Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 2 அக்டோபர், 2013

நபிகள் நாயகத்துக்குப் பின் வந்த நான்கு கலிபாக்கள் வாழ்ந்து காட்டிய நேர்மையான எளிமையான வாழ்க்கையை தானும் வாழ முயன்று வெற்றி கண்டவர் காயிதே மில்லத் :சேயன் ஹமீது


இன்று லுஹர் தொழுகைக்குப் பின் பள்ளியில் என்னைச் சந்தித்த நண்பர் ஒருவர் காமராஜரையும், ப. ஜீவானந்தம் அவர்களையும் சிறந்த அரசியல் தலைவர் என்று சொல்லி இருக்கீங்க, ஏன் காயிதே மில்லத் இல்லையா? எனக் கேட்டார்.
நான் சொன்னேன், "நான் எப்பவும் காயிதே மில்லத் அவர்களை வெறும் அரசியல் தலைவராக மட்டும் பார்ப்பதில்லை, அவர் அரசியலையும் மீறி ஒரு ஆன்மீகத் தலைவர். எப்போதெல்லாம் உலகில் அரசியலும் ஆன்மீகமும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல செர்ந்திருந்ததோ அப்பவெல்லாம் அரசியலில் ஒழுக்க விழுமியங்கள் கோலோச்சின. 

காயிதே மில்லத் அவர்கள் மிக உயர்வான ஆன்மீக அரசியல் வாதி!
"தொடர்ச்சியாக தமிழர்கள் மறக்கக் கூடாத மாமனிதர்கள் பட்டியல் ஒன்று விருப்பு வெறுப்பின்றித் தயாரிக்கப்பட்டால், கட்டாயம் அப்பட்டியலில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பெயர் இடம்பெற்றே தீரும்.
ஒரு தமிழனாக, ஒரு முஸ்லீமாக, ஒரு இந்தியனாக, ஒரு தலைவனாக, மாந்தநேயம் உள்ள மனிதனாக எப்படி வாழ வேண்டும் என்ற இலக்கணங்களைத் தனக்குத் தானே வகுத்துக் கொண்டு, அந்த இலக்கணங்களை விட்டு விலகாத இலக்கியமாகத் தானே வாழந்துகாட்டிய பெருமகன் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களில் ஒருவராக 1948 ஆம் ஆண்டு அவர் நியமிக்கப்பட்டார்.

14.9.49 அன்று அரசியல் நிர்ணய சபை கூடி இந்தியாவின் தேசிய மொழி பற்றி விவாதித்தபோது இந்தியாவின் தேசிய மொழியாக இருக்கும் தகுதி தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு என ஆணித்தரமாக எடுத்துரைத்தார். வரலாற்றின் பொன்னேட்டில் அன்று அவர் பொறித்துச் சென்ற வைர வரிகள் இவை:
“ஒரு மொழி இந்திய மொழியாக மட்டும் இருந்தால் போதாது. அம்மொழி இந்நாட்டின் பழமையான மொழியாகவும் இருக்க வேண்டும். அத்தகைய மொழியையே இந்நாட்டின் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்து இங்கே முன்வைக்கப்பட்டது.

அக்கருத்தை ஏற்று அரசியல் நிர்ணய சபை தேசிய மொழி பற்றிய முடிவை எடுக்குமானால், ஒரு உண்மையை இச்சபை முன்பு துணிவோடு கூற விரும்புகிறேன். இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்தப் புதை பொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். இது எனது தாய் மொழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன்.

அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்”
பொதுவாழ்வில் நேர்மைக்கு நிரூபணமாய் விளங்கிய காயிதே மில்லத் அவர்கள் சொந்த வாழ்வில் எளிமைக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தார்.
குரோம்பேட்டையில் ஒரு சிறிய வீடு. வந்தவர்களை அமரவைக்க போதுமான அறையணிகள் இருக்காது. குரோம்பேட்டையில் இருந்து மின்சார ரயிலில் புறப்பட்டு, கடற்கரை ரயில் நிலையத்தில் இறங்கி, ரிக் ஷாவில் ஏறி மண்ணடி கட்சி அலுவலகம் செல்வார்.

அவருக்கு ஒரு காரை வாங்கித் தரப் பலரும் முயன்றனர். அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு முறை மலேசியா சென்று ஒரு அன்பர் வீட்டில் தங்கியிருந்தபோது, அவர் காயிதே மில்லத்திடம் ஒரு உதவி கேட்டார். “ஐயா என்னிடம் வெளிநாட்டுக் கார் உள்ளது. அதைத் தங்கள் வீட்டில் நிறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டும். நான் சென்னை வரும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும் என்பதால் இந்த உதவியைக் கோருகிறேன்” என்றார். அதற்கு என் வீட்டில் கார் கொட்டகை இல்லையே என்றார் காயிதே மில்லத். “கார் கொட்டகையை நான் கட்டித் தருகிறேன்” என்றார் மலேசிய அன்பர். நேரடியாக காரை பரிசளித்தால் காயிதே மில்லத் வாங்கிக் கொள்ள மறுத்து விடுவார் என்பதற்காகவே அவர் சுற்றி வளைத்துப் பேசுகிறார் என்பதைப் புரிந்து கொண்ட காயிதே மில்லத் கண்டிப்புடன் அவரது வேண்டுகோளை நிராகரித்து விட்டார்.

கேரளாவில் ஒருமுறை அங்குள்ள கட்சிக்காரர்கள் ஒரு காரை வாங்கி சாவியை காயிதே மில்லத் அவர்களின் கையிலேயே கொடுத்து விட்டார்கள். ஆனால் காயிதே மில்லத் அங்குள்ள இஸ்லாமிய கல்லூரி ஒன்றின் உபயோகத்திற்கு அந்தக் காரை அங்கேயே கொடுத்து விட்டார்.

ஒருமுறை கட்சி அலுவலகத்துக்கு வந்த காயிதே மில்லத் அவர்கள் அங்கிருந்த அலுவலகப் பொறுப்பாளரிடம் ஒரு உறையைக் கொடுத்து பையில் இருந்து இரண்டு அணாவையும் கொடுத்து உரிய தபால் தலைகளை ஒட்டி அஞ்சலில் சேர்த்து விடுமாறு கூறி இருக்கிறார். உடனே அலுவலகப் பொறுப்பாளர் இதனை அலுவலகச் செலவிலேயே அனுப்பலாமே எனக் கேட்டிருக்கிறார். அதற்கு காயிதே மில்லத் அவர்கள் இது எனது சகோதரருக்கு எழுதுகின்ற கடிதமாகையால் அலுவலகப் பணத்தை இதற்கு செலவழிக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். அலுவலகப் பொறுப்பாளர் உடனே, தலைவரின் சகோதரரும் கட்சிப் பொறுப்பில் இருப்பவர்தானே, எனவே கட்சிப் பணத்தை செலவு செய்வதில் என்ன தவறு எனக் கேட்டிருக்கிறார். உடனே காயிதே மில்லத் அவர்கள், இந்தக் கடிதத்தில் நான் கட்சி விஷயங்களை எழுதவில்லை. குடும்ப விஷயங்களை எழுதி இருக்கிறேன். எனவே கட்சிப் பணத்தை இதற்குச் செலவழிக்கக் கூடாது. நான் கொடுத்த இரண்டானாவை அஞ்சல் தலைகளை ஒட்டி அனுப்பி விடுங்கள் என கண்டிப்புடன் கூறிவிட்டார்.

இதுபோல் காயிதே மில்லத் அவர்களின் வாழ்வில் எத்தனையோ நிகழ்வுகள். நபிகள் நாயகத்துக்குப் பின் வந்த நான்கு கலிபாக்கள் வாழ்ந்து காட்டிய நேர்மையான எளிமையான வாழ்க்கையை தானும் வாழ முயன்று வெற்றி கண்டவர் காயிதே மில்லத் அவர்கள்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக