Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

பி.எட். படிப்பில் சேர 11-ந் தேதி(நாளை) முதல் விண்ணப்பம்


தமிழ்நாட்டில் 2 கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்பட 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும், 650-க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகளும் இருக்கின்றன. அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் 2095 பி.எட். இடங்களும், தனியார் கல்லூரிகளில் ஏறத்தாழ 65 ஆயிரம் சீட்டுகளும் உள்ளன.
அரசு மற்றும் உதவி கல்லூரிகளில் உள்ள இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் பொது கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்படும். தனியார் கல்லூரிகள் விருப்பப்பட்டு ஒப்படைக்கும் இடங்களையும் கவுன் சிலிங் மூலமாகவே நிரப்புகிறார்கள். வழக்கமாக பி.எட். மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு ஜுலை மாதம் வெளியிடப்பட்டு உடனடியாக விண்ணப்ப படிவங்களும் கொடுக்கப்பட்டுவிடும்.

ஆனால், இந்த ஆண்டு அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியான பின்னரும் பி.எட். படிப்புக்கான அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், பி.எட். மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை கல்லூரி கல்வி இயக்ககம் நேற்று வெளியிட்டது.

இதற்கான விண்ணப்ப படிவம் 11-ந் தேதி (சனிக்கிழமை) முதல் 18-ந்தேதி வரை ஒரு வார காலம் வழங்கப்பட உள்ளது.
சென்னையில் திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்திலும், சைதாப்பேட்டையில் உள்ள கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்திலும் விண்ணப்பங்கள் கிடைக்கும்.

மேலும், ஒரத்தநாடு, குமாரப்பாளையம், புதுக்கோட்டை, கோவை, வேலூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளிலும், உதவி பெறும் கல்லூரிகளான சேலம் பேர்லேண்ட்ஸ் ஸ்ரீ சாரதா, காந்திகிராமம் லட்சுமி, மதுரை தியாகராஜர், தூத்துக்குடி வ.உ.சி., பாளையங்கோட்டை இக்னேஷியஸ், திருவட்டாறு என்.வி.கே.எஸ்.டி. ஆகிய கல்வியியல் கல்லூரிகளிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்ப கட்டணம் ரூ.300. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ரூ.175 மட்டும். விண்ணப்ப கட்டணத்தை பணமாகவோ, டிமாண்ட் டிராப்டாகவோ (செயலாளர், தமிழ்நாடு பி.எட். அட்மிஷன், சென்னை-5 என்ற பெயரில்) மேற்கண்ட கல்லூரிகளில் சமர்ப்பித்து விண்ணப்பத்தை வாங்கலாம்.
எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் விண்ணப்பம் வாங்கச்செல்லும்போது தங்கள் அட்டஸ்டேஷன் செய்யப்பட்ட சாதி சான்றிதழ் நகலை எடுத்துச்செல்ல வேண்டும். சுதந்திர தினநாள் நீங்கலாக மற்ற அனைத்து நாட்களிலும் (சனி, ஞாயிறு உட்பட) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 18-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் டி.செந்தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு முதல்முறையாக தனியார் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் கமிட்டி இந்த கட்டணத்தை நிர்ணயம் செய்தது. அதன்படி, தனியார் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு கல்விக்கட்டணமாக ரூ.41,500-ம், தர அங்கீகாரம் பெற்றிருந்தால் ரூ.46,500-ம் வசூலித்துக்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக