Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? - வனவிலங்கு பாதுகாப்பு படிப்பு (LIFE SCIENCE )


வனவிலங்குகளின் வாழ்வைப் பற்றிய அடிப்படை புரிதலை Life Sciences பாடம் வழங்குகிறது. அதேசமயம், கால்நடை அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் படிப்புகள், வனவிலங்கு பாதுகாப்பில் துணை செய்கின்றன. பள்ளி மேல்நிலைப் படிப்பில் கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களைப் படித்தப் பிறகு, இளநிலைப் படிப்பில், விலங்கியல், தாவரவியல், வனவளம், சுற்றுச்சூழல் மற்றும் கால்நடை அறிவியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை படிப்பது, இத்துறையில் நுழைவதற்கான ஒரு ஆரம்பம்.

பூகோள தகவல் அமைப்புகள், ரிமோட் சென்சிங் மற்றும் புள்ளியியல் போன்றவை, மிருகங்களை கண்காணித்தல் மற்றும் கணக்கெடுத்தல் போன்ற பணிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் நவீன அம்சங்களாக திகழ்கின்றன. The wildlife institute of Inida(WII), National centre of biological sciences(NCBS) போன்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலை போன்ற சில முக்கிய பல்கலைகள், வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான முதுநிலைப் படிப்புகளை வழங்குகின்றன. இந்தப் படிப்புகள் Landscape ecology, Remote sensing and Conservation genetics போன்ற தொழில்நுட்பங்களை இணைக்க முயல்கின்றன.

NCBS கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும் M.Sc in wildlife biology and conservation என்ற படிப்பானது, பெங்களூர் வனவிலங்கு படிப்புகளுக்கான மையத்தின்(CWS) கூட்டிணைவோடு வழங்கப்படுகிறது மற்றும் பட்டமானது, அடிப்படை ஆராய்ச்சிக்கான டாடா கல்வி நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. மேலும், பெங்களூரிலுள்ள Ashoka trust for research in ecology and the environment, Nature conservation foundation and National institute of advanced studies போன்ற கல்வி நிறுவனங்களும், இத்துறை தொடர்பான படிப்புகளை வழங்கி வருகின்றன.


தகுதிகள் மற்றும் சேர்க்கை
NCBS கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கையானது, தேசிய அளவிலான எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் நடைபெறுகிறது. பலவிதமான படிப்பு பின்னணியிலிருந்து வரும் மாணவர்களை சேர்ப்பதும் ஊக்குவிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களோடு, ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள், இறுதியாண்டு படிப்பவர்கள் ஆகியோர், இந்தப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

WII கல்வி நிறுவனத்தில், மாணவர் சேர்க்கை சற்று மாறுபட்டது. உயிரி அறிவியலை முக்கிய பாடமாக வைத்து, பி.எஸ்சி முடித்தவர்கள் அல்லது கால்நடை அறிவியல், வனவளம், வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

NCBS -ஐ பொறுத்தவரை, 2 வருடங்களுக்கு ஒருமுறையே அந்தப் படிப்பு வழங்கப்படுகிறது மற்றும் சேர்க்கைக்கான விளம்பரம், படிப்பு தொடங்குவதற்கு 7 அல்லது 8 மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிடுகிறது. மேலும், மாதம் ரூ.10,000 உதவித்தொகையும் NCBS மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. தங்குமிட வசதியும் உண்டு.

இத்துறையில் முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொள்வதும் சுவாரஸ்யமான ஒன்று. இதன்மூலம் ஒருவரின் அறிவு விரிவடைவதுடன், பலவிதமான வாய்ப்புகளையும் ஒருவர் பெற முடியும். நமக்கு விருப்பமான தலைப்பில் பி.எச்டி செய்வதை நாம் உறுதிசெய்ய வேண்டும்.


பணிநிலைகள் மற்றும் துறைகள்
வனவிலங்கு பாதுகாப்புத் துறையில் நுழைய பலவிதமான வழிகள் உள்ளன. இங்கே அவை, 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

வனவிலங்கு ஜர்னலிசம் மற்றும் டூரிஸம்
வனவிலங்கு ஜர்னலிசம், இயற்கை போட்டோகிராபி அல்லது டாகுமென்டரிகளை தயாரிக்கும் அதிகளவு நபர்களை இந்தப் பிரிவு ஈர்க்கிறது. மீடியா திறனிற்கு அப்பாற்பட்டு, வனவிலங்கு தொடர்பான அம்சங்களை ஆராய்வதற்கான அறிவு மற்றும் ஆர்வத்தை இத்துறை கோருகிறது. மீடியாவைப் போலவே, வனவிலங்கு டூரிஸமானது, பல இயற்கை ஆர்வலர்களுக்கு தங்களின் விருப்பத்தையும், தொழிலையும் ஒருங்கிணைக்கும் வாய்ப்பை அளிக்கிறது.

கார்பரேட் சமூக பொறுப்பு(சி.எஸ்.ஆர்/என்.ஜி.ஓ)
அழிந்துவரும் விலங்கினங்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில், என்.ஜி.ஓ -க்கள் பலவிதமான பணிகளை ஆற்றி வருகின்றன. எனவே, ஆராய்ச்சியாளர்கள், களப் பணியாளர்கள், மீடியா நபர்கள், Outreach பணியாளர்கள், வேட்டைத் தடுப்பு மற்றும் நுண்ணறிவு நெட்வொர்க் நிபுணர்கள் போன்ற பல பணி நிலைகளில் என்.ஜி.ஓ -க்களுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

மேலும், வன அருகாமையிலுள்ள சில பாரம்பரிய வேட்டை சமூகத்திடமிருந்தும் ஆட்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை, வேட்டைக்கெதிராக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.


ஆராய்ச்சிப் பணி:அரசுகள், என்.ஜி.ஓ -க்கள், WII, NCBS, ATREE, NCF போன்றவை, வனவிலங்குகள் தொடர்பான அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. வனவிலங்கு அறிவியல் துறையில் முதுநிலைப் படிப்பை முடித்தப்பின்னர், மேற்கூறிய நிறுவனங்களில், பி.எச்டி மேற்கொள்ளும் வாய்ப்பு பெறுவதுடன், Wildlife biologist மற்றும் Research associates போன்ற பணி வாய்ப்புகளையும் பெறுவார்கள்.
அரசுப் பணிகள்:தேசிய பூங்காக்கள், புலிகள் சரணாலயங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஆகியவற்றில் பணியாற்றவும், நிர்வகிக்கவும், மத்திய - மாநில அரசுகள், அலுவலர்களை நியமிக்கின்றன. இந்த அலுவலர்கள் பின்னாளில், வனவளம், வனவிலங்கு மற்றும் நில மேலாண்மை ஆகியவற்றில் பயிற்சி பெறுகிறார்கள். ஒரு பட்டதாரி, இதுபோன்ற பணிகளில் இணைந்து, வனவிலங்கு பற்றிய தனது திறனையும், அறிவையும் வளர்த்துக் கொள்ளலாம்.
ஆனால் சில அரசுத்துறை பணியாளர்கள் இவ்வாறு கூறுகிறார்கள். "கன்சர்வேஷன் பயாலஜிஸ்ட் போன்ற ஒரு சில பணிவாய்ப்புகளே அரசுத்துறைகளில் உள்ளன. இதன்மூலம், வனவிலங்கு அறிவியலில் பயிற்சிபெறும் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் சுருங்கி காணப்படுகின்றன.
சுற்றுச்சூழல் சட்டம்:வனவிலங்கு மற்றும் வனங்களைப் பாதுகாக்கும் ஆர்வமுடையவர்கள், அதன்பொருட்டு தங்களின் சட்ட அறிவைப் பயன்படுத்தி சாதிக்கலாம். ஆனால் அதேசமயம், நீதிமன்றங்களில் வாதாட, சட்டப் படிப்பை கண்டிப்பாக முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்:இத்துறையில் முதுநிலைப் படிப்பை முடித்து என்.ஜி.ஓ -வில் பணிக்கு சேரும் ஒருவர் ஆரம்பத்தில் ரூ.15000 முதல் 20000 வரை பெற முடியும். GIS நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், அவரவர் திறமை மற்றும் அனுபவத்திற்கேற்ற ஊதியத்தைப் பெறலாம். வனம் தொடர்பான பல பணிகளை சிவில் சர்வீஸ் தேர்வுகளின் மூலம் பெறலாம்.
பல ஆர்வலர்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிக்கு சேர்ந்து நல்ல வாய்ப்புகளை பெறுகிறார்கள். WII, NCBS போன்ற கல்வி நிறுவனங்கள், முதுநிலை மற்றும் பி.எச்டி பட்டங்களைப் பெற, தேர்ந்தெடுக்கப்பட்ட  மாணவர்களுக்கு உதவித்தொகைகளை வழங்குகின்றன.
தேவைப்படும் பண்புக்கூறுகள்:இத்துறையில் ஈடுபடுவோர், வனவாழ்க்கைத் தொடர்பான சமூக, சுற்றுப்புற மற்றும் பொருளாதார காரணிகளைப் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் அவர்களுக்கு, சிறந்த தகவல்தொடர்பு மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்கள் இருக்க வேண்டும். அதேசமயம், தங்களின் பணி தொடர்பான உயரிய லட்சியத்தை, அவர்கள் எப்போதும் விட்டுக்கொடுத்துவிடக்கூடாது என்பதே இங்கு முக்கியம். அதுவே, உங்களுக்கான ஆத்ம திருப்தி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக