Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

இந்தியாவில் 'கிரெடிட் கார்டு' மூலம் செலவழிப்பில் புதிய சாதனை

நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்.,-ஜூன் வரையிலான முதல் காலாண்டில், கிரெடிட் கார்டு வாயிலாக, 28,465 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என, ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, புதிய சாதனையாகும்.மதிப்பீட்டு காலத்தில், கிரெடிட் கார்டு மூலம் செலவிடுவது, முந்தைய நான்கு காலாண்டு களில் இல்லாத அளவில், 9.9 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த 2003-04 மற்றும் 2004-05ம் நிதியாண்டுகளை விட, நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், கிரெடிட் கார்டு வாயிலாக செலவிடுவது அதிகரித்துள்ளது என, வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பண பரிவர்த்தனை:ஆக்சிஸ் பேங்க்-ன் மூத்த துணை தலைவர் மற்றும் நுகர்வோர் செலவழிப்பு மற்றும் பணப் பரிவர்த்தனை பிரிவின் தலைவர் ஜெய்ராம் ஸ்ரீதரன் கூறும்போது, "தற்போது, வங்கிகள், வாடிக்கையாளர் பெற்றுள்ள கடன் குறித்த முழு விவரங்களையும் அறியும் வசதி உள்ளதால், அந்த விவரங்களின் அடிப்படையிலேயே கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது. இதனால், கடனை திரும்பச் செலுத்த தவறுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது' என்று தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி:மேலும், 2008-09ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடியால், சந்தையில் காணாமல் போன கிரெடிட் கார்டு சலுகைகள், தற்போது மீண்டும் சந்தையை கலக்கி வருகின்றன.கிரெடிட் கார்டு நிறுவனங்களும், வர்த்தக நிறுவனங்களும் இணைந்து, கிரெடிட் கார்டு பயன்பாட்டை அதிகரிப்பதற்கான புதிய திட்டங்களை யோசித்து செயல்படுத்துகின்றன. இதன் காரணமாகவும், கிரெடிட் கார்டு வாயிலான செலவழிப்பு உயர்ந்துள்ளது என, ஸ்ரீதரன் மேலும் கூறினார்.
கிரெடிட் கார்டு வாயிலான செலவழிப்பு தொகைக்கு, குறிப்பிட்ட காலம் வரை வட்டி தள்ளுபடி வழங்கப்படுவதும், அதன் பயன்பாடு உயர வழிவகுத்துள்ளது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள், வட்டி தள்ளுபடி காலத்திற்கு உள்ளாகவே கடன் தொகையை செலுத்தி விடுவதாக, வங்கியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து எஸ்.பீ.ஐ., கார்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கடம்பி நரஹரி கூறுகையில், "இந்திய நுகர்வோர்கள், வட்டி தள்ளுபடி காலத்தை பயன்படுத்திக் கொள்வதற்காகவும், மிகப் பெரிய சில்லரை நிறுவனங்கள் அளிக்கும் சலுகைகளை பெறவும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர்' என்றார்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும், ஜி.இ. கேப்பிடல் நிறுவனமும் இணைந்து, எஸ்.பீ.ஐ. கார்ட்ஸ் நிறுவனத்தை உருவாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.கிரெடிட் கார்டுதாரர்களில் பெரும்பாலோர், சில்லரை விற்பனையகங்களில் பலதரப்பட்ட பொருட்கள் வாங்கவும், பயணச் செலவினங்களுக்காகவும், கிரெடிட் கார்டை பயன்படுத்துகின்றனர். மேலும், பலர், காப்பீட்டு பிரிமியம் மற்றும் அலைபேசி பயன்பாட்டு கட்டணங்களை செலுத்தவும் கிரெடிட் கார்டை பயன்படுத்துகின்றனர்.

மின் கட்டணம்:கிரெடிட் கார்டு வாயிலான செலவழிப்பு, ஆரோக்கியமான முறையில் வளர்ச்சி கண்டு வருகிறது. தற்போது, இவ்வகை கடன் அட்டைகளை பயன்படுத்த பல்வேறு வாய்ப்புக்களும், வசதிகளும் உள்ளன. மின் கட்டணம்,சொத்து வரி, தொலைபேசி, அலைபேசி கட்டணம் போன்ற பலவற்றுக்கு கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவது அதிகரித்துள்ளது.
இது போன்ற வசதிகள், சலுகைகள் ஆகியவை கிரெடிட் கார்டு வாயிலாக செலவிடுவதை ஊக்குவிக்கின்றன' என, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியின், சில்லரை வர்த்தக பிரிவு பொதுமேலாளர் ஷியாமல் சக்சேனா தெரிவித்தார்.உதாரணமாக, சில நிறுவனங்கள், கிரெடிட் கார்டு மூலம் திரைப்படத்திற்கான டிக்கெட்டை வாங்கினால், ஒரு டிக்கெட்டை இலவசமாக வழங்குகின்றன. இது போன்ற சலுகைகளால், கிரெடிட் கார்டு வாயிலாக செலவழிப்பது அதிகரித்து வருகிறது என, ஷியாமல் சக்சேனா மேலும் கூறினார்.இந்தியாவில், சென்ற ஜூன் மாத நிலவரப்படி, 1.80 கோடி கிரெடிட் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக