Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 28 அக்டோபர், 2013

சிறைச்சாலையில் சிந்தனையாளர்கள்! ----- புலவர் அ.ஹிலால் முஸ்தபா

அண்ணன் M.M.P(எம்.எம்.பீர் முஹம்மது சாஹிபு)  , ஒரு கூட்டத்தில் பேசி விட்டு திரும்புகிறார். அந்த நேரத்தில் தமிழகத்து போலீசார், அவரை கைது செய்து அழைத்து சென்றனர். இது நடந்தது 1965 செப்டம்பர் மாதம் 17 அன்று.

அந்தக் கூட்டத்தில், இந்தியச் சட்டத்துக்கு விரோதமாகவோ , கலவரங்களைத் தூண்டி விடும் கொடூரமாகவோ அல்லது, பிரமுகர்களைக் கொச்சைப் படுத்தி அவமானகரமாகவோ M.M.P அண்ணன் பேசி விட்டார் எனக் கருத வேண்டாம். இப்படியெல்லாம் முறையற்ற, ஒழுங்கு நெறிக்குத் தப்பிப் போன, சட்டத்திற்கு எதிரான எந்தப் பேச்சுகளையும் M.M.P அண்ணன் தன் வாழ்நாளில் பேசியதே கிடையாது. ஆனாலும் கைதானார்.

அந்தக் கூட்டம் முஸ்லிம் லீகின் கொள்கைப் பிரச்சாரக் கூட்டம் அன்று. மீலாது பெருவிழா மேடையுமன்று. இஸ்லாமிய இலக்கிய மன்றமுமன்று.

இந்திய பாகிஸ்தான் போர் நடந்த காலக்கட்டம் அது. பண்டித ஜவஹர்லால் நேரு, தேசிய ஒருமைப்பாட்டுக் குழு என்ற ஒரு அமைப்பை இந்தியப் பாராளுமன்றத்தில் வெளியிட்டு அதன் தலைவராகக் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களை நியமித்தார்.

இந்தியா முழுவதும் தேச ஒற்றுமை , தேச பாதுகாப்புக்கு மக்கள் ஆற்ற வேண்டிய பணி, இந்திய மக்களிடையே உருவாகி இருக்கும் ஐக்கியத்திற்குக் குந்தகம் விளைவிக்காத நடைமுறைகள் பற்றி எல்லாம் பிரச்சாரம் செய்ய வேண்டியதுதான் இந்தக் குழுவின் பணி.

இது மாதிரி நெல்லையில், காயிதே மில்லத்தின் உத்தரவின் பேரில் இந்தப் பிரச்சாரப் பணிக் கூட்டத்தில் பேசி விட்டு திரும்பிய M.M.P அண்ணனைத்தான் தமிழ் நாடு காவல்துறை கைது செய்தது.

1965 செப். 17 அன்று குளச்சலில் இருந்த ஷாஹுல் ஹமீது சாஹிப், பள்ளிவாயிலில் தொழுது விட்டு வெளியே வருகிறார். அந்த இடத்திலேயே காவல்துறை வந்து நின்று, அவரது இல்லத்திற்குக் கூட செல்ல அனுமதிக்காமல் காவல்துறை வேனில் ஏற்றிச் சென்றது. இந்த ஷாஹுல் ஹமீது சாஹிப்தான் பிந்தைய நாள்களில் சென்னைப் புதுக்கல்லூரி தமிழ்த் துறையில் சேவையாற்றிய குளச்சல் ஷாஹுல் ஹமீது சாஹிப்.

குளச்சலில் இந்தக் கைது அன்று பரபரப்பானது. காவல்துறை ஷாஹுல் ஹமீது சாஹிபை எங்கு அழைத்துச் சென்றது என்ற விவரம் தெரியவில்லை. ஷாஹுல் ஹமீது சாஹிபிற்கு திருமணம் ஆகி நான்கு மாதம் பத்து நாள்தான் ஆகி இருந்தது. இந்த நிகழ்வை நினைவுகூரும் பொழுது ஒருமுறை பேரா. ஷாஹுல் ஹமீது சாஹிப், “என் மனைவியை முதன்முதலில் பிரிந்தது அன்றுதான்” என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

குளச்சல் இயக்கத்தார்கள், நண்பர்கள், இல்லத்தார்கள் கைது செய்து காவல்துறை எங்கே அழைத்துச் செல்கிறது என்று தேட ஆரம்பித்தார்கள். காவல்துறை இவர்களுக்குக் கண்ணாமூச்சி காட்டிவிட்டு இரணியல் காவல் நிலையத்தில் ரகசியமாக கொண்டு வைத்து விட்டார்கள்.

இந்தக் கைதுக்கு காவல்துறைக்கும் காரணம் தெரியவில்லை. ஷாஹுல் ஹமீது சாஹிபுக்கும் காரணம் புரியவில்லை. ஆனால் இரவு காவல் நிலையத்தில் கைதியாக அடைக்கப் பட்டுவிட்டார்.

மறுநாள் காலையில் போலீசார் ஷாஹுல் ஹமீது சாஹிபிடம் சொன்னார்கள்.

“DIR ( Defence of India Rule) – இந்திய பாதுகாப்பு சட்டப்படி நீங்கள் கைது செய்யப் பட்டு இருக்கிறீர்கள். உங்களை வேலூர் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப் போகிறோம்” என்றார்கள்.

ஷாஹுல் ஹமீது சாஹிபிற்கு அப்பொழுதுதான் விவரம் புரிகிறது.

வேலூருக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கே M.M.P அண்ணனும் இதே சட்டப் பிரிவில் கைதாகி இருந்தார். திருச்சி A.M. யூசுப் சாஹிபும் இதே சட்டப் பிரிவில் கைதாகி இருந்தார்.

இந்த இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி ஒருவரை கைது செய்ய சம்மன் தேவை இல்லை. கைதானவர் நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாது. கைதானவரை ஆறு மாதங்கள் வரை சிறையில் அடைத்து வைக்கலாம். இந்தச் சட்ட விதி இப்படித்தான் அமைக்கப் பட்டு இருந்தது.

இதில் ஒரு தந்திரமும் இருந்தது. ஆறாவது மாதத்தில் கைதியை விடுதலை செய்யும் பொழுது அவர் அந்த ஜெயில் வாசலைத் தாண்டி வெளியில் வந்தவுடன் மீண்டும் உடனடியே கைது செய்து ஆறு மாதம் உள்ளே வைத்து விடலாம்.

இந்தச் சட்டம் இயற்றப் பட்டதில் இருந்து , பொதுவுடைமைக் கட்சிக்காரர்கள் மீதுதான் பாய்ந்துக் கொண்டு இருந்தது. அப்போதுதான் முதல் முறையாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் மீதும் பாய்ந்து இருக்கிறது.

வேலூர் சிறைச்சாலையில் M.M.P அண்ணனுக்கு 17 ஆம் எண் அறை. குளச்சல் ஷாஹுல் ஹமீது சாஹிபிற்கு அறை எண் 18. திருச்சி யூசுப் சாஹிபிற்கு அறை எண் 16 ஒதுக்கப் பட்டிருந்தன. யூசுப் சாஹிபின் கைது எண் 151, M.M.P அண்ணனுக்கு 152, குளச்சல் ஷாஹுல் ஹமீது சாஹிபிற்கு 153. அதாவது, ஒட்டுமொத்த இந்தியாவிலும் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தில் 151 ஆவது கைதி A.M. யூசுப் சாஹிப். 152 கைதி M .M.P , 153 கைதி குளச்சல் ஷாஹுல் ஹமீது.

இவர்களுக்குப் பக்கத்தில் பொதுவுடமைக்காரர்கள் அடைக்கப் பட்டு இருந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தோழர் P. ராமமூர்த்தி, தோழர் கோவை ஈஸ்வரன் போன்றோர்.

ஆனால் ஜெயிலில் இவர்கள் சந்தித்து கொள்ளாதவாறு தடுப்பு செய்யப்பட்டு இருந்தது.

காலையில் ஆறு மணிக்குச் சிறை அறைக் கதவைத் திறப்பார்கள். குறிப்பிட்ட அந்த பகுதிக்குள் அவர்கள் நடமாடிக் கொள்ளலாம். மாலை ஆறு மணிக்கு இவர்களை உள்ளனுப்பி அறைக் கதவைப் பூட்டி விடுவார்கள்.

இவர்களுக்குப் பணிபுரிய தேர்ந்தெடுக்கப் பட்ட சில கைதிகளை சிறைத்துறை ஏற்பாடு செய்து இருந்தது.

சிறையில் இருந்த முஸ்லிம் லீகர்களாகிய இவர்களுக்கு உதவி செய்ய நாவித சமுதாயத்தைச் சார்ந்த துர்வாசர் என்பவர் வந்தார். அவர் நல்ல மனிதராம். குளச்சல் ஷாஹுல் ஹமீது இந்தத் தகவலைக் குறிப்பிட்டார்.

துர்வாசரை M.M.P அவர்கள், ஒருமுறை கூப்பிட்டு சொன்னாராம்.
“ஐயா உம் துர்வாசர் பெயரை மாற்றிக் கொள்ளும். முன்னால் உள்ள துர் –ஐத் தூக்கிப் போட்டு விட்டு திருவைச் சேர்த்துக் கொண்டு திருவாசர் ஆகிவிடும்” என்றாராம்

ஒரு நாள், இந்தத் துர்வாசர் மூலமாக , இவர்களுக்குத் தோழர் P.ராமமூர்த்தியிடமிருந்து ஒரு செய்தி வந்ததாம்.

“நீங்கள் கைதாகி இங்கிருப்பதைச் செய்தித்தாளில் படித்தேன். நாம் சந்தித்துக் கொள்ள வேண்டாம். நான் ஒரு செய்தியை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்” எனச் சொல்லி அனுப்பி இருக்கிறார்.

இந்தியப் பாதுகாப்பு சட்டம் எதற்காக? அதனுடைய சரத்துகள் என்ன? என்ற முழு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று பொதுவுடைமை இயக்கம், உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தது. அதற்கு உச்ச நீதிமன்றம், அந்த விதிகளை வெளியிட அரசுக்கு ஆணையிட்டுத் தீர்ப்புக் கூறியது.

இந்தத் தீர்ப்பு நகலின் ஒரு பிரதியைத் துர்வாசர் வழியே தோழர் ராமமூர்த்தி இவர்களுக்குக் கொடுத்து அனுப்பினார்.

அதில் , சிறைச் சாலைக்குள் இந்தக் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

தினம் ஒரு மருத்துவர் வந்து பரிசோதிக்க வேண்டும். இவர்கள் விரும்பிய உணவிற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும். சிகை அலங்காரங்கள் போன்றவற்றை செய்துக் கொள்ள வழி வகுக்க வேண்டும். ஆடைகளைத் துவைத்து தர ஏற்பாடு செய்து தர வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு புது ஆடை கொடுக்க வேண்டும் போன்ற விதிகள் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தன.

வேலூர் ஜெயிலர் வாசுதேவன் நாயர். தினம் ஒருமுறை இவர்களைச் சந்தித்து செல்வார். மிக நல்ல மனிதர். சிறைச் சூப்பிரண்டண்ட் ஜெகன்னாத முதலியார். இவரும் ஒரு அற்புதமான மனிதர். இப்படி இவர்களைப் பற்றி குளச்சல் ஷாஹுல் ஹமீது சாஹிப் குறிப்பிடுகிறார்.

ரமலான் மாதம் வந்துவிட்டது. சூப்பிரண்டண்ட் ஜெகன்னாத முதலியார் இவர்களைப் பார்க்க வருகிறார். முஸ்லிம் லீகின் மூவரும் சூப்பிரண்டண்டிடம் கோரிக்கை வைத்தனர்.

“ரமலான் மாதத்தில் எங்களுக்குச் சஹர் உணவிற்கு (சூரிய உதயத்திற்கு முன்னர்) ஏற்பாடு செய்ய வேண்டும். மாலையில் சூரிய அஸ்தமனத்திற்குப் பின் நோன்பு திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.இரவு எட்டு மணிக்கு மேல் தராவீஹ் தொழுவதற்கு ஆவன செய்ய வேண்டும்.” என கோரிக்கைகள் வைத்தார்கள்.

இவர்கள் வைத்த இந்தக் கோரிக்கைகளைச் சூப்பிரண்டண்ட் ஜெகன்னாத முதலியார் , தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்தார்.

தலைமைச் செயளாலரிடமிருந்து, நோன்பின் முப்பது தினங்களுக்கும் இந்த கோரிக்கைக்கு அனுமதி வழங்க உத்தரவு வந்து சேர்ந்தது.

ரமலான் மாதம் வேலூர் சிறைச்சாலையில் இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை எண்கள் 16,17,18 மட்டும் அதிகாலை 3 மணிக்குக் கதவுகள் திறக்கப் பட்டன. இரவு 9 மணிக்குத் தராவீஹ் தொழுகை முடிந்தபின் சிறைக் கதவுகள் மூடப்பட்டன.

ரமலான் மாதம் முழுவதும் வேலூர் சிறைச் சாலையில் சுவனத்து நிழல் சோபிதம் கொண்டு இருந்தது.

M.M.P. அண்ணன்,A.M. யூசுப் சாஹிப், குளச்சல் ஷாஹுல் ஹமீது ஆகிய மூவரும் கைதாகிய இரண்டு மாதங்களுக்குப் பின்னர், இதே சட்ட விதியில் திருச்சி A.M. ஹனீஃப் கைதாகி உள்ளே வந்து சேர்ந்தார்.

டெல்லி பாராளுமன்றத்தில் மேலவையிலும், மக்களவையிலும் தமிழகத்தின் இந்த நிகழ்வு குறித்து பேசப்பட்டது.

ராஜ கோபாலச்சாரியார்(ராஜாஜி) காங்கிரஸை விட்டு வெளியே வந்து சுதந்திரா கட்சியை நிறுவி அரசியல் செய்து கொண்டிருந்தார். இந்த சுதந்திரா கட்சியின் பொதுச் செயளாலர் S.S. மாரிச்சாமி மாநிலங்களவையில் இந்த கைது பற்றி வினா எழுப்பினார்.

மாநிலங்களவைக்கு மேற்கு வங்கத்தில் இருந்து வந்திருந்த தோழர் புபேஷ் குப்தாவும் கேள்வி எழுப்பினார். மக்களவையில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் வினா தொடுத்தார்கள்.

“தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவை பிரதமர் பண்டித நேரு அமைத்து , அதற்கு என்னைத் தலைவராகப் போட்டு இருக்கிறார். இந்த ஒருமைப்பாட்டு விளக்கப் பொதுக் கூட்டம் நெல்லையில் நடந்தது. எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த M.M.பீர் முஹம்மது என்பவர் அந்தக் கூட்டத்தில் பேசிவிட்டு மேடையை விட்டு இறங்கிய உடன் தமிழ்நாடு காவல்துறையினர் , இந்திய பாதுகாப்புச் சட்டவிதியில் கைது செய்து இருக்கிறார்கள்.இந்திய ஒருமைப்பாட்டுக் குழுவுக்கு நான் தலைவன். , இந்திய பாதுகாப்புச் சட்டத்தில் எங்கள் இயக்கத் தோழர் கைதாகிறார். இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது?” என்று காயிதே மில்லத் மக்களவையில் கேட்டார்கள்.

அப்போது இந்திய உள்துறை அமைச்சராகக் குல்சாரிலால் நந்தா இருந்தார். (இவர்தான் பண்டித நேரு மரணித்தவுடன் தற்காலிகப் பிரதமராகச் சில நாள் இருந்தார். அதன் பின்னர் லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனார். இவரை அடுத்துத்தான் இந்திரா காந்தி பிரதமாராகப் பதவி ஏற்றார்).

மேலவையில் தோழர் புபேஷ் குப்தா, S.S. மாரிச்சாமி , மக்களவையில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இவர்களுடைய வினாக்களுக்கு எல்லாம் சேர்த்து ஒரே ஒரு பதில்தான் பாராளுமன்றத்தில் வைக்கப் பட்டது.

“எங்கோ ஒரு தவறு எப்படியோ நடந்து விட்டது”. என்பதுதான்.

வேலூர் சிறைச் சாலைக்கு , வேலூர் ஹபீபுல்லாஹ் சாஹிப் வாரம் வாரம் வந்து, சிறைச்சாலைக்குள்ளிருக்கும் நமது பெருமைக்குரியவர்களைச் சந்தித்து செல்வார்.

சிறை விதிகளின் படி கைதிகள் தங்களைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி தரலாம் என்று பட்டியல் தர வேண்டும். அந்த அடிப்படையில்தான் சிறைக்கு வெளியில் இருப்பவர்கள் சந்திக்க அனுமதி வழங்கப்படும்.

ஒருமுறை , இவர்களைச் சந்திக்க லெப்பைக் குடிக்காடு ஜமாலி சாஹிப் (இவர் முஸ்லிம் லீகின் சென்னை ராஜதானி சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார்) வேலூர் சிறைக்கு வந்தார். ஆனால் A.M . யூசுப் சாஹிப் இவர் பெயரைக் குறித்துக் கொடுக்காததினால் ஜமாலி சாஹிப் தடுக்கப் பட்டார். இவர்களைப் பாராமலேயே ஜமாலி சாஹிப் திரும்பிச் செல்ல நேர்ந்தது.

1966 ஜனவரி 25 ஆம் தேதி, இவர்களுக்கு வேலூர் சிறைச்சாலையிலிருந்து விடுதலைக் கிடைத்தது.

சென்னையிலிருந்து காயிதே மில்லத் , சென்னை மேயராக இருந்த Dr.ஹபீபுல்லாஹ் பேக் , சென்னை மாநகராட்சி துணை மேயராக இருந்த சிலார் மியான் , வேலூர் ஹபீபுல்லாஹ் ஆகியோர் வேலூர் சிறைச்சாலைக்கு வந்தார்கள். சிறையில் இருந்தவர்கள் , சிறைக்கு வெளியே விடுதலையாகி அனுப்பப்பட்டார்கள்.

அழைத்து செல்ல வந்திருந்த காயிதே மில்லத்தைச் சிறையைச் சுற்றிப் பார்க்க அழைத்தார் ஜெயில் சூப்பிர்ண்டன்ட் ஜகன்னாத முதலியார். காயிதே மில்லத்தும் சம்மதித்துச் சென்றார்கள். ஒரு ஜீப்பில் அமர வைத்து உள்ளே சுற்றிக் காட்டினார். அப்பொழுது காயிதே மில்லத், ஜெயில் சூப்பிரண்டன்டிடம் கேட்டார்களாம்,

“எங்கள் இயக்கத்தவர்கள் உள்ளே எப்படி நடந்துக் கொண்டார்கள்” என்று .

”இதுவரை உள்ள என் பணிக்காலத்தில் இப்படிபட்ட நபர்களை நான் சந்தித்ததே இல்லை, இவர்களை அரசு ஏன் கைது செய்தது என இந்த நிமிடம் வரை எனக்குப் புரியவில்லை” என்று சூப்பிரண்டன்ட், வாக்குமூலம் தந்தாராம்.

ஜெயிலைச் சுற்றிப் பார்த்துவிட்டு அங்கு ஏற்கனவே வெளியில் நின்றிருந்த M.M.P. அண்ணன் A.M. யூசுப் சாஹிப், குளச்சல் ஷாஹுல் ஹமீது சாஹிப், A.M. ஹனீஃப் சாஹிப் ஆகியோர் காயிதே மில்லத்திற்கு மாலைப் போட்டு வரவேற்றார்களாம்.

இந்தச் சிறை அனுபவங்களைப் பேரா. குளச்சல் ஷாஹுல் ஹமீது சாஹிப் சொல்லிக் காட்டும் பொழுது ஒரு காப்பிய ரசனை நமக்கு ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக