Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 23 நவம்பர், 2013

பின்னலாடை ஏற்றுமதி அதிகரிப்பு:வளர்ச்சி பாதையில் தொழில் துறை

"கடந்த அக்., மாதம் மட்டும், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், 31 சதவீதம் அதிகரித்து, 1,190 மில்லியன் டாலரை எட்டியுள்ளது,'' என ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதிக்கு, அமெரிக்கா, ஐரோப்பா, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம் போன்ற பல்வேறு நாடுகள் சந்தைகளாக உள்ளன. நாட்டின் ஏற்றுமதியை மேம்படுத்த, பாரம்பரிய சந்தைகள் அல்லாத மற்ற நாடுகளிலும், புதிய சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு, அதற்கு நல்ல பலனும் கிடைத்து வருகிறது. இதனால், இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சியடைய துவங்கியுள்ளது.

ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கை:ஜவுளித்துறைக்கு, மத்திய அரசின் உதவியுடன் புதிய சந்தை வாய்ப்புகள் பெறப்பட்டுள்ளன. பாரம்பரிய சந்தைகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளும் நீங்கியுள்ளன. இதனால், இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சியடையத் துவங்கியுள்ளது.கடந்த அக்., மாதம், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் 1,190 மில்லியன் டாலரை எட்டியுள்ளது; இது, கடந்த நிதியாண்டில், இதே காலத்தை விட, 30.91 சதவீதம் அதிகம். நாட்டின் ஏற்றுமதிக்கு டாலர் மதிப்பு உயர்வும் கைகொடுத்து வருகிறது. கடந்த ஏப்., முதல் அக்., வரையிலான காலத்தில், டாலர் மதிப்பு 15.5 சதவீதம் அளவில் உயர்ந்து, ஏற்றுமதிக்கு சாதகமாக உள்ளது. இக்காலத்தில், ஆயத்த ஆடை ஏற்றுமதி, கடந்த ஆண்டின் இதே காலத்தைவிட, 26.18 சதவீதம் அதிகரித்து, ரூ.49,096 கோடியை எட்டியுள்ளது.

பொருளாதார நெருக்கடி நீங்கியுள்ளதால், அமெரிக்காவுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்திலும், சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஜன., முதல் செப்., வரையிலான மாதங்களில், அமெரிக்காவின் ஆடை இறக்குமதியில் இந்தியாவின் பங்களிப்பு, 5 சதவீதம் உயர்ந்துள்ளது.மிக பெரிய வர்த்தக நாடான ஐரோப்பாவின் ஆடை இறக்குமதி மதிப்பு 47.8 பில்லியன் டாலர் அளவில் மாற்றம் இன்றியே காணப்படுகிறது. ஆயினும், அந்நாட்டுக்கான இந்தியாவின் ஏற்றுமதி, கடந்த ஜன., முதல் ஜூலை வரையிலான காலத்தில் ஒரு சதவீதம் அதிகரித்து, 3.4 பில்லியன் டாலரை தொட்டுள்ளது.

ஆடை ஏற்றுமதியில் போட்டி நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு சலுகைகளை பயன்படுத்தி, போட்டி நாடுகள் உலகளாவிய சந்தைகளை பலப்படுத்தி வருகின்றன. அதேநேரம், பல்வேறு பிரச்னைகளால், இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளன. ஆயத்த ஆடை துறையின் ஏற்றுமதி வளர்ச்சியடைய, மத்திய ரிசர்வ் வங்கி, தனது நிதிக்கொள்கையில், ஜவுளித்துறைக்கு தனி பிரிவு ஏற்படுத்த, வேண்டும்; ப்ரீ பேக்கிங் கிரெடிட், பேக்கிங் கிரெடிட்களை 7.5 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும்.இவ்வாறு, சக்திவேல் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக