதல் 7 வழக்குகள் இருதரப்பு சம்மதத்துடன் விசாரிக்கப்படுகின்றன.
இவ்வழக்குகள் அனைத்தும் குடும்ப கோர்ட்டில் இருந்து பெறப்பட்டவையாகும்.தொடர்ந்து அதிகரித்து வரும் வழக்குகளால், விரைந்து வழக்குகளை விசாரிக்கமுடியாமல் கோவை குடும்ப நீதிமன்றம் திணறுகிறது. இதனால் வழக்குகள் முடிய தாமதமாகின்றன. இதை தவிர்க்க, கூடுதலாக ஒரு கோர்ட் துவக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. சமீபத்தில் ஐகோர்ட் இதற்கான அனுமதி வழங்கியும், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், கோர்ட் கட்டடம் கட்ட இடம் இல்லாததால் நின்று போனது. ஏற்கனவே 2001க்கு முன், கோர்ட்கள் செயல்பட்ட குதிரை வண்டி கோர்ட் வளாகம் தற்போது உபயோகத்தில் இல்லாமல் இருக்கிறது.இந்த வளாகத்தில் நீதிபதிகளுக்கான குடியிருப்பு கட்ட பல ஆண்டுகளாக திட்டம் இருந்த போதிலும், ஒரு பகுதியில் புதிய நீதிமன்றங்கள் அமைக்கலாம் என்ற முடிவும் ஏற்பட்டுள்ளதால், குதிரை வண்டி கோர்ட் வளாகத்தில் புதிய நீதிமன்றம் அமைக்க வேண்டும் என,கோவை வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் சென்னை ஐகோர்ட்டுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக