Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 18 மே, 2013

சென்னையில் கடும் துர்நாற்றத்துடன் குடிநீர் வினியோகம்


வியாசர்பாடி மற்றும் எம்.கே.பி.நகர் பகுதிகளில் கடுமையான துர்நாற்றத்துடன் குடிநீர் வினியோகிக்கப்படுவதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், "குளோரின்' மாத்திரைகள் தர வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக... வியாசர்பாடி, எம்.ஜி.ஆர்.நகர், தேபர் நகர், சத்தியமூர்த்தி நகர் மற்றும் உதயசூரியன் நகர் பகுதிகளிலும் எம்.கே.பி.நகரிலும் வினியோகிக்கப்படும் குடிநீர் பயங்கர துர்நாற்றத்துடன் கழிவுநீர் போல் உள்ளதாக பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து எம்.ஜி.ஆர்.நகர் பகுதிவாசிகள் கூறியதாவது: எங்கள் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே குடிநீர் கழிவுநீர் போல் வருகிறது. காலை 8:00 மணிக்குள் பிடிக்கப்படும் குடிநீர், குளோரின் நாற்றத்துடனும், அதற்கு மேல் பிடித்தால் பயங்கர துர்நாற்றத்துடனும் வருகிறது. நேற்று காலை பிடித்த தண்ணீர், இதுவரை அல்லாத அளவுக்கு படுமோசமான துர்நாற்றத்துடன் இருந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

என்ன காரணம்?
எம்.கே.பி.நகரை சேர்ந்த ஆர்டிசான் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் தெய்வமணி கூறுகையில்,""எங்கள் பகுதியில் காலை 5:30 மணி முதல் 8:30 மணி வரையில் வினியோகிக்கப்படும் தண்ணீரை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என, பகுதிவாசிகளிடம் அறிவுறுத்தியுள்ளோம். அந்த நேரத்தில் தண்ணீர் மோசமாக இருந்தால் புகார் தெரிவிக்கவும் கூறிஉள்ளோம்,'' என்றார்.

சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால், காலை 8:30 மணிக்கு மேல் வினியோகம் நிறுத்தப்பட்டு விடுகிறது. தவிர, குடிநீர் குழாய்கள் பல, மிகவும் பழையவை. காலையில் அதிக அழுத்தத்துடன் தண்ணீர் வினியோகமாகும் போது துர்நாற்றம் தெரிவதில்லை. 8:30 மணிக்கு மேல், அழுத்தம் குறைந்து, குழாயில் உள்ள விரிசல் வழியாக கழிவுநீர் கலக்கிறது. எனவே, வியாசர்பாடி பகுதிவாசிகள், மாநகராட்சி சுகாதார துறை மூலம் தரப்படும் "குளோரின்' மாத்திரைகளை வீடு வீடாக வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

துர்நாற்றத்துடன் கூடிய தண்ணீர் வினியோகத்தால், எம்.கே.பி.நகர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிவாசிகள் பலர், லாரி மற்றும் தனியார் மூலம் விற்கப்படும் தண்ணீரையே குடிக்க பயன்படுத்துகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக