பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி ஆண்டு விழா நடந்தது. கல்லூரி தாளாளர் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி தலைமை தாங்கினார். ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கே.ஏ.மீரான் மைதீன், எம்.கே.எம்.முகமது நாசர், வாவு செய்யது அப்துல் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முகமது சாதிக் வரவேற்று பேசினார்.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அலாவுதீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கல்லூரி விழா மலரை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
சேவை செய்யும் வாய்ப்பு
நான் ஐ.ஏ.எஸ். பணியை நெல்லையில் உதவி கலெக்டராக இருந்து தொடங்கினேன். ஐ.ஏ.எஸ்.தேர்வில் தேசிய அளவில் 6–வது இடம் பெற்றேன். அலாவுதீன் கையில் இருந்த அற்புத விளக்கு ஐ.ஏ.எஸ். தேர்வு தான். இந்த பணி எனக்கு மக்களுக்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பை அளித்தது. இந்த கல்லூரி 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை உருவாக்கி உள்ளது.
நான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக டெல்லி சென்ற போது அங்குள்ள அதிகாரிகள், நீங்கள் அற்புத விளக்கை தேய்க்கிறீர்கள், பூதம் வருகிறது, அப்போது என்ன 3 வரம் கேட்பீர்கள்? என்று கேட்டனர். அதற்கு நான் உலக அமைதி, இந்திய முன்னேற்றம், முன்றாவதாக எனக்கு ஐ.ஏ.எஸ். வெற்றி ஆகியவற்றை கேட்பேன் என்று கூறினேன். அப்போது எனது பதிலை கேட்டு என்னை தேர்ந்தெடுத்தனர்.
சாதிக்க முடியும்
பல்கலைக்கழக தேர்வுக்கும், ஐ.ஏ.எஸ். தேர்வுக்கும் வித்தியாசம் உண்டு. பல்கலைக்கழக தேர்வில் 40 சதவீதம் தேர்ச்சி பெற்றால் போதும். ஆனால் ஐ.ஏ.எஸ் தேர்வில் நமக்கு அடுத்து வரும் போட்டியாளரை விட திறமையில் நாம் முன் நிற்க வேண்டும். அப்போது தான் நம்மால் வெற்றி பெற முடியும்.
இன்றைய மாணவ – மாணவிகளிடம் பல ஆற்றல்கள், திறமைகள் மறைந்து கிடக்கின்றன. அவற்றை வெளிக்கொண்டு வந்தால் தான் உங்களால் சாதிக்க முடியும். நூலகத்தை எல்லோரும் நன்றாக பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் பாடத்திற்கு அப்பால் நிறைய படிக்க வேண்டும். சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் படிக்க வேண்டும். நம் தேசத்தின் வளர்ச்சியே நம் வளர்ச்சி, இதை நாம் உணர வேண்டுமானால் நம் தேசத்தின் வளர்ச்சி பற்றிய சமூக அரசியல், பொருளாதார வரலாறு ஆகியவற்றை நாம் ஆழமாக படிக்க வேண்டும். எல்லோரும் இணைந்து செயல்பட்டால் பெரிய இலக்கையும் நம்மால் அடைய முடியும் என்பதை கோவை செம்மொழி மாநாடு நடத்தியபோது உணர்ந்தேன்.
பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கி ஆட்சிப்பணிக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.இவ்வாறு அலாவுதீன் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக