மௌலானா எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்கள், சமீபகாலமாக உடல்நலம் குன்றியிருந்து இன்று (20-12-2012) அதிகாலை 2-30 மணியளவில் சென்னை தனியார் மருத்துவ மனையில் மரண முற்றார் என்னும் செய்தி நெஞ்சைப் பிழிந்தது.
அவரின் ஜனாஸா நல்லடக்கம் கடையநல்லூரில் 21-12-2012 காலை 9 மணிக்கு நடைபெற விருக் கிறது என்னும் தகவலும் வந்திருக்கிறது. ஹஜ்ரத் அவர்களின் மகன்களும் மருமகன்களும் உடனிருந்து பலவிதமான நல்ல சிகிச்சைகளையும் செய்து வந்தனர். அல்லாஹ்வின் நாட்டம் ஆலிம் அவர்களின் மறைவு இன்றைக்கு ஏற்படவேண்டுமென விதிக்கப்பட்டுள்ளது என்பதை முஸ்லிம்கள் உணருகிறோம்.
மௌலானா கலந்தர் மஸ்தான் ரஹ்மானி அவர்கள் உலமாகளில் ஒளிவீசும் நட்சத்திரமாகத் திகழ்ந்தவர்; குர்ஆன் ஹதீஸ் ஷரீஅத் சட்ட விளக்கங்களில் ஒளிச்சுடராக விளங்கியவர்; தஸவ்வுஃ என்னும் ஆன்மீக ஞானக்கலையில் ஒரு கலங்கரை விளக்கமாக வாழ்ந்தவர். அவரின் பெயரில் அவரின் தந்தையின் பெயரின் முதல் எழுத்து மூலம்-சையது சுலைமான் கலீபா சாஹிப் என்பதன் மூலம் அவரின் தந்தையவர்களும் ஆன்மீக வழிவாறில் ஆழ்ந்திருந்தவர் என்பதை அறியலாம். அதோடு, ‘மஸ்தான்’ என்பதும் ‘கலந்தர்’ என்பதும் சூபிஸக் கொள்கையில் ஊறிப்போனவர்களுடன் தொடர்புடையவை என்பதையும் தெரியலாம். தனது பெயரில் உள்ள சொற்களுக்கு மிகவும் பொருத்தமான வாழ்வு முறையை மேற்கொண்டு வாழ்ந்து வந்த ஹஜ்ரத் அவர்கள் நம்மை விட்டும் பிரிந்திருக்கிறார்கள்.
கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்களைத் தமிழ்கூறும் முஸ்லிம் உலகம் எஸ்எஸ்கே ஹஜ்ரத் என்று பெருமையாக அழைத்தது. அவர் உரையாற்றாத ஊர் தமிழகத்தில் எதுவும் இருக்காது எனலாம். மீலாது விழாக்களிலும், திருக்குர் ஆன் மாநாடுகளிலும், ஷரீஅத் சட்ட கூட்டங்களிலும், மதரஸா பட்டமளிப்பு விழாக்களிலும் ஹஜ்ரத் அவர்கள் மிகச் சிறந்த ஆய்வுரைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். அவரின் கொஞ்சும் தமிழில் பொதிகையில் பூத்த சங்கத் தமிழ் மலரின் மணம் வீசும்; மஸ்தான் பாடல், சீறாப்புராணச் செய்யுள் என்று விரவிவரும். குர்ஆன் வசனங்களுக்கு புதியதும் பொருந்தியதும் நவீன விஞ்ஞான உலகம் வியக்குமாறும் விரிவுரை செய்வார்கள்; ஹதீஸ் கலையில், இமாம் கஸ்ஸாலி போன்ற மேதைகளின் வழியில் நின்று விளக்கவுரை தருவதில் வல்லவராகத் திகழ்ந்தார்கள். கடையநல்லூர் சிராஜ் இதழ் ஆசிரியர் அப்துல்ஹை அவர்களின் அத்தியந்த தோழராக இருந்த மௌலானா அவர்கள், அமைதியின் உருவாகவும், அடக்கத்தின் வடிவமாகவும், ஆழமான ஞானக் கடலாகவும் வாழ்ந்து வந்துள்ளார்கள். அவர்களோடு உரையாடுவது மூலம், இஸ்லாமிய வரலாற்றையே நினைவுக்குக் கொண்டுவரும் நிலைமை ஏற்படும். அந்த நல்லவர், சன்மார்க்கத்தில் வல்லவர், எவர் நெஞ்சையும் ஈர்க்கும் சொல் வல்லவர் இப்பொழுது மறைந்துவிட்டார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் காயிதெ மில்லத், சிராஜுல் மில்லத் மற்றும் எல்லாத் தலைவர்களுடனும் நெருக்கமாக இருந்து இயக்கத்திற்கு தூண்டுகோலாகவும் பெருந்துணையாகவும் இருந்தார்கள். சோதனை மிகுந்த காலங்களில் சோர்வைத் துடைப்பதற்கு துணைநின்ற உலமாகளில் ஹஜ்ரத் அவர்கள் மிக முக்கியமானவர் ஆவார்.
தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டபோது, அதன் முதல் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பொறுப்பை ஏற்றார்; பின்னர், மாநில துணைத் தலைவராகப் போற்றப்பட்டார். முஸ்லிம் லீக் மாநாடுகளில் மார்க்க ஒளியில் அரசியல் விளக்கம் தந்த அந்த வரலாற்று நிகழ்வுகள் என்றும் நினைவில் நிற்கக்கூடியவை. முஸ்லிம் லீக் வரலாற்றில் கடையநல்லூர், அன்சாரிகளைப் போன்றவர்கள் என்று காயிதெ மில்லத் சொன்னார்கள். அதன் ஒட்டுமொத்த உருவமாக இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு உழைத்துச் சிறந்தவர். கிளியனூர் மதரஸத்துல் ரஹ்மானியா - நமது டாக்டர் ஹாஜா கே.மஜீது-இன்றைய வக்ஃபு வாரிய உறுப்பினர்-அவர்களின் தந்தை நிறுவியதாகும். இப்பொழுது டாக்டர்தான் அந்த கல்லூரியின் நிர்வாகியாக உள்ளார். இந்த மதரஸாவில் ஓதியவர்-பட்டம் பெற்றவர் ஹஜ்ரத்-அதனால்தான் அவருக்கு ‘ரஹ்மானி’ சேர்ந்திருக்கிறது. இன்றைய மாநில துணைத் தலைவர் மௌலானா தளபதி ஏ.ஷபீகுர் ரஹ்மான் ஹஜ்ரத் ஒன்றைச் சொன்னார்கள்: ரஹ்மானியா மதரஸாவில் கலந்தர் மஸ்தான் இறுதி வகுப்பில் இருந்தார்; அப்பொழுது முதல் வகுப்பில் நான் இருந்தேன். வாரந்தோறும் நடக்கும் பேச்சுப் பயிற்சி வகுப்பில் கலந்தர் மஸ்தான் அவர்களின் பேச்சுத்தான் எல்லோராலும் பாராட்டப்பெறும்; உஸ்தாதுகளே மிக உயர்வாக அவரின் சொற்பொழிவை மதிப்பார்கள் என்று சொன்னார். அத்தகைய மெத்தகு மேதை இன்று நம்மிடம் இல்லை.
தமிழக உலமாகளுக்கு கடல் கடந்த நாடுகளில் பேரும் புகழும் நிறைய உள்ளது. அதில் முதல் தரத்தைப் பெற்றிருந்தவர் மௌலானா கலந்தர் மஸ்தான் அவர்கள்.
35 முறை ஹஜ் செய்துள்ளவர்; ஹஜ்ஜின் போதும் இஸ்லாமிய விரிவுரை ஆற்றியவர். அகில இந்திய உலமாகள் சபையின் துணைத் தலைவராக இருந்தார்; கடையநல்லூர் தங்ஙள் கட்சி என்னும் தரீகாவுக்கு தலைமைப் பொறுப்பேற்றிருந்தார். இறுதிவரை மஹ்ழரத்துல் காதிரியாவின் முதல்வர் பொறுப்பிலே இருந்து, இன்று எல்லாரையும் பிரிந்து அல்லாஹ்வின் சந்நிதானம் நோக்கிப் பயணம் மேற்கொண்டுவிட்டார்.
"மௌத்துல் ஆலிம் மௌத்துல் ஆலம்-அறிஞரின் மரணம், அகிலத்தின் மரணம்’’ என்பது அரபி பழமொழி. ஆம். மனிதர்களின் மனங்களுக்கு ஞான ஒளியை வழங்கி வருபவர்கள் ஆலிம்கள்-அறிஞர்கள். அவர்களின் மறைவு அதிகரிக்கு மானால், ஞானமற்றவரின் கூட்டம் ஞாலத்தில் அதிகரித்துவிடும்-ஞானமற்றவர் பெருகும்போது ஞாய மற்றவர்கள் பெருகுவர்; அதனால் ஞாலம்-உலகம் ஞான சூன்யத்துக்கு ஆட்பட்டுவிடும் எனில், அழிவும் மரணமும் ஏற்படும் என்பது இயற்கை விதியேயாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மௌலானா கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்களுக்கு உயர்ந்த உன்னத இடத்தை அளித்து சுவர்க்கப் பூங்காவில் சுகித்திருக்கச் செய்வானாக.
ஹஜ்ரத் அவர்களின் மறைவால் வாடியுள்ள அவர்தம் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும், அவரின் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் நமது அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவிப்போமாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக