Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 20 மே, 2013

2011-TNPSC குரூப் 2 தேர்விலும் மோசடி


கடந்த, 2012ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம் குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில், 2011ல் நடந்த, குரூப் 2 தேர்விலும், மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, வணிக வரித் துறை துணை கமிஷனரான ரவிக்குமார் என்பவரை, கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில், 2012 ஆக., 12ம் தேதி, அரசுத் துறையில் காலியாக இருந்த, 3,631 பணியிடங்களுக்கு நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வில், 6.40 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில், ஈரோடு, தர்மபுரி, அரூரில் வினாத்தாள் அவுட்டானதால், தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், 2011ல் நடந்த, குரூப் 2 தேர்வில் மோசடி செய்து, வினாத்தாளை வாங்கிய, நாகை மாவட்ட வணிக வரித் துறை துணை கமிஷனராக பணியாற்றி வந்த ரவிக்குமார் என்பவரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து, ஈரோடு ஜே.எம்., 3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மே, 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டதை அடுத்து, ஈரோடு கிளைச் சிறையில் அடைத்தனர்.

கடந்த, 2012ல் நடந்த, குரூப் 2 தேர்வில் மோசடி நடந்ததால், தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதே போல், 2011ல் நடந்த, குரூப் 2 தேர்வும் ரத்து செய்யப்படுமா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

இது குறித்து, சி.பி.சி.ஐ.டி.,போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: கடந்த, 2011ம் ஆண்டு, ஜூலை, 30ம் தேதி, டி.என்.பி. எஸ்.சி., குரூப் 2 தேர்வில், 6,695 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது. மாநிலம் முழுவதும், 4.80 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.தேர்வு முடிவுகள் வெளியாகி, தேர்வானவர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டது. கடந்த, 2012ல் நடந்த, குரூப் 2 தேர்வில் வினாத்தாள் அவுட் ஆனதால், தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புரோக்கர்களிடம் வினாத்தாள் வாங்கித் தேர்வு எழுதியோர் பற்றி விசாரித்து வந்தோம். அதிரடி திருப்பமாக, கடலூர் மாவட்டம், பண்ருட்டி, பத்தரக் கோட்டையைச் சேர்ந்த சீராளன் மகன் ரவிக்குமார், 32, கடந்த, 2011ல் நடந்த, குரூப் 2 தேர்வின் போது, கடலூர் புரோக்கர்கள் மூலம் வெளியான வினாத்தாளை வாங்கியதும், தேர்வு எழுதி, தற்போது, நாகை மாவட்ட வணிக வரித் துறையில் துணை கமிஷனராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து, ரவிக்குமாரை கைது செய்துள்ளோம். மேலும் மோசடி செய்து, தேர்வு எழுதி, அரசுத் துறையில் பணியாற்றி வருபவர்கள் பற்றிய தகவலை சேகரித்து வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக