Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

வாழ்க்கையின் அடுத்த கட்டம் எது ?

சமீபத்தில் சந்தித்த ஒரு வெற்றிகரமான பத்திரிக்கையாளர் சொன்ன கருத்து மிகவும் சிந்திக்க வைப்பது. வெற்றிகரமான பத்திரிக்கையாளராக இன்று வரை இருந்து வரும் அவர், விரைவில் பத்திரிக்கை தொழிலை விட்டு வேறு தொழிலுக்குச் செல்லப் போகிறேன் என்று கூறினார்.

ஏன் என்று கேட்டதற்கு, நான் பத்திரிக்கை தொழிலுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிறது. தொடக்கத்தில் நான் பத்திரிக்கை தொழிலுக்கு வந்த போது, இந்தச் சமுதாயத்தையே மாற்றிப் போட வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் வந்தேன். ஆனால் நாளடைவில் பத்திரிக்கை தொழிலில் இருந்து கொண்டு அது போல எதுவும் செய்ய முடியாது என்பது புரிந்து, ஏதோ நம்மால் இயன்றவற்றை செய்யலாம் என்று தான் இன்று வரை செயல்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.

ஆனால், இருபது ஆண்டுகளுக்கு முன்பாவது பத்திரிக்கையில் எழுதினால் ஏதாவது ஒரு தாக்கம் இருக்கும். நடவடிக்கை இருக்கும். ஆனால் இப்போது சூழல் மிக மோசமாக மாறி விட்டது. ஆதாரத்தோடு பத்திரிக்கையில் எழுதினால் கூட எதுவுமே நடக்க மாட்டேன்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்னால், ரோடு சரியில்லை, விவசாயிகள் பிரச்சினை, காவல்துறையிலும் மற்ற துறைகளிலும் ஊழல் என்று நான் எழுதியது இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இன்றும், சாலை சரியில்லை, ஊழல் என்றுதான் எழுத வேண்டியிருக்கிறது. அப்படி இருக்கும் போது, நான் எதற்காக பத்திரிக்கை துறையில் தொடர்ந்து இருக்க வேண்டும் ? ஜனங்களே காசை வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் நிலைக்கு சமுதாயம் சீரழிந்து விட்ட நிலையில் வேறு ஏதாவது நேர்மையான தொழில் செய்து பிழைக்கலாமே என்று அவர் கேட்ட கேள்வி, சவுக்கை சிந்திக்க வைத்தது.

இருபது ஆண்டுகளாக இந்திய ஜனநாயகம் பின்னோக்கித் தானே செல்கிறது ? இருபது ஆண்டுகளுக்கு முன்பு, உண்ணாவிரதம் இருக்கவும், ஊர்வலம் செல்லவும், ஆர்ப்பாட்டம் நடத்தவும் இருந்த உரிமைகள் கூட இன்று இல்லையே ?

ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த போது எழுந்த முந்த்ரா ஊழலால், டி.டி.கிருஷ்ணமாச்சாரி பதவி விலக நேரிட்டதே. ஒரே ஒரு ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகினாரே.. …. ?

25 ஆண்டுகளுக்கு முன்பு கூட, சட்டவிரோதமாக தொலைபேசி ஒட்டுக் கேட்கப் படுகிறது என்ற குற்றச் சாட்டுக்காக ராமகிருஷ்ண ஹெக்டே பதவி விலகினாரே ?

இன்று என்ன நிலை ? சட்ட விரோதமாக எதிர்க்கட்சியினர், வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் அதிகாரிகள் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப் படுகின்றன என்று தொடர்ந்து குற்றச் சாட்டுகள் வந்த போதும் குறைந்த பட்சம் குற்றம் சாட்டப் பட்ட நபரை அந்தப் பதவியை விட்டு மாற்றுவதற்கு கூட கருணாநிதி தயாராக இல்லை. மாற்றுவதற்கு தயாராக இல்லாததால், இந்த சட்ட விரோத ஒட்டுக் கேட்பின் பின்னணியில் உள்ளது கருணாநிதி தானோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

ஊழலை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் ஊழல் பரவிக் கிடக்கிறது. ஊழல் புற்று நோயைப் போல, அனைத்து இடங்களிலும் புரையோடிப் போய் இருக்கிறது. ஆனால் இந்த ஊழலோடு சமரசம் செய்து கொண்டு, இந்த ஊழலில் நாம் எப்படி பங்கு பெறுவது என்ற ஆர்வத்தோடு உள்ளது நமது சமூகம். இப்படிப் பட்ட சமூகத்தில் என்ன மாற்றத்தை கொண்டு வர முடியும் ?

காந்தி படத்தில் ஒரு காட்சி வரும். தென் ஆப்பிரிக்காவில் காந்தி, வெள்ளையர் அல்லாதவர்களுக்காக வழங்கப் பட்ட அடையாள அட்டையை கொளுத்தும் போராட்டத்தை நடத்துவார். அந்த போராட்டத்தில் காந்தி கடுமையாக தாக்கப் படுவார். அதையொட்டி கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் படுவார்.

காந்தி தாக்கப் பட்டதையும், கைது செய்யப் பட்டதையும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை பெரிய அளவில் செய்தியாக வெளியிடும். இதைக் கண்ட தென்ஆப்பிரிக்க ஆங்கிலேய அரசாங்கம், உடனடியாக காந்தியையும் மற்றவர்களையும் விடுதலை செய்து உத்தரவிடும்.

இன்று ஊடகங்கள் இருக்கும் சூழலை எண்ணிப் பாருங்கள். எண்பது விழுக்காடு பத்திரிக்கைகள் முதல்வரின்  கட்டுப் பாட்டில் உள்ளன. இந்தச் சூழலில் கருணாநிதியை மீறி ஊடகங்களில் செய்தி எப்படி வெளி வரும் ? மீதம் உள்ள இருபது விழுக்காடு ஊடகங்கள் எதிர்க்கட்சி ஊடகங்களாக இருப்பதால் அதற்கான நம்பகத் தன்மை குறைவாக உள்ளது.

அதையும் மீறி ஏதாவது ஊடகத்தில் அரசுக்கு எதிரான செய்திகள் வருமானால், அதை எழுதிய செய்தியாளரைப் பற்றியும், அவர் சாதியைப் பற்றியும், விலாவரியாக ஆராய்ந்து, அவர்களுடைய நாளிதழிலேயே , படிக்கக் கூசும் அளவுக்கு, சிலந்தி, காராபூந்தி என்று ஏதாவது ஒரு பெயரில் எழுதுவது.

இதுதானே இன்றைய சூழல் ? இன்று சவுக்கு தளத்தில் வெளிவரும் குற்றச் சாட்டுகளை வெகுஜன ஊடகங்கள் வெளியிடத் தயாராக இருக்குமேயானால் சவுக்கு என்ற தளம் எதற்கு ?

அரசியல் சீரழிந்து விட்டது. ஊடகங்கள் தரம் தாழ்ந்து தங்களது சுதந்திர மன நிலையை இழந்து விட்டன. நம்பகத் தன்மையை இழந்து விட்டன. சரி நீதிமன்றத்திலாவது நியாயம் கிடைக்குமா என்றால், இது எல்லாவற்றையும் விட, மோசமான சூழலில் தான் நீதிமன்றம் இருக்கிறது.

தமிழில் பெயர் வைத்தால், வரி விலக்கு அளித்ததால் அரசுக்கு வரி இழப்பு ஏற்பட்டுள்ளது, இதனால் மொழி வளரவில்லை என ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தால், அரசு எப்படி வேண்டுமானாலும் வரி விலக்கு வழங்கலாம் என்று தீர்ப்பு.

போலி என்கவுண்டரில் தொடர்ந்து படு கொலைகள் நடந்து வருகின்றன என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், வழக்கு நிலுவையில் இருக்கும் போதே தொடர்ந்து என்கவுண்டர்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஐபிஎல் மார்ச் மாதத்தில் நடத்துவதால், மாணவர்களின் படிப்பு பாதிக்கும் என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், இது குறித்து மத்திய அரசுக்கு புகார் அனுப்பவும் என்று தீர்ப்பு.
காவல் நிலையத்தில் காவல்துறையினரால் ஒரு நபர் அடித்துக் கொல்லப் பட்டுள்ளார் என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், அரசு நியமித்துள்ள ஆர்.டி.ஓ விசாரணையை நம்பி, பொது நல வழக்கை தள்ளுபடி செய்யும் உயர்நீதிமன்றம்.

அணு உலை நஷ்ட ஈடு மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப் படுத்துவதற்கு முன் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், அரசுக்கு நோட்டீஸ் கூட வழங்காமல் வழக்கை தள்ளுபடி செய்யும் சென்னை உயர்நீதிமன்றம்.

நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தா இந்தியாவில் இருக்கும் போது அவனை கைது செய்ய வேண்டும் என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், பத்திரமாக டக்ளஸ் இலங்கைக்கு திரும்பிச் செல்லும் வரை, வழக்கை தள்ளி வைத்து விட்டு, இலங்கை சென்றவுடன், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் ஒரு தலைமை நீதிபதி.

அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு  வண்டி தள்ளுபவர்கள் திடீரென்று ஒரே நாளில் 75 லட்ச ரூபாய் கட்டுகிறார்கள். அது ஊழல் செய்து சம்பாதித்த சொத்தாக இருக்கும் அதன் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்தால் விசாரணை இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால், அவர்கள் மூன்று பேரும் அந்த மனையை “கை மாற்றி“ விட்டு விட்டதால் அவர்கள் மீது விசாரணை நடத்த எவ்வித முகாந்திரமும் இல்லை என்று தீர்ப்பு கூறும் ஒரு நீதிபதி.

பள்ளிக் கட்டணத்தை சீரைமைக்க அமைக்கப் பட்ட கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்க தடை விதிக்கக் கோரி மெட்ரிக்குலேஷன் பள்ளி நிர்வாகங்கள் நீதிமன்றத்தை அணுகிய வழக்கில், மாணவர்கள் சார்பில் ஒரு பொது நல விரும்பி, அந்த வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டி அணுகிய போது, கோவிந்தராஜன் கமிட்டி வருவதற்கு முன்பு எப்படி பீஸ் கட்டினீர்கள் என்று கேட்கும் ஒரு பொறுப்பற்ற நீதிபதி.

இந்தச் சூழலில் தான் நாம் இருக்கிறோம். நமக்கு முன்னே இப்போது இருப்பது ஒரு சில வழிகள் தான்.

ஒன்று எது நடந்தாலும் கவலைப் படாமல் அமைதியாக நமது வேலையைப் பார்த்துக் கொண்டு இருப்பது

இரண்டு, கொள்ளையடிப்பவர்களோடு சேர்ந்து கொண்டு நாமும் நமது பங்குக்கு கொள்ளையடிப்பது.

இந்த அநியாயங்களை காணச் சகியாமல், அஷோக் குமார் போல தற்கொலை செய்து கொள்வது.

அல்லது, எது வந்தாலும் சரி. நான் கொண்ட கொள்கையில் இருந்து பின் வாங்க மாட்டேன். அநியாயங்களை எதிர்த்து தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பேன் என்று போராடுவது.

இதில் எது வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

இன்றைய தாராளமய பொருளாதார சூழலில், எந்த வழியிலாவது உடனடியாக பணக்காரனாக வேண்டும், ஊரை அடித்து உலையில் போட்டாவது நான் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏறத்தாழ 98 சதவிகித மக்களின் மனநிலை உள்ள சூழலில் எழுதுவதையும், நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, தொடர்ந்து போராடுவதையும் தவிர வேறு என்னதான் செய்வது என்று சவுக்குக்கு தெரியவில்லை. சவுக்கின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லையா என்றும் தெரியவில்லை. நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
 
---சேயன்னா மூனா 

1 கருத்து:

  1. மிக மிக அருமையான பதிவு
    தாங்கள் குறிப்பிட்டுள்ள நான்கு வழிகளில்
    பெரும்பாலோர் தன் வழியில் தான் போய்க்கொண்டிருப்பதையும்
    கொஞ்சம் தெளிவானவன் பங்குபெற்றுக் கொண்டு நகர்தலையும்தான்
    செய்து கொண்டிருக்கிறார்கள்
    அதனால்தான் நாடு நாசமாகிக் கொண்டிருக்கிறது
    சிந்திக்கத் தூண்டும் அருமையான பதிவு
    பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு