Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 2 மார்ச், 2013

முறையான பயன்பாட்டுச் சான்று இல்லாததால் எம்.பி. தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி ரூ. 3,003.5 கோடி நிறுத்திவைப்பு


மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வியொன்றுக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் மத்திய திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் ஸ்ரீகாந்த்குமார் ஜேனா கூறியது: 2013-ஆம் ஆண்டு மார்ச் இறுதிவரையிலான எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் ரூ. 3,003.5 கோடி மதிப்பிலான நிதி வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள் தொடர்பாக அளிக்கப்பட வேண்டிய பயன்பாட்டுச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால் நிதி வழங்குதல் நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.

எம்.பி. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு எம்.பி. தமது தொகுதியில் ஏதேனும் ஒரு திட்டத்தைப் பரிந்துரை செய்யலாம். அதனை செயல்படுத்துவது அந்த தொகுதி உட்பட்ட மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பாகும்.

ஒரு மக்களவைத் தொகுதி உறுப்பினர் தமது தொகுதியில் ஆண்டுக்கு ரூ.5 கோடி வரையிலான மேம்பாட்டுத் திட்டம் எதையேனும் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்யலாம். மாநிலங்களவை உறுப்பினரைப் பொருத்தவரை, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்தின் ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பரிந்துரை செய்ய இயலும்.

மாநிலங்களவை, மக்களவைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர் நாட்டின் எந்தப் பகுதியிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அவருக்கு விருப்பமான மேம்பாட்டுத் திட்டம் ஒன்றை பரிந்துரை செய்யலாம்.

 மேம்பாட்டுத் திட்ட நிறைவேற்றம் குறித்து பயன்பாட்டுச் சான்றிதழை அந்த உறுப்பினர் வழங்க வேண்டும். ஒரு பணி குறித்துப் பயன்பாட்டுச் சான்று வழங்கப்படாவிட்டால் பின்னர் அந்த உறுப்பினர் அடுத்துப் பரிந்துரைக்கும் வேறு திட்டங்களுக்கு நிதி வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக