Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 31 ஜூலை, 2012

உழைப்பதற்கு வயது ஒரு பொருட்டல்ல :நிரூபித்தது 103

 செல்லப்பிள்ளையார்குளத்தில் 103 வயதிலும் உழைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு தினமும் மூதாட்டி பூ விற்று வருகிறார்.

ஆழ்வார்குறிச்சி அருகே ஏ.பி.நாடானூரில் உள்ள இந்து துவக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றிவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி கோமதியம்மாள். இவர்களது மகன் மகாலிங்கம். மகாலிங்கத்தின் மனைவி பன்னீர்செல்வம். ராமகிருஷ்ணன் கடந்த 1948ல் இறந்துபோனார்.
இவரது மனைவி கோமதியம்மாள் தனது வீட்டிலேயே தோட்டம் அமைத்து மல்லிகை செடி பயிரிட்டுள்ளார்.



 தினமும் காலையில் 6.30 மணிக்கு எழுந்து பூக்களை பறித்து அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் தனது ஒரே மகன் மகாலிங்கம் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற நிலையில் இறந்துபோனார். மனம் தளராத கோமதியம்மாள் தனது உழைக்கும் பணியை அதிகப்படுத்தி தினமும் பூ வியாபாரம் செய்து வருகிறார். 


தற்போது வயது முதிர்ந்த நிலையில் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்துவிட்டு தனது கிராமத்திற்குள்ளேயே நாள் ஒன்றுக்கு குறைந்தது 60 ரூபாயாவது கிடைக்கும் வகையில் பூ விற்று வருகிறார். தனது பேரன் பாலகிருஷ்ணனின் அரவணைப்பில் வசித்து வரும் கோமதியம்மாள், தனது கணவரின் பென்ஷன் தொகை வாங்குவதற்காக மாதத்திற்கு ஒருநாள் தனது பேரனுடன் பைக்கில் ஆழ்வார்குறிச்சி ஸ்டேட் பாங்க் வருகிறார் மாதம் 5 ஆயிரம் ரூபாய் வரை பென்ஷன் வந்தபோதிலும் 103 வயதிலும் தினமும் தனது தோட்டத்திலுள்ள பூவை தானே பறித்து பூ விற்று வருகிறார். பூ விற்று விட்டு ஓய்வெடுக்க விரும்பாமல் தென்னை குச்சிகளை கொ ண்டு துடைப்பம் செய்யும் பணியில் ஈடுபடுகிறார்.

சிறிய கம்பை கையில் வைத்து கொண்டு வேகமாக நடந்து பூ விற்க வரும் கோமதியம்மாள் மற்றும் ஏ.பி.நாடானூரில் 80 வயதிலும் தோசை வியாபாரம் செய்யும் பால்துரை போன்ற முதியவர்களை அரசு கவுரவிக்க வேண்டும். சிறிய வயதிலும் உழைக்காமல் சோம்பேறியாக இருக்கும் பலருக்கு மத்தியில் தள்ளாத வயதிலும் உழைப்பவரே உயர்ந்தவர் என்பதை நிரூபிக்கும் இவர்களது வாழ்வு பலருக்கு பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

திங்கள், 30 ஜூலை, 2012

புத்தகத்தை படிப்பவன் படிப்பாளி, வாழ்க்கையை படிப்பவன் புத்திசாலி!


வேலூர் அருகே கலவை ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியின் 7-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் 29.07.2012 அன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ராஜேஸ்வரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

மாணவ, மாணவிகளாகிய நீங்கள் பட்டம் பெற்றிருப்பது தான் உங்கள் முதல் சாதனை. இனிமேல் தான் உங்கள் வாழ்க்கை ஆரம்பமாக உள்ளது. இதுவரை உங்களை வழிநடத்தவும், உடலை வளர்க்க பெற்றோரும், அறிவை வளர்க்க ஆசிரியரும் இருந்தனர்.

இனி நீங்கள் தான் உங்களை பார்த்துக்கொள்ள வேண்டும். படித்தவர்களும் சரி, படிக்காதவர்களும் சரி பெற்றோரை கைவிட்டு விடாதீர்கள். எளிதாக வேலையில் அமர்ந்து விடலாம் என எதிர்பார்க்காதீர்கள். படித்துவிட்டால் மட்டும் போதாது. வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையை புரிந்து கொண்டு நடந்தால் மட்டுமே முன்னேற முடியும். "புத்தகத்தை படிப்பவன் படிப்பாளி மட்டுமே, ஆனால் வாழ்க்கையை படிப்பவன் மட்டுமே புத்திசாலி''.


வேலையில் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். இன்றைய உலகம் அதிக போட்டிகள் நிறைந்த உலகம் ஆகும். கடந்த கால ஏமாற்றமும், எதிர்கால ஏக்கமும் தான் மனிதனின் வாழ்க்கையை நடத்துகின்றன. விரும்பியதை அடைய நினைப்பது போல், அடைந்ததையும் விரும்ப கற்றுக்கொள்ள வேண்டும்.

பெற்றோரை மறக்காதீர்கள், பெற்றோர்களின் தியாகத்தால் தான் நீங்கள் படிக்க முடிந்தது. பெற்றோரை பாதுகாக்க வேண்டும். மூத்த குடிமக்களை பாதுகாக்க சட்டம் வந்துவிட்டது. இதை படித்தவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். பெற்றோரை பாதுகாக்காமல் இருப்பதற்கு தான் படித்தோமா? பெற்றோரை ஆனந்தமாக வைத்துக்கொள்ள இன்றே உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.


அதே போல் கல்லூரி ஆசிரியர்களையும், நீங்கள் படிக்க காரணமான அனைவரையும் மறக்காமல் வாழுங்கள். வாழ்க்கையில் கஷ்டப்படாமல் எதுவும் கிடைத்துவிடாது. தனிப்பட்ட முறையில் யாராலும் வாழ்க்கை நடத்தி விட முடியாது. எல்லோருடனும் சேர்ந்து வாழ்வது தான் வாழ்க்கை.
இவ்வாறு நீதிபதி ராஜேஸ்வரன் பேசினார்.

சனி, 28 ஜூலை, 2012

மெட்டலர்ஜி இன்ஜினியரிங் படிப்பு

பொறியியல் படிப்புகளில் உள்ள முக்கிய பிரிவுகளில் மெட்டலர்ஜி இன்ஜினியரிங் பிரிவும் ஒன்று. மெட்டலர்ஜி என்பது, மெட்டீரியல்ஸ் சயின்ஸ் மற்றும் மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங் ஆகியவை தொடர்பான துறையாகும்.


இது, மெட்டலிக் அம்சங்களின் பௌதீக மற்றும் ரசயானப் பண்புகளையும், அதன் உள்மெட்டலிக் இணைப்புகள் மற்றும் அதன் கலப்புகள் ஆகியவைப் பற்றி ஆய்வு செய்கிறது.
அனைத்து விதமான மெட்டல் தொடர்பான பகுதிகளையும் கொண்டு, ஒரு விரிவான துறையாக மெட்டலர்ஜி பொறியியல் விளங்குகிறது. பிசிக்கல் மெட்டலர்ஜி பிரித்தெடுக்கும் மெட்டலர்ஜி மற்றும் மினரல் புராசஸிங் போன்றவை அத்துறையின் 3 பெரும் பிரிவுகளாகும்.
பிசிக்கல் மெட்டலர்ஜி என்பது சிக்கல் தீர்த்தல் செயல்பாட்டில் பயன்படுகிறது. பல்வேறு விதமான உற்பத்தி மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படும் மெட்டாலிக் கூட்டமைப்பு வகைகளை மேம்படுத்தலாம்.


பிரித்தெடுக்கும் மெட்டரர்ஜி தொழில்நுட்பம் என்பது, தாதுக்களிலிருந்து மெட்டலை பிரித்தெடுக்கும் செயல்பாட்டில் பயன் படுத்தப்படுகிறது. புவி மேலோட்டில் இருந்து தாதுப் பொருட்களை சேகரிக்கும் செயல்பாட்டில் மினரல் புராசஸிங் தொழில்நுட்பம் பயன்படுகிறது.
மெட்டலர்ஜிக்கல் பொறியியல் பாடத்தை முதன்மையாக எடுத்துப் படிக்கும் ஒருவர், மேற்கூறிய 3 துறைகளைப் பற்றிய அடிப்படைகளைக் படிப்பதோடு, பொதுவான பொறியியல் பாடத்தையும் படிப்பார்கள்.


நமது சமூகம் இயங்க நமக்கு உலோகங்கள் தேவை. கார்கள், பைக்குகள், விமானங்கள் மற்றும் கட்டடங்கள் உள்ளிட்ட ஏராளமான அம்சங்களின் முக்கியப் பகுதி பொருளாக உலோகம் உள்ளது. எனவே, இத்தகைய உலோகங்கள் மற்றும் தாதுப்பொருட்களை உற்பத்தி செய்தல் மற்றும் வடிவமைத்தல் மற்றும் மெட்டல் பண்புகளை ஆராய்தல் போன்ற பல விஷயங்களை மெட்டலர்ஜிக்கல் பொறியியல் கற்றுத்தருகிறது.


இதைதவிர, வெவ்வேறு விதமான உலோகங்களை சோதனை செய்தல், சூழ்நிலை மாற்றங்கள் மற்றும் பிற நிலைகளைப் பற்றியும் இத்துறை மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்.
மெட்டலர்ஜி நிபுணர்கள் என்பவர்கள், தாதுக்களை கையாளுதல் மற்றும் புதிய கூட்டிணைவுகளை மேம்படுத்தல் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள், மேலும் வெவ்வேறு வகையான உலோகங்களின் செயல்பாட்டிற்கான புதிய முறைகளையும் உருவாக்குகிறார்கள்.


மெட்டலர்ஜி படிப்பை தமிழ்கத்தில் வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்:
1. என்.ஐ.டி., திருச்சி
2. பி.எஸ்.ஜி., டெக்னாலஜி, கோவை
3. அரசு பொறியியல் கல்லூரி, சேலம்

மாணவர்கள் படிப்பு, வேலை, பணம் என வாழ்க்கையை சுருக்கிக்கொள்ளக்கூடாது

 மாணவர்கள் படிப்பு, வேலை, பணம் என தங்கள் வாழ்க்கையை சுருக்கிக்கொள்ளக்கூடாது. அதையும் தாண்டி சமூகத்திற்காகவும், நாட்டிற்காகவும் செய்யவேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் எஸ்.காந்திசெல்வன் கூறினார்.
 
 சென்னிமலை ஸ்ரீ ராஜீவ்காந்தி தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் காந்திசெல்வன் பேசியது:- "நாட்டில் பெரும்பாலான கல்விக்கூடங்கள் வியாபார நிறுவனங்களாக மாறிவிட்டது. எல்கேஜி வகுப்புகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு கூட பெற்றோர்கள் லட்சங்களை செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறு பணம் செலுத்தி படிக்க வைக்கும் பெற்றோர்கள் குழந்தைகள் மனதில் பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தை மட்டுமே உருவாக்குகிறார்கள்.
 
 மாணவர்களும் படிப்பு, வேலை, பணம் என தங்கள் வாழ்க்கையை சுருக்கி கொள்கிறார்கள். இவைகளை தாண்டி சமூகத்திற்காகவும், நாட்டிற்காகவும் செய்ய வேண்டிய பணிகள் மாணவர்களுக்கு நிறைய உள்ளது. மாணவர்கள் தங்களிடம் உள்ள தனித்திறமையை சமூக நலனுக்கும், இயலாதவர்களுக்கு சேவை செய்வதற்கும் பயன்படுத்த வேண்டும்.
 
 இன்னும் 10 ஆண்டுகளில் 50 லட்சம் தொழில்நுட்ப மாணவர்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆண்டுக்கு 52 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கிவருகிறது. தொழில் நுட்ப கல்வி பயிலும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் தனியாக தொழில் தொடங்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என்றார்.

வியாழன், 26 ஜூலை, 2012

கடையநல்லூர் திராட்சையை காணவில்லையே !

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திராட்சைகள் விளைந்தாலும் தித்திப்பிற்கும், தேன் சுவைக்கும் பெயர் பெற்றது கடையநல்லூர் பகுதியில் விளையும் கருப்பு நிற திராட்சைகள்தான். 

கைத்தறிக்கு பெயர்பெற்ற கடையநல்லூரின் புகழ் இந்த கருப்பு திராட்சைகளினால் மேலும், மேலும் சிறப்புற்றது. 1970ம் ஆண்டில் கடையநல்லூர் பகுதியில் கால்களம் பதித்த இந்த கருப்புநிற பன்னீர் ரக திராட்சை மெல்ல, மெல்ல படிப்படியாக கடையநல்லூர், கிருஷ்ணாபுரம், குமந்தாபுரம், முத்துசாமியாபுரம், சின்னபனையங்குளம், காசிதர்மம், கம்பனேரி என விரிந்து சுமார் ஆயிரம் ஏக்கரில் அமோகமாக விளைச்சலானது. 

நெல், கம்பு, சோளங்களை மட்டுமே பயிர் செய்து போதிய வருவாய் ஈட்ட முடியாமல் திணறி வந்த விவசாயிகளுக்கு திராட்சை விவசாய வரவு மகிழ்ச்சியை தந்ததுடன் அப்பகுதியினுள் சுமார் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பையும், பொருளாதார மேன்மையையும் ஏற்படுத்தியது. 

ஒரு காலகட்டத்தில் இவ்வட்டாரத்தில் விளையும் திராட்சைகள் மாநிலம் விட்டு மாநிலமும், ஏன் மாலத்தீவு, பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. 

இப்படி ஓஹோவென திராட்சை உற்பத்தியில் கொடி கட்டிப்பறந்த கடையநல்லூரில் இன்று அரசு சரியான ஊக்கத்தையும், வேளாண் சலுகைகளையும் கொடுக்காததால், ஆயிரம் ஏக்கரில் பயிரான திராட்சை விவசாயம் இன்று வெறும் 30 ஏக்கரில் கூட சீரான திராட்சை விவசாயம் இன்றியுள்ளது. 

இதுகுறித்து ராமநாதன் என்ற விவசாயி கூறும்போது:- 

வேளாண் இடுபொருட்கள், பூச்சி மருந்து உரம் விலை உயர்வு, கூலி வேலை உயர்வு இதற்கும் மேலாக உற்பத்தி செய்யப்படுகிற திராட்சையை பாதுகாக்க குளிர்சாதன வசதி, போதிய விலையில்லாமை என பல வகையிலும் விவசாயிகள் நசுக்கப்பட்டு வருவதாலும், அரசும் திராட்சை விவசாயிகளிடம் போதிய சலுகைகள் காட்டாததாலும் திராட்சை விவசாயம் பரிதவித்து நிற்கிறது. 

கிலோ பத்து ரூபாய்க்கு கடையநல்லுர் வீதிகளில் கூவி, கூவி விற்கப்பட்ட திராட்சை இன்று கடைகளில் கிலோ ஒன்றுக்கு 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது என்றார். 

காணாமல் போன கடையநல்லூர் திராட்சை உற்பத்தி மீண்டும் உயிர் பெற அரசு கவனம் செலுத்துமா? என்பதே திராட்சை விவசாயிகளின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி : மணிமுத்தாறு ,பாபநாசம் அருவிகளுக்கு தடை


புலிகள் சரணாலயம் அமைந்துள்ள இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்ககூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதையடுத்து நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தேசிய விலங்கினமான புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் புலிகள் சரணாலய பகுதியை சுற்றுலா தலமாக பயன்படுத்தகூடாது என சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

இதையடுத்து களக்காடு, முண்டன்துறை புலிகள் காப்பக எல்லையில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவி, காரையார் பாணதீர்த்த அருவி ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும், பாபநாசம் மலையில் படகு சவாரி செய்யவும் வனத்துறை நேற்று முதல் தடை விதித்துள்ளது.

இதேபோல் களக்காடு செங்கல்தேரி, கோதையாறு கன்னிக்கட்டி, கொடமாடி போன்ற இடங்களுக்கும் சுற்றுலா பயணிகள் செல்லக்கூடாது என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் மிகச்சிறந்த சுற்றுலா தலங்களாக திகழும் பாணதீர்த்தம், மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும். இங்கு சுற்றுலா பயணிகள் எல்லா மாதமும் வருவார்கள். இப்போது அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எனவே சுப்ரீம் கோர்ட்டு இந்த முடிவில் குறிப்பிட்ட சுற்றலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல நிபந்தனைகள் பேரில் அனுமதி வழங்க வேண்டும் என்கின்றனர். 

இதுகுறித்து புலிகள் காப்பக துணை இயக்குனர் சேகர் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையடுத்து புலிகள் காப்பக பகுதியில் அமைந்துள்ள அருவிகள் உள்ளிட்ட சுற்றலா தலங்களுக்கு பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாபநாசம் அணையில் படகு போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் புலிகள் காப்பக பகுதியில் உள்ள காரையாறு சொரிமுத்தையனார் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், காணிக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

பெற்றோரை பேணுவோம் ! சொர்க்கத்தை அடைவோம் !

ஒரு வீடு என்பது மண்ணாலும் கற்களாலும் ஆனது. அதுபோல் ஒரு குடும்பம் என்பது அன்பாலும் பாசத்தாலும் ஆனது. அந்தப்பாசப்பிணைப்பு இன்று கொஞ்சங் கொஞ்சமாக மனித மனங்களிலிருந்து கழன்று கொண்டிருக்கிறதோ என்கின்ற ஐயப்பாடு தோன்றுகிறது. 

பெற்றோர் அன்பு, சகோதர பாசம் உறவுத்தொடர்புகள் எல்லாம் குறைந்து வருகிறது. 'வீட்டின் பெயரோ அன்னை இல்லம் அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்.' சில இடங்களில் இன்று இந்த நிலைதான். இந்த நிலையில் தாய் - தந்தை உறவு பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம். 

தாய்க்கு முதலிடம்: 'மனிதர்களுள் யாருக்கு நான் அதிகக் கடன்பட்டுள்ளேன்?' இது நபித்தோழர் ஒருவரின் வினா. 'தாய்' என்று பதிலளித்தார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். 'அடுத்து யார்?' என மீண்டும் அவர் கேட்க, 'தாய்' என்றே கூறினார்கள். மூன்றாவது முறையாக 'அடுத்து யார்?' என்று கேட்டபோதும் 'தாய்' என்றே பதில் வந்தது. 'அடுத்து யார்?' என நான்காம் முறையாக அவர் கேட்க 'தந்தை' என்று பதிலளித்தார்கள் நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். ( அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, - புகாரீ ஷரீஃப்.)

ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு தாய்-தந்தை இருவருமே காரணம் என்பது உண்மையானாலும் தந்தையைவிட தாய்க்கே முதலிடம் வழங்குகிறது இஸ்லாம். காரணம் என்ன? திருக்குர்ஆன் கூறுகிறது: 'அவனுடைய அன்னை, அவனைச்சிரமத்துடனேயே கருவுற்று சுமந்திருந்தாள். சிரமப்பட்டுத்தான் அவனைப் பெற்றெடுத்தாள். மேலும், அவனைச் சுமந்திருப்பதற்கும் பால்குடிப்பை மறக்கடிப்பதற்கும் முப்பது மாதங்கள் ஆகின்றன.' ( அல் குர்ஆன் 46:15). 

தியாகத்திற்கு தாயைவிட வேறு சிறந்த உதாரணம் சொல்வது சிரமம். அவள் ஒரு குழந்தையின் பிறப்புக்காக இறப்பின் வாசல்வரை சென்று வருகிறாள; தன் உயிரைப் பணயம் வைத்துக் குழந்தையைப் பெறுகிறாள். குழந்தைக்காகத் தாய் செய்யும் தியாகம் மகத்தானது. கொஞ்ச நேரம் இளைப்பாறிக்கொள்ள ஒரு பத்து நிமிடம் மற்றொருவரின் விரகுச்சுமையைத் தாங்கி நிற்கவே ஒதுங்கிவிடுகிற இந்த காலத்தில் தொடர்ந்து பத்து மாதம் ஒரு சிசுவைத் தன் வயிற்றில் சுமப்பதென்பது எவ்வளவு பெரிய தியாகம்! 
குழந்தைக்கு நோய் என்றால் தான் பத்தியம் இருக்கிறாள் என்பது மாத்திரம் அல்ல, நோய்வாய்ப்பட்ட குழந்தை மருந்து சாப்பிட விரும்பாதபோது நலமாயுள்ள தாய், தானும் அந்த மருந்தை சிறிது குடிக்கிறாள். ஏன்? தாய்க்கும் தனக்கும் ஒரே நோய்தான் என்று குழந்தை எண்ணி ஆறுதல் அடைவதற்காக. ஒரு அறிஞரின் சொல் எப்படி இருக்கிறது பாருங்கள்: 'ஒரு தாய் தனக்கு என்னவாவெல்லாம் இருக்கிறாள் என்பதை மனிதன் கடைசிவரை உணர்வதில்லை. அவன் அதை உணரும் போது அவள் உயிரோடு இருப்பதில்லை'. சிலரது வாழ்வில் இது உண்மையுங்கூட! 

தாயன்பு: ஒரு பெண் தன் இரு பெண் மக்களுடன் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வந்து யாசகம் கேட்டு நின்றாள். அவளிடம் மூன்று பேரித்தங்கனிகளை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கொடுக்கின்றார்கள். அவற்றில் ஒன்றை தனக்கு வைத்துக்கொண்டு மற்ற இரண்டையும் தன் மகள்களுக்கு சாப்பிடக் கொடுக்கிறாள். அவற்றை அவர்கள் சாப்பிடுகின்றனர். தனக்குரியதை சாப்பிட அந்த பெண் எத்தனித்த போது அதையும் தங்களுக்குத் தரக்கேட்டு அந்தக் குழந்தைகள் அடம்பிடிக்கின்றன. எவ்வித முகச்சுழிப்புமின்றி சந்தோஷமாக அப்பழத்தை இரண்டாகப் பிளந்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்துவிட்டு அவர்கள் சாப்பிடுவதை ரசித்துக் கொண்டிருந்தாள். இந்த நிகழ்ச்சி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹாவின் மனதைப்பெரிதும் பாதித்தது. இரவில் வீடு திரும்பிய நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் இந்த நிகழ்வைக்கூற, மெய்சிலிர்த்துப் போன நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'அவள் நேரடியாக சுவனம் செல்வாள்' என்ற சுபச்செய்தியை தெரிவிக்கிறார்கள். ( அப்துல்லா இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு - முஸ்லிம் ). 



கண்ணியமான உறையாடல்: தாய் - தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ இருவருமோ முதுமை அடைந்துவிட்ட நிலையில் உம்மிடம் இருந்தால் அவர்களை 'சீ' என்றுகூடக் கூராதீர். மேலும் அவர்களைக் கடிந்து பேசாதீர். மாறாக அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக ( திருக்குர் ஆன் 17:23 ). பொதுவாக வயசு கூடக்கூட டென்ஷன் அதிகமாகும்.

இதுமாதிரி முதுமைப் பருவத்தில் பெற்றோர் நம் மனம் புண்படும் விதத்தில் நம்மைப் பேசிடலாம், ஏசிவிடலாம். ஆனாலும்கூட அதற்குப்பகரமாக நாம் பேசிடும் ஒவ்வொரு வார்த்தையிலும் கண்ணியம் இழையோட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் பெற்றோரின் மறியாதையைக் குதறிவிடக்கூடாது. 'பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்று' என நபிகள்நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் கண்டிக்கிறார்கள். நீ நேரடியாகத் திட்டுவது ஒருபுறம் இருக்கட்டும், நீ ஒருவனின் தந்தையைத் திட்ட அவன் பதிலுக்கு உன் தந்தையைத் திட்டக்கூடிய சூழலைக்கூட உருவாக்கி விடாதே என்று உணர்த்துகிறார்கள். ( முஸ்லிம் )

உணவளிப்பது: நடைமுறை வாழ்வில் பெற்றோருக்கு உணவூட்டிப் பராமரிக்கும் விஷயத்தில்கூட கஞ்சத்தனம் செய்யப்படுகிறது. பெற்றோர் வசதியாக இருந்து பூர்வீகச்சொத்துகளில் கொஞ்சம் கூடுதலாகக் கிடைத்தால் உணவு, வசதி எல்லாவற்றிலும் அவர்களுக்கு சகல மரியாதையும் கிடைக்கிறது. இல்லையெனில் சாதாரண அளவுக்குக்கூட இருக்காது. நகை பணம் தந்தால் அம்மா அப்பா இல்லாவிட்டால் டப்பா. இது எந்த வகைக்குணமோ? அம்மா அப்பா உயிரோடிருக்கும்போதே ' நாற்காலி உனக்கு, கட்டில் எனக்கு, பீரோ உனக்கு கிரைண்டர் எனக்கு' என்று பொருட்களைப் பங்கு வைத்து, முடிவில் அப்பா உன்னிடம் அம்மா என்னிடம், அப்பாவுக்கு ஒரு வீட்டில் சாப்பாடு அம்மாவுக்கு இன்னொரு வீட்டில் சாப்பாடு என்று ஜடப்பொருட்களாகப் பெற்றோரைப் பங்கு பிரிக்கும் பண்பாட்டுச் சீர்குலைவை எண்ணி வருந்தாமல் இருக்க முடியவில்லை. 

பெற்றோர்கள் இருவரையும் ஒருசேர வைத்து உணவு கொடுத்தால் என்ன? இருவருக்கும் சேர்த்து சமைப்பது கஷ்டமா? பொருள் நஷ்டமாகிவிடுமா என்ன? நாளை இவர்களை இவர்களுடைய பிள்ளைகள் சோறு ஒருவீட்டிலும் குழம்பு ஒரு வீட்டிலும் போட்டு கொடுமைப் படுத்தினால் என்ன செய்வார்கள்? 'எங்களுக்கே தட்டுப்பாடு, இதிலே பெற்றோர்களை எங்கே கவனிப்பது?' என்று கேட்பவர்களின் காதில் ஒருசெய்தியைப் போடவேண்டியுள்ளது. ஏழெட்டுக் குழந்தைகளுக்கு, தாய், தந்தை இருவருமாகச் சேர்ந்து சோறூட்ட முடிகிறதென்றால் அந்த ஏழெட்டுப்பேர் சேர்ந்து அந்த இருவருக்கும் சோறூட்ட முடியாதா என்ன! 

இதிலே நகைப்பிற்குரிய செய்தி, உயிரோடு இருக்கும்போது ஒரு வாய் சோறு போட்டு பெற்றோரைக் கவனிக்காத சில ஆசாமிகள், அவர்களின் மரணத்திற்குப்பின் 'ஃபாத்திஹா' கொடுக்கிறோம் என்னும் பெயரில் பல்வேறு உணவுப்பொருட்களை முன்னால் வைத்து அமர்க்களப்படுத்துவார்கள். சிலர் திருமணத்திற்கு முன் பெற்றோருக்கு நன்கு உபகாரம் புரிவார்கள். ஆனால் மனைவியின் வருகைக்குப் பிறகு மாற்றங்கள் ஏற்படும்.தலையணைமந்திரம் என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. உடலால் தளர்ச்சியடைந்துவிட்ட பெற்றோரை மனைவியின் சொல்கேட்டு மனத்தளவிலும் தளர்ச்சியடைய வைப்பவன் மனிதாபமுள்ள மகனாக இருக்க முடியாது.

சிந்தனைக்கு சில அறிவுரைகள்: குழந்தைப் பருவத்தில் உங்கள் பெற்றோருக்கு நீங்கள் உபகாரம் புரிந்தால் முதுமைப் பருவத்தில் உங்களுடைய குழந்கைள் உங்களுக்கு உபகாரம் புரிவார்கள்.(அபூஹுரைரா ரளில்லாஹுஅன்ஹு (ஹாகிம்) இதை இப்படியும் புரட்டிப்போட்டுசொல்லலாம். தம்முடைய பெற்றோரை அவமதிக்கும் ஒவ்வொருவரும் அவர்தம் பிள்ளைகளால் பிற்காலத்தில் அவமதிக் கப்படுவது நிச்சயம். 




அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்க, பைஹகியில் பதிவாகியுள்ள ஆதாரப்பூர்வமான நபிவழிச்செய்தி: 'ஒவ்வொரு குற்றத்திற்கான தண்டனையும் மறுமையில் வழங்கப்படுவதுதான் இறைவிதி. ஆனால் பெற்றோருக்கு நோவினை செய்தவன் அதற்கான பிரதிபலனை இவ்வுலகிலேயே கண்கூடாகக் கண்டபின்பே இறப்பான். (நவூதுபில்லாஹ்)



மனப்பதிவுக்கான இன்னொரு செய்தி: 'ஒரு நபித்தோழர் நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் அவைக்கு வந்து, நான் இஸ்லாத்திற்காக நாடுதுறந்து செல்லத்தங்களிடம் உறுதிமொழிஎடுத்திட வந்துள்ளேன்.என் தாய், இதற்கு அனுமதியளிக்காத நிலையில் அவரையழவைத்துவிட்டு இங்கே புறப்பட்டு வந்துள்ளேன்.' எனக் கூறினார். உடனே ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மொழிந்த வார்த்தை என்ன தெரியுமா? 'உடனே இங்கிருந்து புறப்பட்டு அழுதுகொண்டிருக்கும் உனது தயைச்சிரிக்க வைத்துவிட்டு பிறகு வந்து என்னைப்பார்.'(அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹுஅன்ஹு-அபூதாவூது).

நம்மில் சிலர் பெற்றோரை அழவைத்துவிட்டு தொழுது அல்லாஹ்வை சந்தோஷப் படுத்திடலாம் என்கிற எண்ணத்தில் இருக்கலாம். அவர்களுக்கான நபிமொழி செய்தி இது: 'அல்லாஹ்வின்; பொருத்தம் பெற்றோரின் பொருத்தத்தில் இருக்கிறது. அல்லாஹ்வின் கோபம் பெற்றோரின் கோபத்தில் இருக்கிறது.'பொதுவாக திருக்குர்ஆன் எல்லா இடங்களிலும் தாயோடு இணைத்து தந்தைக்கும் பணிவிடை செய்வதையே வலியுறுத்துகிறது. திருக்குர்ஆன் தெளிவுரையின் சிறந்தவராக கருதப்படும் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது திருக்குர்ஆன் விரிவுரையில் ''மூன்று திருக்குர்ஆன் வசனங்கள் ஒன்றுடன் இன்னொன்று இணைத்து வந்துள்ளன. ஒன்றை விட்டு விட்டு மற்றொன்றை மட்டும் செய்தால் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான்.' என்கிறார்கள். 

அது: 

1.'அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள், அவன் தூதருக்கும் வழிப்படுங்கள்'(3:32) என்கிறது திருக்குர்ஆன். அல்லாஹ்வுக்கு மட்டும் வழிப்பட்டு அவன் தூதருக்கு வழிப்படாவிட்டால் அவனை அல்லாஹ் ஏற்க மாட்டான். (இங்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழிப்படுங்கள் என்பது அவர்கள் சொல்லுக்கு கட்டுப்படுங்கள் என்பதாகும்) 

2. ''தொழுகையை நிலை நிறுத்துங்கள் ஜகாத்தையும் கொடுங்கள்.'' (2:43) 

என்கிறது திருக்குர்ஆன். வசதியுள்ள செல்வந்தன் ஜகாத் கொடுக்காமல் தொழுகையை மட்டும் தொழுதால் ஈடேற்றம் கிடைக்குமா? 

3. ''எனக்கும் (அதாவது அல்லாஹ்வுக்கும்) உன்னுடைய தாய் தந்தையர்க்கும் நன்றி செலுத்தி வருவாயாக.'(31:14) என்கிறது திருக்குர்ஆன். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவன் தாய் தந்தைக்கு நன்றி செலுத்தாவிட்டால், அதையும் அல்லாஹ் ஏற்கமாட்டான்'' என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் விளக்குகிறார்கள். 



அல்லாஹ்வின் அருள்மறை தெரிவிக்கிறது: ''அந்த இறைவணைத்தவிர வேறு எவரையும் நீங்கள் வணங்காதீர்கள். தாய் தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ இருவரோ முதுமையை அடைந்து விட்ட நிலையில் உம்மிடம் இருந்தால், அவர்களை 'சீ' என்றுக் கூட கூறவேண்டாம். மேலும் அவர்களைக் கடிந்து பேசி விரட்டவும் வேண்டாம். ஆவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக: மேலும், 'என் இறைவனே நான் குழந்தையாக இருந்தபோது என்னை இவர்கள் எவ்வாறு (அன்போடும் பாசத்தோடும்) வளர்த்தார்களோ, அவ்வாறே, நீயும் இவர்கள் மீது கருணை புரிவாயாக! என்றும் கூறி பிரார்த்திப்பீராக!'' (திருக்குர்ஆன் 17:23,24) 

அதுமட்டுமின்றி, 'நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கம் நலம்; செய்ய வேண்டியது) பற்றி அறிவுறுத்திக் கட்டளையிட்டுள்ளோம்.' (திருக்குர்ஆன் 31:14) என்று பல இடங்களில்அ தாய் தந்தை இருவருக்கும் அடிபணிந்து நன்றி செலுத்தி வருமாறு கூறும் இல்லாஹ், தாயின் தகுதியை தந்தையைவிட ஒருபடி மேலாக உயர்த்திச் சொல்வதற்கான காரணத்தையும் கூறுகிறான். 

''அவனுடைய தாய் பலவீனத்தின் மேல் பலவீனம் கொண்டவளாக அவனைத் தன் கர்ப்பத்தில் சுமந்தாள், மேலும் அவன் பால்குடி மறக்க இரண்டு வருடங்கள் பிடிக்கின்றன.' (அல் குர்ஆன் 31:14)என்று தாய் அனுபவிக்கும் துன்பத்தை தெளிவாகக் கூறகிறான். 'பலவீனத்தின் மேல் பலவீனமாக' என்ற அல்லாஹ்வின் கூற்றுக்க இன்றைய மருத்துவ வல்லுநர்கள் கூறும் விளக்கத்தை கவனியுங்கள்: 

குழந்தை தன் எலும்புகள் வளரத் தேவையான 'கால்சியம்' சத்தை தாயின் எலும்புகளிலிருந்து உறிஞ்சிக் கொள்கிறது. அதே போல் தனக்குத் தேவையான இரும்புச்சத்தை தாயின் இரத்தத்திலிருந்து பெற்றுக் கொள்கிறது. 

தாயின் கருப்பைச் சுவர்கள் குழந்தைக்கு வேண்டிய இரத்தத்தை அதிகரிப்பதால் விரிவடைகின்றன. இதனால் தாயின் மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைகிறது. தலை சுற்றல்கூட வரும். தாயின் இதயம் கற்ப காலத்தில் மட்டும் மிக அதிகமாக இயங்குகிறது. இதனால் தாய்க்கு அதிக களைப்பு நெஞ்சுக்கரிப்பு கூட ஏற்படுகிறது. 

குழந்தையின் எடை அதிகரிக்கும்போது தாயின் கீழ் முதுகில் வலி ஏற்படுகிறது. இதன் மூலம் தலைவலி, வயிற்று வலி, கால்வலி, பார்வையில் மந்த நிலை ஏற்படுகிறது. 

பொதுவாக குழந்தை பெற்ற பின் தாய்மார்களில் 25 முதல் 50 சதவிகித தாய்மார்கள் மனநலக்குறைவு அடைகிறார்கள் என்கின்றனர் மருத்துவ மேதைகள். மெய் சிலிரக்க வைக்கும் தாயின் தியாகத்தை மறக்கலாமா?

ராட்சசியாக இருக்கும் தாய்க்குமா மரியாதை!

சிலருக்கு ஒரு சந்தேகம் ஏற்படுவதுண்டு: ஒரு ராட்சசியாக இருக்கும் தாய்க்குமா மரியாதை செய்ய வேண்டும்?

ஆம்! மரியாதையும் பணிவிடையும் செய்தே ஆக வேண்டும். இஸ்லாத்தின் பார்வையில் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிற பாவத்தை விட பெரும்பாவம் எதுவும் இந்த உலகில் இல்லை. அப்பேர்பட்ட பாவம் புரிபவளாக ஒரு தாய் இருப்பினும் அவருக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்தே ஆக வேண்டும். 

ஹள்ரத் அஸ்மா பின்த் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹா என்கின்ற பெண்மணியின் தாயார் முஸ்லிமாகாத நிலையில் அல்லாஹ்வுக்கு இணை வைப்பவராக இருந்து கொண்டு தம் மகளை தேடி வந்த போது 'யா ரசூலுல்லாஹ், என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார், நான் அவருடன் உறவாடலாமா?' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'ஆம்! நீ உன் தாயை பேணி இரக்கத்தோடு நடந்து கொள்,' என்றார்கள். ( ஆதாரம்: புகாரி ) 

முஸ்லிமாகாமல் இணை வைக்கிற பெரும் பாவத்தைச் செய்து வருகிற தாயே ஆனாலும், அவரைப் பேணி வருவது கட்டாயம் என்றால், ஒரு தாய் ராட்சசியாக இருக்கிறார் என்பதற்காக அவரை மதிக்காமல் இருக்க இஸ்லாம் அனுமதிக்குமா என்ன? ராட்சசியாக இருந்தாலும் அவரையும் இரக்கத்தோடு அணுகுவதே இஸ்லாத்தின் ஆணை. 

'தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது'' என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்பதை மறந்து விட வேண்டாம். நாம் அணைவரும் பெற்றோரைப் பேணக்கூடியவர்களாகத் திகழ எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக,

புதன், 25 ஜூலை, 2012

சொந்த நாட்டிலேயே அகதிகளாகும் முஸ்லிம்கள்

அசாம் மாநிலம் கோக்ராஜ்கர், துப்ரி மாவட்டங்களில் 3 நாட்களுக்கு முன்பு, முஸ்லிம்களுக்கு எதிராக "போடோ" இனத்தவர்கள்  நடத்திய திடீர் தாக்குதல், மிகப்பெரும் இனக்கலவரமாக மாறியது. இந்த வன்முறை கட்டுக்கடங்காமல் ஆகிவிட்டது.  32 பேர் உயிரிழந்தனர். ஆயிரக் கணக்கானோர் படுகாயமடைந்தனர். 21 மாவட்டங்களில் கலவரம் பரவி உள்ளது.  வன்முறைக் கும்பல் வீடுகளை அடித்து நொறுக்கியும், தீ வைத்தும் கொளுத்தியும் வெறியாட்டம் நடத்தி வருவதால், பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட 1 லட்சம்  பேர், 75 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  வன்முறை தீவிரமடைந்ததால், வடகிழக்குப் பகுதிகளுக்குச் செல்லும் 31 ரயில்கள் இடையில் நிறுத்தப்பட்டன.   

ரயில் போக்குவரத்து இன்றி வெளியூர் செல்லும் 30,000 பயணிகள் தவிக்கவிடப்பட்டுள்ளனர்.   போலீஸார், நேற்று  (செவ்வாய்க்கிழமை)  துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 4 பேர் உயிரிழந்தனர்.  வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்து அங்கு அமைதியை ஏற்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங், மாநில முதல்வர் தருண் கோகோய்க்கு உத்தரவிட்டுள்ளார்.    பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. 

வன்முறையில் ஈடுபடுபவர்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிகாங் பகுதியில் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது. வன்முறை பரவுவதை தொடர்ந்து, சிராங் மற்றும் துப்ரி மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த பகுதிகளில் ராணுவம் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது.    மாநில வருவாய்த் துறை அமைச்சர் பிருத்வி மஜ்கி, விவசாயத் துறை அமைச்சர் நிலமோனி சென் தேகா ஆகியோரை வன்முறை பாதித்த பகுதிகளுக்கு முதல்வர் தருண் கோகோய் அனுப்பிவைத்துள்ளார். 

ஏற்கனவே, மாநில வனத்துறை அமைச்சர் ராக்கிஃபுல் ஹுசைன், உணவு வழங்கல் துறை அமைச்சர் ஹஸ்ருல் இஸ்லாம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் சதன் பிரம்மா ஆகியோர் கோக்ரஜார் மாவட்டத்தில் முகாமிட்டு மக்களை அமைதி காக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர். வன்முறை பாதித்த பகுதிகளை அசாம் மாநில காவல்துறை தலைவர் ஜெயந்தா நாராயண் சௌத்ரி, இன்று (புதன்கிழமை) பார்வையிடவுள்ளார்.

என் எண்ணங்களை பேச்சில் மட்டுமல்ல செயலிலும் காட்டுவேன் : ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

நாட்டின் 13வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். பார்லிமென்டின் மையப்பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி கபாடியா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, மத்திய அமைச்சர்கள், மாநில கவர்னர்கள் உள்ளிட்டோர் இப்பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்

தலைவரின் நினைவிடங்களில் பிரணாப் அஞ்சலி :நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னதாக, தனது இல்லத்திலிருந்து கிளம்பிய பிரணாப் முகர்ஜி, மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவிடம், முன்னாள் பிரதமர் ராஜிவின் நினைவிடமான வீர் பூமி, இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திராவின் நினைவிடத்திலும் அவர் அஞ்சலி செலுத்தினார்.

21 குண்டுகள் முழங்க பிரணாபுக்கு மரியாதை :நாட்டின் முதல் குடிமகன் எனும் உயரிய பொறுப்பான ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி இன்று பதவியேற்றுக்கொண்டார். புதிய ஜனாதிபதியாக பிரணாப் பதவியேற்றதும் அவருக்கு இந்திய ராணுவம் சார்பில் 21 குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்பட்டது.

ஜனாதிபதி பிரணாப் உரை : நாட்டின் புதிய ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பொறுப்பேற்ற பின், ஏற்புரை நிகழ்த்தினார். அதில் அவர் கூறியதாவது, மேற்குவங்க மாநிலத்தின் சிறிய கிராமத்தில் பிறந்த நான், நாட்டின் தலைமை பீடத்தில் அமர்ந்திருப்பது குறித்த மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.


 நாட்டு நலனிற்காக விருப்பு வெறுப்பின்றி பணியாற்றுவேன், அரசியல் சாசனத்தை காக்க உறுதி கொண்டுள்ளேன். நாட்டிலிருந்து வறுமையை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை, மக்களோடு இணைந்து மேற்கொள்வேன், நாட்டின் பாதுகாப்பிற்கு அரணாக இருப்பதே ஜனாதிபதி அலுவலகத்தின் நோக்கத்தை முழுமூச்சாக கொண்டு நிறைவேற்றுவேன். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வேன், ஏழைகளும் இந்நாட்டின் அங்கம் என்பதை உணர்ந்து அதன்படி செயலாற்றுவேன். 


மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர் கண்ட கனவை நனவாக்க பாடுபடுவேன். இனம், மதம் மற்றும் ‌மொழி அடிப்படையிலான வேறுபாடுகளை களைவேன், நாட்டின் இறையாண்மையை காப்பேன், எனது எண்ணங்களை பேச்சில் மட்டுமல்லாமல் செயலிலும் காட்டுவேன் என்று அவர் கூறினார்.

திங்கள், 23 ஜூலை, 2012

மதுவை ஒழிக்க இந்திய அளவில் போராட்டங்களை நடத்த வேண்டும் : குமரி அனந்தன்

 மதுவை ஒழிக்க அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும் என குமரி அனந்தன் ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்தார்.
 தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, தென்னிந்திய காந்திய கிராம நிர்மாண சேவா தளம் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் நடைபெற்றது.
 இந்த உண்ணாவிரதத்திற்கு தலைமை வகித்து, காந்தி பேரவையின் தலைவர் குமரி அனந்தன் பேசியதாவது: திமுக அரசு கொண்டு வந்த பல திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா ரத்து செய்துள்ளார். ஆனால், திமுகவால் கொண்டு வரப்பட்ட மதுவை ஒழிக்க முதல்வர் ஏன் முன்வரவில்லை. மதுவையும் ஒழிக்க முதல்வர் முன்வரவேண்டும்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இதற்காக அவருக்கு துணை நிற்க காந்தியவாதிகளான நாங்கள் தயாராக இருக்கிறோம்.
 மது மனித குலத்துக்கு எதிரானது.


 திருக்குறளில் மதுவின் கொடுமையை வள்ளுவர் அழகாக கூறியுள்ளார். அதுபோல சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற தமிழ் இலக்கியங்களில் மதுவின் தீமை எடுத்துக் கூறப்பட்டுள்ளது.


 1920-ம் ஆண்டில் மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சிக்கான நிறுவன திட்டங்களை கொடுத்தார். அதில் மதுவை ஒழிக்க வேண்டும் என தெளிவாகக் கூறியுள்ளார். தீண்டாமைக்கு அடுத்த தீமை மது என்று காந்தி சொன்னார். ஆனால், இன்று காங்கிரஸ் ஆளும் இடங்களில் கூட மது விற்பனை நடைபெறுகிறது.


 பெருந்தலைவர் காமராஜர் முதன் முதலில் கைது செய்யப்பட்டது மதுரையில் கள்ளுக்கடைக்கு எதிராக மறியல் செய்தபோது தான். எந்த மதத்திலும் மதுவுக்கு அனுமதி இல்லை. மது ஒழிப்பு என்பது ஒரு கட்சி சார்ந்த பிரச்னை இல்லை. மக்களுக்கு பயன்தரக்கூடிய விஷயம். மதுவை ஒழிக்க இந்திய அளவில் போராட்டங்களை நடத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
 மதுக்கடைகளை மூட வேண்டும் என முஸ்லிம் அமைப்புகள் கூறுகின்றன, பா.ம.க., போராட்டம் நடத்துகிறது. திருமாவளவன் போன்றோர் வலியுறுத்துகின்றனர். அனைவரும் ஒன்றிணைந்தால் மதுவை நிச்சயம் ஒழிக்க முடியும். எனவே, அனைவரும் ஒன்றுபட்டு மதுவை ஒழித்து காட்டுவோம், வெற்றி பெறுவோம் என்றார் குமரி அனந்தன்.

ஞாயிறு, 22 ஜூலை, 2012

நாட்டு மக்களுக்கு நன்றி :பிரணாப் முகர்ஜி

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பிரணாப் முகர்ஜி, டெல்லியில் தன் வீட்டுக்கு வெளியே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
அப்போது அவர், ‘’நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக் கிறேன். எனக்கு பாசமும், ஆதரவும் அளித்த அனை வருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தேன்.

அப்போது, மக்களிடையே கண்ட உணர்வுகளை பார்த்த போது, இது ஜனாதிபதி தேர்தல் அல்ல, பொது தேர்தல் போன்று காணப்பட்டது. நான் மக்களுக்கு கொடுத்ததை விட அதிகமாகவே திரும்பப் பெற்றுள்ளேன்’’ என்று கூறினார்.

டெல்லி அக்பராபாத் மஸ்ஜிதிலிருந்து புனித குர்ஆன் பிரதிகள், மிம்பர் அகற்றம் : பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நேரில் ஜமாத்தினருடன் சந்திப்பு

டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி சுபாஷ் பார்க் பகுதியில் உள்ள அக்பராபாதி மஸ்ஜிதில் இருந்து வட டெல்லி மாநகராட்சி அதி காரிகளும், காவல்துறையின ரும் புனித குர்ஆன் பிரதிகளை யும் குத்பா பிரசங்கம் செய்யும் மிம்பரையும அகற்றியதால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் கே.எம். காதர் மொகிதீன் நேரில் சென்று பார்வையிட்டு அங்குள்ள மக் களிடம் குறைகளை கேட்ட றிந்தார்.

டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

டெல்லி அக்பராபாதி மஸ்ஜிதில் பழங்கால பொருட் கள் பல கண்டெடுக்கப்பட்டதா கவும், அவை குறித்து ஆய்வு நடத்த அந்த பொருட்களை கைப்பற்றி தொல்பொருள் ஆராய்ச்சி துறையிடம் ஒப் படைக்க வேண்டும் என்றும் அதற்காக மஸ்ஜித் பகுதியை காவல்துறையினரின் உதவி யுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படியும் வட டெல்லி மாநகராட்சிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவுக்கு இணங்க காவல்துறை அதிகாரி களும், வட டெல்லி மாநகராட்சி அலுவலர்களும் அக்பராபாதி மஸ்ஜித் பகுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றனர். பொருட்களை கைப்பற்றுவதற்கு வசதியாக அந்த பகுதி முழு வதையும் காவல்துறையினர் சுற்றிவளைத்து காவல் வளை யத்தை ஏற்படுத்தினர்.

புனித குர்ஆன் பிரதிகள்

அதன் பிறகு காவல்துறையி னர் நடந்து கொண்ட விதம் குறித்து மாதியா மஹால் சட்ட மன்ற உறுப்பினர் ஷுஐப் இக்பால் கூறியதாவது:

அந்த மஸ்ஜிதின் இடிபாடு களை பாதுகாக்க வேண்டும் என்றும், அதில் புதிய மஸ்ஜிதை உருவாக்க வேண்டும் என்றும் நான் கோரி வருகின்றேன். இந் நிலையில், உயர்நீதிமன்றம் பழமை வாய்ந்த இடுபாடுகளை ஆய்வு செய்வதற்கு தொல்லி யல் துறைக்கு அனுப்ப வேண் டும் என்று உத்தரவிட்டது.

ஆனால், காவல்துறையின ரும், மாநகராட்சி அலுவலர் களும் அத்துமீறி நடந்து மஸ்ஜி தில் இருந்த 50-60 புனித திருக்குர்ஆன் பிரதிகளையும், அந்த மஸ்ஜிதின் இமாம் குத்பா பிரசங்கம் செய்துவந்த மிம் பரையும் மற்றும் பொருட்களை யும் கைப்பற்றி சென்றிருக்கின் றனர்.

காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவை அமுல் படுத்துவ தாக கூறி அந்த இடத்தை சுற்றி வளைத்திருக்கிறார்கள். சுபாஷ் பார்க் பகுதி முழுமையுமே காவல் வளையம் போட்டிருக் கிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எந்த பொருட்களை மஸ்ஜித் பகுதியில் இருந்து எடுத்துச் செல்கின்றனர் என்று கண்டு பிடிக்க முடியவில்லை.

கடந்த 3 வாரங்களாக முஸ் லிம்கள் அங்கு தொழுகை நடத்தி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை ரம்ஜான் நோன்பை முன்னிட்டு மஃக்ரிப் தொழுகை நடத்தவும் திட்ட மிட்டிருந்தோம். அது முடியாமல் போய்விட்டது. இது முஸ்லிம் களிடையே கோபத்தையும், கொந்தளிப் பையும் ஏற்படுத்தி விட்டது.

இவ்வாறு சட்டமன்ற உறுப் பினர் ஷுஐப் இக்பால் கூறினார்.

பதற்றம்

மஸ்ஜிதில் இருந்து காவல் துறையினரும், மாநகராட்சி நிர்வாகத்தினரும் புனித பொருட்களை எடுத்துச் சென்ற தால் அந்த பகுதியில் உள்ள முஸ்லிம்கள் சுபாஷ் பார்க் பகுதி யில் ஆர்ப்பாட்டம் நடத்தினார் கள். சிறிய அளவில் கல்வீச்சு நடந்தது. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

நிலவரம் குறித்து டெல்லி மத்திய கூடுதல் காவல்துறை ஆணையர் தேவேஷ் ஸ்ரீ வத்ஸவா கூறுகையில், சனிக் கிழமை பிற்பகலில் சுபாஷ் பார்க் பகுதியில் ஏராளமான முஸ்லிம் கள் குழுமினர். ஆனால் நீதி மன்ற உத்தரவின்படி அவர்கள் மஸ்ஜித் பகுதிக்குள் அனுமதிக் கப்பட வில்லை. பிற்பகல் 1 மணி யிலிருந்து 3 மணிவரை பதற்ற மான நிலை ஏற்பட்டது. முஸ் லிம்களுக்கும் காவல்துறை யினருக்கும் சிறிதளவில் தள்ளு முள்ளுவும் ஏற்பட்டது. ஆனால் அதன்பிறகு நிலைமை கட்டுக் குள் வந்து விட்டது என்றார்.

தலைவர் பேராசிரியர் நேரில் பார்வையிட்டார்

நிலைமைய அறிந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இப் பள்ளியையும், அதன் சுற்றுப் பகுதிகளையும், நேரில் பார்வை யிட்டார். 

முகலாயர் காலத்தில் கட்டப் பட்டப்பட்டதாக சொல்லப்படும் இந்த மஸ்ஜித் சிப்பாய் களகத்தின் போது பிரிட்டிஷ் ராணுவத்தால் அழிக்கப்பட்டது. 

டெல்லி செங்கோட்டைக் கும், ஜாமிஆ மஸ்ஜிதிற்கும் இடையில் இப்பள்ளி அமைந்தி ருப்பதாலும், இதில் முஸ்லிம்கள் கூட்டம் நடத்தி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக திட்டங்கள் தீட்டியதாக கருதி பிரிட்டிஷ் ராணுவம் இந்த அழிப்பு முயற்சியை மேற்கொண்டது.

தற்போது 20 அடி ஆழத்தில் சிதைத்து கிடைக்கும் இந்த மஸ்ஜித் மெட்ரோ ரயில் பணி களின்போது கண்டறியப்பட் டது. 

பழம் பெருமை மிக்க இப்பள்ளியை புதுப்பித்து உருவாக்க வேண்டும் என்பதே அப்பகுதி முஸ்லிம்களின் கோரிக்கையாகும். முஸ்லிம்களின் உணர்வு களை டெல்லி மாநில அரசும், உயர்நீதிமன்றமும் உணர்ந்து அதற்கேற்ப செயல்பட வேண் டும். இவ்வாறு பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் குறிப் பிட்டார்.

ஆசிரியர் நம்நாட்டின் 14 -ஆவது ஜனாதிபதி!

பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, நாட்டின் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக கடந்த 19-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. 

இத்தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பி.ஏ.சங்மாவும் வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். 

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான பிரணாப் முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் 50 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பெற்று, பிரணாப் முகர்ஜி அபார வெற்றி பெற்றார். 

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மொத்தமுள்ள 748 எம்.பி.க்களில், 527 பேர் பிரணாப்புக்கு வாக்களித்துள்ளனர். ஆனால் சங்மாவுக்கு 206 எம்.பி.க்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். 15 எம்.பி.க்களின் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 10.5 லட்சம் வாக்குகளில் பிரணாப்புக்கு ஆதரவாக 5.58 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சங்மா 2.01 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார். 

நாட்டின் 14-வது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரணாப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.   

வரும் 25-ம் தேதி பதவியேற்க உள்ள பிரணாப் முகர்ஜிதான் மேற்குவங்க மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்திய ஜனாதிபதி ஆவார். 76 வயதான பிரணாப் வரும் 2017-ம் ஆண்டு வரை ஜனாதிபதியாகப் பதவி வகிப்பார்.



பிரணாப் முகர்ஜி 1935ம் ஆண்டு டிச.11ம் தேதி மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள மிரதி எனும் கிராமத்தில் பிறந்தார். தந்தை கமதா கின்கர் முகர்ஜி, தாயார் ராஜலட்சுமி. பிரணாப்பின் தந்தை, காங்., கட்சியைச் சேர்ந்தவர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்தவர். 1952-64 வரை மேற்குவங்க சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார்.

பிரணாப், எம்.ஏ., வரலாறு, எம்.ஏ., அரசியல் அறிவியல், எல்.எல்.பி., டி.லிட்., ஆகிய பட்டங்களை பெற்றார். பிரணாப் கல்லூரி ஆசிரியராகவும், சமூக சேவகராகவும், பத்திரிகை ஆசிரியராகவும் இருந்துள்ளார். 1957ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி சுவ்ரா என்பவரை மணந்தார். இவர்களுக்கு அபிஜித், இந்திரஜித் என்ற மகன்களும், சர்மிஷ்தா என்ற மகளும் உள்ளனர். அபிஜித், மேற்குவங்க காங்., கட்சி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். 

பிரணாப், 1969ல் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். ராஜ்யசபா உறுப்பினராக 1969, 1975, 1981, 1993, 1999 ஆகிய ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திரா அமைச்சரவையில் 1982 - 84ல் நிதியமைச்சராக பணியாற்றினார். இந்திராவின் மறைவுக்குப்பின் 1986-89 வரை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, ராஷ்ட்ரிய சமாஜ்வாடி காங்கிரஸ் கட்சியில் இருந்தார். 2004-06ல் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், 1995-96, 2006-09 ஆகிய ஆண்டுகளில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார். 

2009ம் ஆண்டிலிருந்து நிதியமைச்சராக செயல்பட்ட பிரணாப், 2012 ஜூன் 15ம் தேதி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.


சனி, 21 ஜூலை, 2012

நீதிபதி ராஜேந்திர சிங் சச்சார் அவர்களுடன் சமுதாயப் போர்வாள் சந்திப்பு





இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய பொதுச்செயலாளரும் ,தமிழகத் தலைவருமான பேராசிரியர் .கே.எம்.காதிர் மொஹிதீன் அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் சமுதாயப் போர்வாள் எம்.அப்துல் ரகுமான் அவர்கள் நீதிபதி ராஜேந்திர சிங் சச்சார் அவர்களை சந்தித்து முஸ்லிம் சமுதாய விசயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார் 

கல்வி விழிப்புணர்வு மாநாடு



தமிழகத்தில் இஸ்லாமிய கல்லூரிகளை உருவாக்கித் தந்த 


    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 
            கல்வி விழிப்புணர்வு மாநாடு 

           செப்டம்பர் 8 -2012 ,கும்பகோணம் ,
                                    அல்-அமீன் மெட்ரிகுலேசன் பள்ளி மைதானம் 

காங்கிரஸ் கட்சியின் சுயநலமும் பிடிவாதமும் :நாட்டில் குழப்பம்

மத்திய அமைச்சரவையில் 2வது இடம் அளிக்கப்படாததால் அதிருப்தியடைந்த சரத்பவார் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சரவையில் பிரதமருக்கு அடுத்த இடத்தில் இருந்த பிரணாப் முகர்ஜி, ராஜினாமா செய்ததால் 2வது இடம் ராணுவ அமைச்சர் அந்தோணிக்கு அளிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த சரத்பவாரும் அமைச்சர் பிரபுல் படேலும் ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சரத்பவார் நேற்று சந்தித்தார்.  சரத்பவார் தனது அதிருப்தியை தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர், பிரபுல் படேல் அளித்த பேட்டியில், ‘‘மத்திய அரசும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் செயல்படும் விதம் குறித்து எங்களுக்கு சில அதிருப்திகள் உள்ளன. இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் சோனியா காந்தியிடமும் தெரிவித்துள்ளோம். எங்கள் கட்சி தலைவர்கள் ஆலோசித்து கட்சியின் முடிவு என்ன என்பதை திங்கட்கிழமை தெரியப்படுத்துவோம். அமைச்சரவையில் 2வது இடம் கிடைக்காததால் சரத்பவார் அதிருப்தியடைந்துள்ளதாக கூறப்படுவது அபத்தமானது’’ என்றார். 

காங்கிரசுடன் மோதல் அதிகரித்துள்ளதால், அமைச்சரவையில் இருந்து விலக சரத்பவார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தனது அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் மன்மோகனுக்கும் சோனியா வுக்கு எழுதியுள்ள கடிதத் தில், ‘‘நாங்கள் சிறிய கட்சி என்பதால் உரிய மரியாதையும் முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கட்சியை பலப்படுத்தவும் அதற்காக கவனம் செலுத்த வும் அதிக நேரம் தேவைப்படுகிறது’’ என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, காங்கிரஸ் உயர்நிலைக்குழு கூட்டம் சோனியா தலைமை யில் நேற்று ஒரு மணி நேரம் நடந்தது. பின்னர், பேட்டியளித்த கட்சியின் பொது செயலாளர் ஜனார்த்தன் திவேதி, சரத்பவார் எழுப்பிய பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதாக தெரிவித்தார்.

பிரதமர் சமாதானம்

இதனிடையே, சரத்பவாரை சமாதானப்படுத்தும் வகையில் பிரதமர் மன்மோகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘சரத்பவார் மதிப்பு மிக்க கூட்டணி கட்சி தலைவர். அவரது அறிவும் ஆற்றலும் அனுபவமும் மத்திய அரசுக்கு மிகப் பெரிய சொத்து’’ என்று கூறியுள்ளார்.

வெள்ளி, 20 ஜூலை, 2012

துணை ஜனாதிபதியுடன் சமுதாயப்பிரதிநிதி சந்திப்பு




நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுவந்த ஜனாதிபதி ,துணை ஜனாதிபதி தேர்தல்களில் நேற்று ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்றது .இந்நிலையில் ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் அவர்களின்  ஆலோசனையின் அடிப்படையில் ,துணை ஜனாதிபதிக்கான ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் ஹமீது அன்சாரியை காயிதே மில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம்.அப்துல் ரகுமான் நேற்று சந்தித்து வாழ்த்துக் கூறினார் .