நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர், தேர்வாணையர் மற்றும் நிதி அலுவலர்கள் பதவிகள் காலியாக உள்ளன. அந்த பணி இடங்களில் நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும். பட்ட மேற்படிப்பு முடித்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 2 வருடாந்திர ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.
காலமுறை அடிப்படையிலான பதவி உயர்வு ஆணை வழங்கியவர்களுக்கு நிலுவை தொகையை வழங்க வேண்டும். காலாவதியான நிலையில் உள்ள 2 பஸ்களையும் மாற்றிவிட்டு புதிய பஸ்கள் வாங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக அலுவலர்கள் நேற்று பல்கலைக்கழகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தொடர் போராட்டம்
ஆர்ப்பாட்டத்துக்கு பல்கலைக்கழக அனைத்து அலுவலர்கள் சங்க தலைவர் அன்பால் மோசக் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஜெயசீலன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தரும் வரை ஒரு வார காலத்துக்கு காலை மாலை 2 வேளையும் பல்கலைக்கழகம் முன்பு தொடர் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.
கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபடுவோம். மேலும் உள்ளிருப்பு போராட்டம், உண்ணாவிரதம் ஆகிய தொடர் போராட்டங்களையும் நடத்த உள்ளோம் என்றார்.
இதில் துணைத்தலைவர் சுரேஷ், துணை செயலாளர்கள் சங்கர மகாலிங்கம், அய்யம் பெருமாள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக