மாணவர்களுக்கு வழங்கிய, 81 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகையை மோசடி செய்த, 73 பள்ளித் தலைமையாசிரியர்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள் மீது இதுவரை மேல் நடவடிக்கை எடுக்காததால், பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர்.
அரசு பள்ளிகளில், மேல்நிலை வகுப்பு பயிலும், ஆதிதிராவிடர் இன மாணவ, மாணவியருக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம், மத்திய அரசு ஆண்டுதோறும், 1,850 ரூபாய் உதவித் தொகை வழங்குகிறது. ஆதிதிராவிடர் இனத்தில், சுகாதாரமற்ற தொழிலில் ஈடுபடும் பெற்றோரின் குழந்தைகளுக்கு, இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், 2010-11 மற்றும் 2011-12ம் ஆண்டு, 81 லட்சம் ரூபாய், கல்வி உதவித் தொகை, மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம், அந்த தொகை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களிடம் காசோலையாக வழங்கப்பட்டது.
போலிக் கையெழுத்து போட்டு, 81 லட்சம் ரூபாயை, பள்ளி தலைமையாசிரியர்கள், ஆதிதிராவிடர் நலத்துறையினர், புரோக்கர் மூலம் சுருட்டியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் செய்த தீவிர விசாரணையைத் தொடர்ந்து, கல்வி உதவித் தொகை, 81 லட்சம் ரூபாயை கையாடல் செய்த, பள்ளி தலைமையாசிரியர்கள், 73 பேர், ஆக., 3ம் தேதி, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராமச்சந்திரன், உதவியாளர் உமாபதியும் அடுத்தடுத்து, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அவர்களிடம் விளக்கம் கேட்டு, சார்ஜ் மெமோ வழங்கப்பட்டது. அதற்கு உரிய விளக்கங்களை, அனைத்து தலைமையாசிரியர்களும் வழங்கி விட்டனர்.ஆனால், அதற்கு மேல் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், கிணற்றில் போடப்பட்ட கல்லாக அந்த விவகாரம் உள்ளது.
"மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக