Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 28 மே, 2013

கலை, அறிவியல் படிப்புகளுக்கும் கல்விக் கடன் கிடைக்கிறது

பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு மட்டுமல்ல, கலை, அறிவியல் படிப்புகளுக்கும் கல்விக் கடன் வழங்க வங்கிகள் தயாராகவே உள்ளன. பி.காம்., பி.எஸ்சி., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளுக்கும் வங்கிகளில் இப்போது கல்விக் கடன் தாராளமாக வழங்கப்படுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள அனைத்து படிப்புகளுக்கும் கடன் வாங்கிக் கொள்ளலாம். சில வங்கிகளில் கலைப் படிப்புகளுக்கு கல்விக் கடன் இல்லை என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்தப் படிப்புகளை முடித்தவர்களுக்கு எளிதாக வேலை கிடைக்காது என்பதால் கடன் கொடுக்க மறுக்கும் நிலை இருக்கிறது. அதனால், இந்த மாணவர்கள் சற்றுப் போராடத்தான் வேண்டியிருக்கும். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளமோ படிப்பவர்களுக்கும் கல்விக் கடன் உண்டு.

எவ்வளவு கடன் கிடைக்கும்?
ரூ.4 லட்சம் வரை உத்தரவாதம் எதுவும் இல்லாமல் கடன் கிடைக்கும். ரூ. 4 லட்சம் முதல் ரூ. 7.5 லட்சம் வரை கடன் பெற, பெற்றோரில் ஒருவர் தனிநபர் உத்தரவாதம் கொடுக்க வேண்டி இருக்கும்.

 ரூ.7.5 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் என்றால் சொத்து ஜாமீன் கொடுக்க வேண்டும். இது உள்நாடு மற்றும் வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களுக்கு என அனைத்துக்கும் பொருந்தும்.

எப்படி வாங்குவது?
பெற்றோருக்கு எந்த வங்கியில் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கியில் கல்விக் கடன் பெறலாம். சில நகரங்களில் ஏதாவது ஒரு வங்கி, கல்விக் கடன் தருவதற்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில் அதில் கணக்கு ஆரம்பித்து, கல்விக் கடன் வாங்கிக் கொள்ள வேண்டும்.

கல்விக் கட்டணம், விடுதி வாடகை மற்றும் சாப்பாட்டுச் செலவு, சீருடை, புத்தகங்கள், கல்விச் சுற்றுலா, மாணவருக்கு இன்சூரன்ஸ் பிரீமியம், கம்ப்யூட்டர் லேப்-டாப் உள்ளிட்டவைகளுக்கு கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம்.

கல்லூரியில் இருந்து கல்விக் கட்டணம், விடுதி வாடகை, உணவுக் கட்டணம், சீருடைகளுக்கு எனத் தனித்தனியாக எவ்வளவு ஆகும் என்று "போனஃபைட்' சான்றிதழில் குறிப்பிட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு வங்கியை அணுகி விண்ணப்பிக்க வேண்டும். அதற்குரிய காசோலை, கல்லூரி பெயரில் கொடுக்கப்படும். புத்தகங்கள், கம்ப்யூட்டர் போன்றவற்றை வாங்கிவிட்டு அதற்குரிய ரசீதை வங்கியில் கொடுத்தால் அந்த பணம் கிடைத்துவிடும். இது மாணவரின் கடன் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும்.

கடனை திருப்பிச் செலுத்துவது எப்போது?
படிப்பு முடிந்து ஓர் ஆண்டுக்கு பிறகு கடனைத் திருப்பிச் செலுத்த ஆரம்பிக்கலாம். ஆனால், வேலை கிடைத்துவிட்டால் உடனே கடனை செலுத்த ஆரம்பித்துவிட வேண்டும். முன்பு படிக்கிற காலத்தில் கடனுக்கான வட்டி கணக்கிடப்பட்டு, வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், 2009-க்குப் பிறகு கொடுக்கப்படும் கல்விக் கடனுக்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் 4.5 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் படிக்கிற காலத்திற்கான வட்டியை மத்திய அரசே வங்கிகளுக்குக் கொடுத்து விடுகிறது.

வெளிநாடுகளில் படிக்கிற மாணவர்களுக்கு இந்தச் சலுகையை வங்கிகள் தருவதில்லை. ஆனால், வெளிநாட்டுப் படிப்புக்கும், உள்நாட்டுப் படிப்புக்கும் ஒரே வட்டி விகிதம்தான்.

விரைவாக கடனைத் திருப்பிச் செலுத்தும் மாணவர்களுக்கு 1 சதவீத வட்டி குறைக்கப்படுகிறது. மாணவிகளுக்கு வட்டியில் சுமார் 0.5 சதவீதம் சலுகை அளிக்கப்படுகிறது. கடனை மாதத் தவணையாகக் கட்ட வேண்டும் என்பதில்லை. மாதத் தவணை காலம்போக எப்போதெல்லாம் பணம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் அந்த தொகையைக் கட்டி கடன் சுமையைக் குறைத்துக் கொள்ளலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்
கல்லூரி "போனோஃபைட்' சான்றிதழ், கட்டணம் குறித்த தெளிவான தகவல்கள், பெற்றோரின் வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ், 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி என்றால் கவுன்சிலிங் அழைப்புக் கடிதம், சேர்க்கைக் கடிதம் உள்ளிட்டவை தேவைப்படும். வெளிநாட்டு படிப்பு என்றால் கூடுதலாக விசா, எந்த கல்லூரியில் படிக்க இருக்கிறார், கல்லூரி மற்றும் படிப்புக்கான அங்கீகார விவரம் போன்றவற்றையும் கொடுக்க வேண்டும்.

முக்கிய அம்சங்கள்
மாணவர்கள் ஒரு பாடத்தில்கூட தோல்வியடைந்து விடக்கூடாது. ஏதாவது ஒரு பாடத்தில் ஃபெயிலானால்கூட சில வங்கிகள் அடுத்த ஆண்டுக்கு கடன் தருவதை நிறுத்திவிடும் வாய்ப்புள்ளது. அதன்பின் அந்த பாடத்தை மீண்டும்  எழுதி பாஸ் ஆன பிறகுதான் கடன் கிடைக்கும் என்ற விதிமுறை உள்ளது.

ஏதாவது ஒரு காரணத்துக்காக படிப்பை பாதியில் நிறுத்தினாலும் தொடர்ந்து கடன் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. அதுவரையில் வாங்கிய கடனை வட்டியோடு திரும்பச் செலுத்த வேண்டிவரும்.

வரிச் சலுகைகள்
திரும்பச் செலுத்தும் கல்விக் கடனில் 80-இ பிரிவின் கீழ் வட்டிக்கு மட்டுமே வரிச் சலுகை உண்டு. திரும்பச் செலுத்தும் அசலுக்கு வரிச்சலுகை இல்லை. யார் படிப்புக்காக கல்விக் கடன் பெறப்பட்டுள்ளதோ, அவருக்குதான் வரிச் சலுகை உண்டு. கல்விக் கடனைக் திரும்பச் செலுத்த ஆரம்பித்து, எட்டு வருடங்கள் வரை மட்டுமே வருமான வரி விலக்கு கிடைக்கும்.

கடன் தர தயக்கம்
கல்விக் கடன் கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் பொதுவாக அந்தந்த வங்கியின் மேலாளரைப் பொறுத்த விஷயமாக இருக்கிறது என்று பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறைவாக மதிப்பெண் எடுத்திருப்பவர்களுக்கு கடன் வழங்க வங்கிகள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், சட்டப்படி மாணவருக்கு உயர் கல்வி படிக்க கல்லூரியில் அனுமதி கிடைத்துவிட்டாலே அவருக்கு கடன் வழங்க வேண்டும் என்பதுதான் அரசின் விதி. இருப்பினும், இந்த விதியை பெரும்பாலான வங்கிகள் பின்பற்றுவதில்லை.

உதாரணத்துக்கு எம்.பி.ஏ. படிப்பதற்கு ரூ.2 லட்சம் செலவாகிறது என்றால் விதிகளின்படி உத்தரவாதம் இல்லாமல் வங்கிக் கடன் வழங்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக