Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 23 பிப்ரவரி, 2013

ஜவகர் சிறுவர் மன்றங்கள் விரைவில் அமையுமா?


ஒன்றியங்கள் தோறும், ஜவகர் சிறுவர் மன்றங்கள் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அத்திட்டத்தை அமல்படுத்த, அரசு முன்வந்துள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில், 5 முதல், 16 வயதுக்கு உட்பட்ட, மாணவர்களிடையே, மறைந்திருக்க கூடிய, ஆக்கப்பூர்வமான திறமைகளை கண்டுணர்ந்து, பயிற்சி அளித்து, அவற்றை வெளிப்படுத்துவதற்காக, 1979ல், "தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம்" துவங்கப்பட்டது. கலை மற்றும் பண்பாட்டுத்துறையில் செயல்படும், இம்மன்றத்தில், 24 மாவட்ட சிறுவர் மன்றங்கள், 10 விரிவாக்க மையங்கள், இரண்டு ஊரக மையங்கள் உள்ளன.

தமிழகம் முழுவதும், 36 சிறுவர் மன்றங்கள் தவிர்த்து, சென்னையில், தாம்பரம், சேலையூர், புழுதிவாக்கம், வியாசர்பாடி ஆகிய இடங்களில் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், கைவினை, குரலிசை, நாடகம், உடல்திறன், மிருதங்கம், தபேலா போன்ற, 20க்கும் மேற்பட்ட கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. சனி, ஞாயிறு மற்றும் மாலை நேரங்களில் நடத்தப்படும் பயிற்சி மையங்களில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

குறிப்பாக, ஜவகர் சிறுவர் மன்றத்தின் மூலம், கடந்த, கோடைகாலத்தில் அளிக்கப்பட்ட பயிற்சி முகாம்களில், 4,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர். கிராமப்புறங்களில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், மாலை நேரத்தில், இங்கு, பொழுதை வீணாக கழித்து வருகின்றனர். இம்மாணவர்களின் எதிர்கால வாழ்விற்காக, ஒன்றியங்களில் சிறுவர் மன்றங்கள் அமைத்து, பல்வேறு கலை பயிற்சி, கைவினை பயிற்சி அளித்தால், அவர்களின் வாழ்க்கை மேம்படும் என, பல ஆண்டாக கோரிக்கை எழுந்து வந்தது.

இதனால், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில், ஒன்றியங்கள் தோறும், சிறுவர் மன்றங்களை அமைக்க, பொதுமக்கள் கோரி விடுத்து வந்தனர். இந்நிலையில், ஒன்றியங்களில், சிறுவர் மன்றங்கள் அமைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக, தெரிகிறது. மேலும், இத்திட்டம் குறித்த அறிவிப்பு, பட்ஜெட்டில் வெளியாகலாம் எனவும், அதிகாரிகள் மட்டத்தில் பேசப்படுகிறது. இது குறித்து, கலை மற்றும் பண்பாட்டுத்துறையின் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, விளக்கம் அளிக்க மறுத்து விட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக