நீலகிரியில், மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படும் முக்கிய அணைகளில், தண்ணீரின் அளவு குறைந்து வருவதால், மின் உற்பத்திக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள, 13 மின் நிலையங்கள் மூலம், தினமும், 833 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்தாண்டு, போதுமான மழை பெய்யாத நிலையில், தென்மேற்கு
மற்றும் வடகிழக்கு பருவமழையும் பொய்த்தது. இதனால், மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும், அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட முக்கிய அணைகளில், தண்ணீர் அளவு வெகுவாக குறைந்து காணப்படுகிறது.
மழை இல்லையே! : இந்த அணைகளை நம்பியுள்ள, குந்தா, கெத்தை, பரளி, பில்லூர் உள்ளிட்ட மின் நிலையங்களில், தினமும், 515 மெகா வாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது, அணைகளில், தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே வருவதால், மின் உற்பத்தியின் அளவும் குறைந்துள்ளது. அதே போல், பைக்காரா மின் உற்பத்தி திட்டத்தின் கீழ் உள்ள முக்கிய அணைகளிலும், தண்ணீர் அளவு குறைந்து வருகிறது. இதனால், அங்கும் மின்சாரம் உற்பத்தி செய்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ""மழை இல்லாததால், அணைகளில், தண்ணீர் அளவு வெகுவாக குறைந்து, மின் உற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. அணைகளில் உள்ள தண்ணீரின் அளவு, இன்னும் ஓரிரு வாரத்திற்கு மட்டுமே தாங்கும். வரும் நாட்களில் மழை பெய்தால் தான், தடைஇல்லாமல் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்'' என்றார்.
பார்சன்ஸ் வேலியால் பாதகம் வருமா?:
மின் உற்பத்திக்கு பயன்படும் அணைகளில், பார்சன்ஸ் வேலி அணையின் தண்ணீர், ஊட்டி குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்த அணையில், தற்போது, 40 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. வரும் நாட்களில், இதில் இருந்து, மின்சார உற்பத்திக்காக தண்ணீர் எடுத்தால், ஊட்டியில் குடிநீர்தட்டுப்பாடு ஏற்படும். இன்னும் இரண்டு வாரங்களில், கோடை சீசன் துவங்கவுள்ள நிலையில், உள்ளூர் மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் குடிநீர் வழங்கு வதில், நகராட்சி நிர்வாகம் திணற வேண்டிய நிலை ஏற்படும். இதை உணர்ந்து, "பார்சன்ஸ்வேலி அணையில், குறைந்தபட்சம், 30 அடி தண்ணீரை தொடர்ந்து இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், மின் வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதே வேளை, தண்ணீரை எடுக்காமல் இருந்தால், மின்சார உற்பத்தி பாதிக்கும் அபாயமும் உள்ளது. மழை வந்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக