பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தேமுதிக உறுப்பினர் ஆர்.சுபா (கெங்கவல்லி) பேசியது:-
தேசிய ஆசிரியர் தேர்வு வாரியம் (என்சிடிஇ) வழிகாட்டுதல்படி தகுதித் தேர்வு மூலம் ஆசிரியர்களை நியமிக்கும் முறையை அரசு அறிமுகப்படுத்தியது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தலாம் என தேசிய ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவாகக் கூறியுள்ளது.
அண்மையில் 19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படாமல் பொதுத் தேர்வாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்ற அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்குத் தனி கட்- ஆஃப் தரப்படவில்லை. இதனால் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தோர் பாதிக்கப்படுகின்றனர்.
தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கான பணியிடங்களில் 40 சதவீதம் காலியாக உள்ளது. இடஒதுக்கீட்டு முறை பின்பற்றாமல் பட்டதாரி ஆசிரியர் நியமித்ததை செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறி, மறு ஆய்வு செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
எனவே, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்துக்கான கட்- ஆஃப் மதிப்பெண்களைக் குறைத்து இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் என்றார்.
அமைச்சர் வைகைச்செல்வன் பேசியது:-
பணித் தேர்வின் போது இடஒதுக்கீட்டு முறையை அரசு சரியாகக் கடைப்பிடித்து வருகிறது. அதே சமயம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவாகும்.
மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காகவும், தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முறையைப் பின்பற்றுகிறோம். எனவே ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கட் - ஆஃப் மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து குறைக்கும் எண்ணம் அரசிடம் இல்லை.
ஆர்.சுபா: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே தற்போது பணி நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால், கடந்த காலமுறைப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரும் ஆசிரியருக்கான அனைத்து தகுதிகளையும் பெற்றவர்கள். அவர்களுக்கும் ஆசிரியர் பணி நியமனம் வழங்க வேண்டும்.
அமைச்சர் வைகைச்செல்வன்: அரசின் கொள்கை முடிவின்படி அவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக