Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 6 ஜூலை, 2012

உலகமே அறிந்த விஷயத்தை காலம்கடந்து வெளியிட்ட நய்யார்

பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்துக்கு முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் ஆதரவு தெரிவித்ததாக பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் தனது சுயசரிதை நூலில் தெரிவித்துள்ளார்.

 விரைவில் வெளிவரவுள்ள "பியாண்ட் தி லைன்ஸ்' என்ற தனது சுயசரிதை நூலில் குல்தீப் நய்யார் தெரிவித்துள்ளதாவது: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அப்போது பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ், அதற்கு மறைமுக ஆதரவு தெரிவித்தார். கரசேவகர்கள் மசூதியை இடிக்க ஆரம்பித்தபோது, தனது வீட்டில் உள்ள பூஜை அறையில் அமர்ந்த நரசிம்மராவ், மசூதி முழுமையாக இடிக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்த பின்புதான் பூஜையை முடித்துக் கொண்டார். மறைந்த சோஷலிஸ்ட் தலைவர் மதுலிமாயே இது குறித்து என்னிடம் தெரிவித்தார்.
 பூஜையில் இருந்த நரசிம்மராவின் காதில் மசூதி இடிக்கப்பட்ட தகவலை அவரின் உதவியாளர் தெரிவித்தவுடன் நரசிம்மராவ் எழுந்துவிட்டார் என்று மதுலிமாயே என்னிடம் தெரிவித்தார் என்று குல்தீப் நய்யார் எழுதியுள்ளார்.
 இது தொடர்பான விவரங்கள் அவரது நூலில் "நரசிம்மராவின் அரசு' என்ற துணைத் தலைப்பின் கீழ் இடம்பெற்றுள்ளது.
 நடவடிக்கை எடுக்கவில்லை: மசூதி இடிக்கப்படுவதைத் தடுப்பதற்கு நரசிம்மராவ் முயற்சிக்கவில்லை என்று தனது நூலில் குல்தீப் நய்யார் குற்றம்சாட்டியுள்ளார்.



இது குறித்து அவர் எழுதியுள்ளது: மசூதி இடிப்புச் சம்பவத்துக்குப் பின், நாடெங்கும் கலவரம் ஏற்பட்ட சூழலில் மூத்த பத்திரிகையாளர்கள் சிலரை அழைத்த நரசிம்மராவ், ""மசூதி இடிக்கப்பட்டது எனக்கு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. இதை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங் (மசூதி இடிக்கப்படுவதைத் தடுக்காமல்) என்னை ஏமாற்றிவிட்டார்'' என்று தெரிவித்தார்.
 அவரிடம் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இரவோடு இரவாக சிறிய கோயில் கட்டப்பட்டுள்ளது. கல்யாண் சிங்கின் அரசை கலைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் இது எப்படி சாத்தியமாயிற்று என்று பத்திரிகையாளர்கள் கேட்டோம்.
 அதற்கு நரசிம்மராவ், ""மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஒரு பிரிவை விமானம் மூலம் லக்னோவுக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க முடியவில்லை'' என்றார்.
 அயோத்தியில் இருந்த மத்திய அரசுப் படைகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கும் நரசிம்மராவ் சரியான பதிலை அளிக்கவில்லை. ஆனால், அங்கு கட்டப்பட்ட கோயிலை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
 மசூதி இடிப்புச் சம்பவத்துக்கு நரசிம்மராவ் அரசுதான் பொறுப்பு. மசூதி இடிக்கப்படும் எனத் தெளிவாகத் தெரிந்தபோதும், அவர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டார்.
 படுகொலை: உத்தரப் பிரதேசத்தில் கல்யாண் சிங் தலைமையிலான பாஜக மாநில அரசு, மசூதியை இடிக்காமல் தடுப்போம் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த வாக்குறுதியை மீறிவிட்டது. பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தூண்டுதலால் ஆயிரக்கணக்கான கரசேவகர்கள் மசூதியை இடித்த சம்பவம் நமது நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு பட்டப்பகலில் நிகழ்த்தப்பட்ட படுகொலை என்று குல்தீப் நய்யார் கருத்து தெரிவித்துள்ளார்.
 காங்கிரஸில் உள்கட்சிப் பூசல்: நாட்டின் பல பகுதிகளில் காங்கிரஸ் தனது செல்வாக்கை இழந்திருந்தது. அக்கட்சியின் பல தலைவர்கள் சோனியாவை சந்தித்து கட்சியின் தலைவர் பதவியை ஏற்குமாறு வலியுறுத்தி வந்தனர். பாஜக அரசியல் செல்வாக்குப் பெற்றுவிடுமோ என சோனியா அச்சமடைந்தார். மதச்சார்பின்மைதான் இந்தியவின் முதுகெலும்பு என்பதை உறுதியாக நம்பிய சோனியா காந்தி, அரசியலில் இறங்க முடிவு செய்தார்.
 நரசிம்மராவ் மகன் மறுப்பு:÷குல்தீப் நய்யார் தெரிவித்த தகவலை முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் மகன் பி.வி.ரங்கா ராவ் மறுத்துள்ளார். ""இதை நம்பவும் முடியாது; ஏற்றுக்கொள்ளவும் முடியாது. எனது தந்தை அவ்வாறு செய்திருக்க வாய்ப்பே இல்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அவர் மிகவும் துயரத்துடன் இருந்தார். அவர் முஸ்லிம்கள் மீது மிகவும் அன்பு வைத்திருந்தார். மசூதி இடிப்பு நடைபெற்றிருக்கக் கூடாது என்று எங்களிடம் பலமுறை புலம்பியிருக்கிறார்'' என்றார் ரங்கா ராவ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக