மாணவர்களுக்கு ஆங்கிலப் புலமை அவசியம் என, தமிழ்நாடு உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் சிந்தியா பாண்டியன் கூறினார்.
தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் மையம் சார்பில் திருநெல்வேலியில் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்களுக்கான கருத்தரங்கு, பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
மையத்தின் தலைமை செயல் அதிகாரி எம். சிவகுமார்
தொடக்கவுரையாற்றினார். நிகழ்ச்சியில் சிந்தியா பாண்டியன் பேசியதாவது:
வருங்காலத்தில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாக இருக்கின்றன. இவற்றில் பணிபுரிய திறமை வாய்ந்தோராக மாணவர்களை உருவாக்க வேண்டியது கல்லூரிகளின் பொறுப்பு. மாணவர்களிடம் இருக்கும் திறமைகளைக் கண்டறிந்து அவற்றின் மூலம் வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் செயல்திட்டங்களை கல்லூரிகள் வகுக்க வேண்டும். அதற்கு பேராசிரியர்கள் துணையாக இருக்க வேண்டும்.
தென் தமிழகத்திலுள்ள மாணவர்கள் ஆங்கில மொழிப் புலமையில் பின்தங்கியுள்ளனர். இதனால் பெரிய நிறுவனங்களில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போகிறது.
எனவே ஆங்கிலத்தில் பேசும் திறனை மாணவர்களிடம் வளர்க்க வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. வருங்காலத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப மாணவர்களை இப்போதே தயார்படுத்த வேண்டும். தமிழகத்தில் உயர்கல்வி மேம்பாட்டுக்கு மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
12-வது ஐந்தாண்டு திட்டத்தில் உயர்கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வியில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக