Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

'அமைதிக்கான அணுசக்தி திட்டங்களை விட்டுக்கொடுக்க முடியாது'அணிசேர நாடுகள் மாநாட்டில் ஈரான் தலைவர் ஆயதுல்லா பேச்சு


"அமைதிக்கான அணுசக்தி திட்டங்களை, ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது,'' என, ஈரான் தலைவர் ஆயதுல்லா  தெரிவித்துள்ளார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில், அணி சேரா நாடுகளின் மாநாடு, நேற்று துவங்கியது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், உட்பட 50க்கும் அதிகமான நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.


ஈரான் நாட்டின் ஆன்மீகத்  தலைவர் ஆயதுல்லா , இந்த மாநாட்டில் பேசியதாவது:அணு ஆயுதங்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம், எப்போதும் எங்களுக்கு கிடையாது. அதே நேரத்தில், அமைதிக்கான அணுசக்தி திட்டப் பணிகளை, ஒரு போதும் கைவிட முடியாது. அணு ஆயுதங்களை பெற்றிருக்கக்கூடிய மேற்கத்திய நாடுகள், உண்மையில் தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க மனமில்லை. மாறாக, எங்கள் நாட்டின் மீது ஏராளமான பொருளாதார தடைகளை திணித்து வருகின்றன.

"அணு ஆயுதங்களை தயாரிக்கக் கூடாது' என்று சொல்பவர்கள், அணு எரிபொருள் சப்ளை செய்வதை தங்கள் வசம் வைத்துக் கொண்டு உலகை ஆட்டிப்படைக்கிறார்கள். அணு ஆயுதங்கள், ரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதை நாங்கள் பாவமாக கருதுகிறோம். மத்திய கிழக்கு நாடுகளில், அணு ஆயுதமே இருக்கக்கூடாது, என்ற திட்டத்தை வற்புறுத்துகிறோம். அதே நேரத்தில், அமைதிக்கான அணுசக்தி திட்டத்தை பயன்படுத்த ஒவ்வொரு நாட்டுக்கும் உரிமை உண்டு.இவ்வாறு ஆயதுல்லா  பேசினார்.


ஈரான் அதிபர் அகமது நிஜாத் குறிப்பிடுகையில், "பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக் உள்ளிட்ட நாடுகளில், அமெரிக்கா, அமைப்பு ரீதியான முறையில் மக்களை கொன்று குவித்து வருகிறது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் "வீட்டோ' அதிகாரம் பெற்ற நாடுகளுக்கு சாதகமாக தான் நடக்கிறது' என்றார்.

பிரதமர் மன்மோகன் சிங், இந்த மாநாட்டில் பேசுகையில், "பலதரபட்ட சமுதாய மக்கள் ஒன்றிணைந்து வாழும் ஜனநாயக நடைமுறையை, இந்தியா ஆதரிக்கிறது. சிரியா போன்ற நாடுகளில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடக்கிறது. இதுபோன்ற கிளர்ச்சி, வெளியிலிருந்து தூண்டப்படக் கூடாது. இதனால், உள்ளூர் மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள், சிரியா நாட்டு விஷயத்தில் பின்பற்றப்பட வேண்டும்' என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக