Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 29 மே, 2013

காது கேளாதவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்?

தமிழகத்தில், 1,000 குழந்தைகளில், ஆறு பேருக்கு செவித்திறன் குறைபாடு உள்ளது. இது, தேசிய அளவைவிட, மூன்று மடங்கு அதிகம் என, ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

சென்னை, இ.என்.டி., ஆராய்ச்சி அறக்கட்டளை, 2003 முதல், 2012 வரை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் செவித்திறன் குறைபாடு குறித்த பரிசோதனை முகாமை நடத்தியது. மொத்தம், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் சராசரியாக, 1,000 குழந்தைகளில், ஆறு பேருக்கு, செவித்திறன் குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. ஆண், பெண் என, இருபாலின குழந்தைகளிலும், இந்த குறைபாடு சரிசமமாகவே உள்ளது. இது, தேசிய சராசரி அளவைவிட, மூன்று மடங்கும், சர்வதேச அளவைவிட, ஆறு மடங்கும் அதிகம் என, தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, அறக்கட்டளை நிர்வாக இயக்குனர், மோகன் காமேஸ்வரன் கூறியதாவது: சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், 120க்கும் மேற்பட்ட, கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில், பரிசோதனை முகாம் நடத்தினோம்.

இதில், செவித்திறன் குறைபாடு கண்டறியப்பட்டோரில், மூன்றில், இரண்டு பங்கு குழந்தைகளின் பெற்றோர், சொந்தத்தில் திருமணம் செய்துக் கொண்டவர்கள் என்பது தெரியவந்தது.

குறைபிரசவம், குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை, கருவில் மற்றும் குழந்தை பிறந்த பின் ஏற்படும் தொற்று போன்றவை, குழந்தைகளின் செவித்திறன் குறைபாடிற்கு காரணங்கள்.இளம் தலைமுறையினர், நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்துக் கொள்வதை தவிர்ப்பது, இக்குறைபாட்டை வரும் முன் தடுக்க, பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவற்றால், காதுகேளாத குழந்தைகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் மாறுவதை தடுக்கலாம். இவ்வாறு, மோகன் காமேஸ்வரன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக