தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைப்பதால் ,தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகிறார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கொடைக்கானல் நகரம் சுற்றுலா பயணிகளின் வருகையால் திணறியது. நகர் முழுவதும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதில் மிகவும் தாமதம் ஏற்பட்டது.
படகு சவாரி
கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்வதற்காக ஏராளமான பேர் நீண்ட கியூவில் காத்து நின்றனர். படகு சவாரி, சைக்கிள் சவாரி செய்வதில் குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் அதிக ஆர்வம் காட்டினார்கள். இதனால் ஏரிச்சாலை மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. பிரையண்ட் பூங்காவில் உள்ள வண்ண, வண்ண பூக்களை பார்ப்பதற்காக பெண்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள். பூங்காவில் உள்ள பூக்களுடன் நின்று குடும்பத்துடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
பசுமைப்பள்ளத்தாக்கு
கொடைக்கானலில் பகல் 1 மணி முதல் 2 மணி வரை சாரல் மழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். சாரல் மழையில் நனைந்தவாறு பசுமைப்பள்ளத்தாக்கு பகுதியை பார்வையிட்டனர். கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சியையும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால் தெருவோர கடை வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக