Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

நான் சொன்னது கொஞ்சமோ கொஞ்சம்.....!


பேராசிரியர் K.M.காதர் மைதீன் அவர்களை பற்றிய ஒரு படமும் செய்தியும் சில நாட்களாக முக நூலில் பட்டய கிளப்பிக் கொண்டிருக்கிறது.. சந்தோசத்துக்குரிய செய்தி அது.. நானும் கொஞ்சம்... சொல்ல ஆசைப் படுகிறேன்.

அவரோடு 2004ல் தான் எனக்கு முதல் சந்திப்பு நிகழ்ந்தது. மயிலாடுதுறையில் நடந்த இலக்கிய மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்தார். உணவு இடைவேளையில் சற்று ஓய்வாக இருந்தவரை சுற்றிலும் கட்சி பெரியவர்கள். சற்றே தயங்கித் தயங்கி அவர் அருகில் சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டு நமது முற்றம் இதழுக்காக ஒரு பேட்டி தர முடியுமா என்று கேட்டேன்..சில இதழ்களையும் கொடுத்தேன். பார்த்துவிட்டு, ஒப்புக் கொண்டார். எவ்வளவு பெரிய தலைவர்..உடனே ஒப்புக் கொண்டாரே என்று எனக்கு சந்தோசம் பிடிபடவில்லை . எனக்கு உதவியாக இருந்தவர் அன்புத் தம்பி அப்துல் அஜீஸ் தாயிப் .அவர்தான் போட்டோவெல்லாம் எடுத்தார். அரை மணி நேரம் அவரது ஓய்வைக் கெடுத்த புண்ணியத்தை நான் கட்டிக் கொண்டேன். அதன் பிறகு எங்கள் தொடர்பும் நட்பும் வளர்ந்தது.அடிக்கடி சந்தித்தோம். தலைவரை பலமுறை பேட்டி எடுத்து நமது முற்றத்தில் போட்டிருக்கிறேன். அதன் பிறகு பேராசிரியரை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு பேச முடிந்தது. சில சமயங்களில் நாடாளுமன்ற கூட்டத்தில் இருப்பார். அப்போது நான் போன் செய்தால் எடுக்க மாட்டார். ஆனால் வெளியே வந்தவுடன் போன் செய்து விவரம் கேட்பார். அத்தனை பணிவு. 2007ல் சென்னையில் ஒரு மாநாடு. தலைவர் மேடையில் அமராமல் கீழே முன் வரிசையில் உட்கார்ந்து அமைச்சர் மற்றும் பிரமுகர்களோடு பேசிக் கொண்டிருந்தார். நான் நிகழ்சிகளை படம் பிடித்துக் கொண்டிருந்தேன். என்னைக் கண்டதும் உடனே எழுந்து வந்த தலைவர் என் தோளில் உரிமையோடு கை போட்டு " அபு ஹாஷிமா .. நல்லா இருக்கீங்களா?" என்று கேட்டு வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார் ....அவரை பேச அழைக்கும் வரை. "ஒரு சாதாரண மனிதனுக்கு ஒரு தலைவர் இப்படியும் மரியாதை கொடுப்பாரா?"

அந்த " மனிதர்" போகும் பாதையை அதிசயமாக பார்த்து நான் ஸ்தம்பித்து நின்றேன்.

மற்றொரு முறை " நபிகள் நாயகக் காப்பியம் " எழுதியதற்காக பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் சென்னையில் வைத்து

எங்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தியது. அந்த விழாவுக்கு வருகை தந்த தலைவர் எல்லோரும் அழைத்த பிறகும் மேடையில் ஏறாமல் முன் வரிசையில் அமர்ந்து விழாவை ரசித்துக் கொண்டிருந்தார். நாங்கள் பேசுவதை குறிப்பும் எடுத்துக் கொண்டிருந்தார். அங்கே அவரது வாழ்த்து எனக்குக் கிடைத்த பாக்கியம்.

எங்கேயும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத அவரது உயர்ந்த குணத்திற்கு பல சான்றுகளை நான் அவரிடம் நேரில் பார்த்திருக்கிறேன். கட்சியின் நலனுக்காக வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தான் போட்டி இடுவதையே தவிர்த்த தானைத் தலைவர்அவர். இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் எல்லோருக்கும் தான் சொந்தமானவன் என்று பெருமிதமாகச் சொல்லும் பண்புள்ளவர்.

எல்லா செல்வமும் செல்வாக்கும் நிறைந்த ஒரு மனிதர் ஒரு தலையணையை வைத்துக் கொண்டு கிடைத்த இடத்தில் உறங்குகிறார் என்றால் அவர் மனது சுத்தமாக இருக்கிறது என்று அர்த்தம்.

அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அச்சமில்லை என்பது அதன் விளக்கம்.

இப்படிப்பட்ட குண நலன்கள் உள்ள "மனிதர்"களைத்தான் உலகம் " மாமனிதர் " என்று அழைக்கிறது..மரியாதை செய்கிறது.

பேராசிரியர் காதர் மைதீன் அவர்கள் "பெரிய மனிதர்" என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

நீண்ட ஆயுளையும் நிறைந்த ஆரோக்கியத்தையும் சமுதாயத்துக்காக பணியாற்றும் வலிமையையும் நமது பேராசிரியர் அவர்களுக்கு தந்து அல்லாஹ் அருள் புரிவானாக..ஆமீன்.

 நான் சொன்னது கொஞ்சமோ கொஞ்சம்......!

-----------அபு ஹாசிமா வாவர்

1 கருத்து:

  1. நீண்ட ஆயுளையும் நிறைந்த ஆரோக்கியத்தையும் சமுதாயத்துக்காக பணியாற்றும் வலிமையையும் நமது பேராசிரியர் அவர்களுக்கு தந்து அல்லாஹ் அருள் புரிவானாக..ஆமீன்.
    M. Jawahar Ali

    பதிலளிநீக்கு