Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 8 ஜூலை, 2012

கேரளா உயர்நீதிமன்றம் ருசிகர தீர்ப்பு


"இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் சென்றால், அவர்களுக்கு பன்முறை எழுதும் (இம்போசிசன்) தண்டனையை, போக்குவரத்து போலீசார் வழங்குவதில் தவறில்லை. வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இதைச் செய்யலாம்' என, கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரளா, திருச்சூர் பூந்தோள் பகுதியைச் சேர்ந்த டாக்டர் பி.கே.லாசர் என்பவர், கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் (ஹெல்மெட்) அணியாமல் சென்றால், அவர்களிடம் பன்முறை எழுதும் (இம்போசிசன்) தண்டனையை போக்குவரத்து போலீசார் அளித்து வருகின்றனர். ஆனால், சட்டத்திலோ, போக்குவரத்து விதிகளிலோ இதுபோன்ற தண்டனை வழங்கலாம் என, குறிப்பிடப்படவில்லை.எனவே, பன்முறை எழுதுவது போன்ற சட்டத்தில் இல்லாத தண்டனைகளை போலீசார் வழங்குவது அதிகார எல்லையை மீறிய செயல் என, உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த மனு கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) மஞ்சுளா செல்லூர் மற்றும் நீதிபதி ஏ.எம்.ஷபீக் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் கூறுகையில், "இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிந்து தான் வாகனங்களை ஓட்ட வேண்டும். அதை மீறி, தலைக்கவசம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்காக, நான் இனிமேல் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்ட மாட்டேன் என்றும், மொபைல் போனில் பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்ட மாட்டேன் என்றும் பன்முறை எழுதச் சொல்லி தண்டனை அளிப்பதில் தவறில்லை.

இது போன்ற தண்டனைகள் ஒரு பகுதியில் மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் செயல்படுத்த வேண்டும். அப்போது தான் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து பலருக்கும் தெரிய வாய்ப்பு ஏற்படும். இது போன்ற செயல்களை போலீசார் ஏற்று செய்வதில் தவறேதும் இல்லை. இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக