Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 20 டிசம்பர், 2012

போடிநாயக்கனூர் அருகே ரூ.1350 கோடி செலவில் நியூட்ரினோ ஆராய்ச்சி மையம்


மதுரை மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே ரூ.1350 கோடி செலவில் நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ளது என்று இந்திய நியூட்ரினோ ஆராய்ச்சி (ஐ.என்.ஒ.)விஞ்ஞானி டாக்டர் சத்திய நாராயணா கூறினார்.

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நியூட்ரினோ குறித்த ஆராய்ச்சி கருத்தரங்கு வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில், துணை வேந்தர் பி.கன்னியப்பன் முன்னிலையில் இன்று நடைபெற்றது. பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் வரவேற்றார். விஞ்ஞானி சத்திய நாராயணா கருத்துரையாற்றினார்.

அவர் பேசுகையில் கூறியதாவது: நியூட்ரினோ என்பது சூரியனுடைய கதிர்களிலிருந்து வெளிவரும் மிகவும் நுண்ணிய எல்க்ட்ரானைவிட அளவில் சிறிய அணுவாகும். இதனைக் கண்டறிந்து, அளவு முறைகள், பயன்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய, இந்திய நியூட்ரினோ அப்செர்வேட்டரி (I.N.O.) என்ற நிறுவனம் ஒரு மிகப் பெரிய ஆராய்ச்சி மையத்தை அமைக்கவுள்ளது. இந்த மையம் மதுரை மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே மலையைக் குடைந்து அமைக்கப்படவுள்ளது. இது மதுரை பொட்டிப்புரம் கிராமம் வரை அமையும். இத்திட்டத்திற்கு 12-வது திட்டக் குழுவில் ரூ.1350 கோடி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


உலக அளவில் பல்வேறு நாடுகள் எதிர்நோக்கும் மிகப் பெரிய திட்டமாக இது உருவாகவுள்ளது. இதில் அனைத்து பொறியியல் துறைகளின் பங்கும் ஏராளமாக உள்ளது. இந்தத் திட்டத்தை இந்திய அணுசக்தி கழகம்(D.A.E.)மற்றும் இந்திய அறிவியல் தொழில்நுட்பக் கழகம்(D.S.T.)இணைந்து உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன.

இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் இதுவரை 26 ஆராய்ச்சிக் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், 100 விஞ்ஞானிகளும், மும்பை டாடா அணுசக்தி நிறுவனத்துடன் இணைந்து திட்டத்தை நிறுவுவதற்கு பணி செய்து வருகிறார்கள்.

இந்தச் திட்டத்தை நிறுவுவதற்கு, இணைந்து பணியாற்றக்கூடிய வசதி வாய்ப்புகள், தொழில்நுட்பங்கள் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்ளது. இங்குள்ள ஆராய்ச்சிக் கூடங்கள், கணினி வல்லுநர்கள், இயந்திரவியல் துறையினர் மூலம் புதிய இயந்திரங்களையும், கணினி மென்பொருள்களையும் ஏற்படுத்தித் தர முடியும். எனவே இத் திட்டத்தில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு முக்கிய பங்கு தரப்படும் என்றார் அவர்.


மேலும் இந்த ஆராய்ச்சி மையத்தில் எவ்வாறு சூரியனிடமிருந்து, நியூட்ரான் சேகரிக்கப்பட்டு, மலைக் குகைக்குள் எவ்வாறு கொண்டு வரப்பட்டு, அதனை ஆராய்ச்சியில் எவ்வாறு ஈடுபடுத்துகிறார்கள் என்பது குறித்த பட விளக்கம் செய்முறை விளக்கத்துடன் காட்டப்பட்டது.

நிகழ்ச்சியில் துணை வேந்தர் பி.கன்னியப்பன் பேசுகையில் கூறியதாவது: நியூட்ரினோ ஆராச்சிக்கேற்ப புதிய பாடப் பிரிவுகள் பி.டெக்., எம்.டெக்., அளவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்படும். மாணவர்களும், பேராசிரியர்களும் இதில் ஆராய்ச்சிகளைத் தொடங்க ஐ.என்.ஓ. வழிவகுக்கும் என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக