வெற்றி பெற வேண்டும் என்ற மனப்பான்மையும், சரியான திட்டமிடலும் இருந்தால் மாணவர்கள் உயர்ந்த நிலையை அடையலாம் என, ஆளுநர்
கே. ரோசய்யா கூறினார்.
தூத்துக்குடி அருகேயுள்ள சாயர்புரம் போப் கல்லூரி தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி, பொன்விழா ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
விழாவில் ஆளுநர் கே. ரோசய்யா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியது: கிராமப்புற மக்களுக்கு உயர் கல்வி அளிப்பதற்காக இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டதற்காகப் பெருமைப்படுகிறேன். கிராமப்புறங்களும், அங்குள்ள குடிமக்களும் முன்னேற்றம் அடைந்தால்தான் நாடு தன்னிறைவு பெற முடியும். இதற்கு கல்வி ஒன்றே சிறந்த கருவியாகும்.
முதன்மையாக இரு, முதன்மையானவர்களோடு இரு என்பதே இந்தக் கல்லூரியில் நோக்க வாசகமாக உள்ளது. படிப்பு மட்டுமின்றி, போட்டி நிறைந்த இன்றைய சூழலை சந்திக்கும் திறனையும் மாணவர்களுக்கு வளர்க்க கல்வி நிலையங்கள் உதவ வேண்டும்.
ஒவ்வொரு மாணவரும், ஆசிரியரும் நாளுக்குநாள் தங்களது அறிவைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். சமூகத்துக்கும், நாட்டுக்கும் சேவை செய்யும் மனப்பான்மையை கல்வி நிலையங்கள் மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்.
மாணவர்கள் தாங்கள் கற்கும் கல்வியை சமுதாய வளர்ச்சிக்கும், மக்கள் மேம்பாட்டுக்காகவும் பயன்படுத்த வேண்டும். வெற்றி பெற வேண்டும் என்ற மனப்பான்மை, சாதிக்க வேண்டும் என்ற ஆசை, சரியான திட்டமிடல் ஆகியவை மட்டுமே மாணவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.
மாணவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் கடினமாக உழைத்து ஒவ்வொரு செயலிலும் ஈடுபட வேண்டும். தன்னம்பிக்கையும், உறுதிப்பாடும் உள்ளவர்களால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக