நானொரு கேள்வி எழுப்புகிறேன் - அதை
நாயகம் பெயரால் அனுப்புகிறேன் !
நீயொரு பதிலைச் சொல்லிவிடு - அந்த
நினைவில் என்னை மிதக்கவிடு!
அழுது கேட்டும் கிடைக்கவில்லை - உன்
ஆணை இன்னும் பிறக்கவில்லை!
விழுந்து சாக மனமுமில்லை - அது
வீணர் வழக்கம் எனக்குமில்லை!
மனிதப் பொறுமை கடந்துவிடும் - என்
மனதின் குமுறல் உடைந்துவிடும்!
இனியும் கருணை மறுப்பதென்றால் - என்
இறைவா என்னுயிர் துடித்துவிடும்!
கேட்டால் தருவது தருமமல்ல - நான்
கெஞ்சிக் கேட்பது புதுமையல்ல!
ஆட்டம் முடியும் எல்லைவரை - நீ
அருள மறுப்பது நியாயமல்ல !
பிடரி நரம்பின் பக்கத்தில் - உன்
பீடம் இருப்பதை நானறிவேன்!
இடரோ துயரோ எதுவரினும் - அது
எனக்குள் இருப்பினும் கவலையில்லை!
இறைவா உன்னைப் பணிகின்றேன் - இனி
எதுவும் வரட்டும் துணிகின்றேன்!
நிறைவோ , குறைவோ வெறுப்பில்லை - நீ
நினைத்ததே நடக்கும் மறுப்பில்லை!
புத்தகம் ஆயிரம் படித்துவிட்டேன் - என்
புத்தியால் அதனைப் பிடித்துவிட்டேன்!
செத்ததும் எதுவும் தொடர்வதில்லை - என்
சிந்தனை அங்கே படர்வதில்லை!
சொட்டுத் துளியில் படைத்துவிட்டாய் - உன்
சுவனம் வரைக்கும் அழைத்துவிட்டாய்!
கெட்டுத் தொலைவது விதியுமில்லை - உன்
கிருபைக் காக்கும் தடையுமில்லை!
முஹம்ம தென்னும் ஒளிப்பிழம்பு - அதன்
முன்னே கிடக்கும் சிறுதுரும்பு!
எமக்குக் குறைவு வருவதில்லை - இந்த
ஈமான் கணக்கு முடிவதில்லை!
----கவிஞர் A . ஹிலால் முஸ்தபா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக