Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 22 ஜூலை, 2012

ஆசிரியர் நம்நாட்டின் 14 -ஆவது ஜனாதிபதி!

பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, நாட்டின் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக கடந்த 19-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. 

இத்தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பி.ஏ.சங்மாவும் வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். 

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான பிரணாப் முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் 50 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பெற்று, பிரணாப் முகர்ஜி அபார வெற்றி பெற்றார். 

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மொத்தமுள்ள 748 எம்.பி.க்களில், 527 பேர் பிரணாப்புக்கு வாக்களித்துள்ளனர். ஆனால் சங்மாவுக்கு 206 எம்.பி.க்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். 15 எம்.பி.க்களின் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 10.5 லட்சம் வாக்குகளில் பிரணாப்புக்கு ஆதரவாக 5.58 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சங்மா 2.01 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார். 

நாட்டின் 14-வது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரணாப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.   

வரும் 25-ம் தேதி பதவியேற்க உள்ள பிரணாப் முகர்ஜிதான் மேற்குவங்க மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்திய ஜனாதிபதி ஆவார். 76 வயதான பிரணாப் வரும் 2017-ம் ஆண்டு வரை ஜனாதிபதியாகப் பதவி வகிப்பார்.



பிரணாப் முகர்ஜி 1935ம் ஆண்டு டிச.11ம் தேதி மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள மிரதி எனும் கிராமத்தில் பிறந்தார். தந்தை கமதா கின்கர் முகர்ஜி, தாயார் ராஜலட்சுமி. பிரணாப்பின் தந்தை, காங்., கட்சியைச் சேர்ந்தவர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்தவர். 1952-64 வரை மேற்குவங்க சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார்.

பிரணாப், எம்.ஏ., வரலாறு, எம்.ஏ., அரசியல் அறிவியல், எல்.எல்.பி., டி.லிட்., ஆகிய பட்டங்களை பெற்றார். பிரணாப் கல்லூரி ஆசிரியராகவும், சமூக சேவகராகவும், பத்திரிகை ஆசிரியராகவும் இருந்துள்ளார். 1957ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி சுவ்ரா என்பவரை மணந்தார். இவர்களுக்கு அபிஜித், இந்திரஜித் என்ற மகன்களும், சர்மிஷ்தா என்ற மகளும் உள்ளனர். அபிஜித், மேற்குவங்க காங்., கட்சி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். 

பிரணாப், 1969ல் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். ராஜ்யசபா உறுப்பினராக 1969, 1975, 1981, 1993, 1999 ஆகிய ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திரா அமைச்சரவையில் 1982 - 84ல் நிதியமைச்சராக பணியாற்றினார். இந்திராவின் மறைவுக்குப்பின் 1986-89 வரை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, ராஷ்ட்ரிய சமாஜ்வாடி காங்கிரஸ் கட்சியில் இருந்தார். 2004-06ல் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், 1995-96, 2006-09 ஆகிய ஆண்டுகளில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார். 

2009ம் ஆண்டிலிருந்து நிதியமைச்சராக செயல்பட்ட பிரணாப், 2012 ஜூன் 15ம் தேதி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக