இந்தியா, பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட 120 நாடுகள் உறுப்பினராக உள்ள அணிசேரா நாடுகளின் 16-வது மாநாடு வருகிற வியாழக்கிழமை ஈரான் தலைநகர் டெக்ரானில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன்சிங் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று ஈரான் நாட்டிற்கு புறப்பட்டு செல்கிறார்.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள், அந்த நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்து உள்ளன. அந்த நாட்டிற்கு வழங்கப்பட்டு வந்த பல சலுகைகளை மேற்கு நாடுகள் நிறுத்தி விட்டன. மேலும், அந்த நாட்டில் இருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா உள்ளிட்ட நாடுகளை, ஈரானுடன் உள்ள வாணிப தொடர்புகளை குறைத்துக் கொள்ளுமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டது.
இருப்பினும், அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், இந்த சுற்றுப்பயணத்தின்போது, ஈரான் நாட்டின் அதிபர் அகமதினிஜாத் மற்றும் மத தலைவர் அயதுல்லா அலி கோமேனி உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
இதுகுறித்து, டெல்லியில் நேற்று வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் கூறுகையில், 'இந்த பேச்சுவார்த்தையானது, ஒட்டுமொத்த ஆசிய மற்றும் அரபு பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பு பற்றியும், குறிப்பாக இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம், எண்ணெய் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும் இருக்கும். மற்ற நாடுகளின் அக்கறைகளுக்கு முன்னுரிமை அளிக்காமல், நம்முடைய சொந்த அக்கறைகளை கருத்தில் கொண்டே இந்த பேச்சுவார்த்தை அமையும்' என்று தெரிவித்தார்.
மேலும், இந்த மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரையும் பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து பேச உள்ளார். அதேபோன்று, கடந்த 1979-ம் ஆண்டில் ஏற்பட்ட புரட்சிக்கு பின்னர் ஈரானுக்கு வருகை தரும் எகிப்து நாட்டின் முதல் அதிபரான முகமது மோர்சியுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இந்த மாநாட்டை ஈரானில் நடத்துவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அந்த மாநாட்டை நடத்துவதை மிகப்பெரிய ராஜதந்திர சாதனையாக ஈரான் பார்க்கிறது. இதில், அமெரிக்காவின் வேண்டுகோளை புறக்கணித்துவிட்டு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கிமூனும் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டில், ஈரான் அணு திட்டம், சிரியா கலவரம் மற்றும் பிராந்திய விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக